ஆணுக்கிங்கே* *பெண்* *இளைப்பில்லை* *காண்*!

 *ஆணுக்கிங்கே* *பெண்* *இளைப்பில்லை* *காண்*! 

"பட்டங்கள் ஆள்வதும் , சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்" என்ற மகாகவியின் கனவுகளை நனவாக்கியதோடு மட்டுமல்லாமல் .. 'சாதமும் படைப்பதோடு . சாதனைகள் பலவும் படைப்போம்' என்று உலகிற்கு உரத்த குரலில் சொல்லியிருக்கிறார்கள் நமது இந்திய கிரிக்கெட் வீராங்கனைகள்.

அவர்களை வானதிரக் கைத்தட்டிப் பாராட்டுவோம்!

1983ல் கபில்தேவ் , 2011ல் எம்.எஸ்.தோனிக்குப் பிறகு 2025ல் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய பெண்கள் அணி ஒரு நாள் உலகக் கோப்பையைக் கைப்பற்றியிருக்கிறது.

பல வருட போராட்டங்கள் , கேலிப் பேச்சுகள் அவமானங்களையெல்லாம் துடைத்துத்

தூர  எறிந்திருக்கிறது இந்த வெற்றி. 

இரண்டு முறை இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றும் கோப்பையை வெல்ல முடியாமல் போன வரலாற்றை மாற்றி "எங்களுக்குத்தான் இந்த வருடக் கோப்பை" என்று போட்டியின் தொடக்கத்தில் உறுதியுடன் சொன்ன கேப்டன் ஹர்மன் பிரித் கவுரின் நம்பிக்கையை அவரது படையினர் நனவாக்கிய அந்த நொடி இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் வாழ்வில் மறக்க முடியாத ஆனந்த நொடி .

மும்பை மைதானம் ஆனந்தக் கண்ணீரால் நிரம்பிய தருணம் எத்தனை அற்புதமானது ?

ஆரம்பத்தில் இரண்டு தொடர் வெற்றிகளோடு தொடங்கிய இந்திய அணி,அடுத்துத் தொடர்ந்து மூன்று தோல்விகளை அதுவும் நூலிழையில் தழுவிய போது .. அரையிறுதிக்கே இவர்கள் தேறுவார்களா என்ற சந்தேகம் ..அவநம்பிக்கை ஏற்பட்டது உண்மைதான்.

ஆனால் .. ஃபீனிக்ஸ் பறவை போல் துள்ளி எழுந்து .. ஸ்ருதி மந் தானா, பிரித்திகா ராவல் ஆகியோரின் அதிரடித் துவக்கத்தால் 330 ரன்கள் குவித்து நியூசிலாந்தை வென்று அரை இறுதிக்குச் சென்ற

மகிழ்ச்சிக்கு அப்போதே பேரிடி. ஆம்!

அதிரடி தொடக்க வீரர் பிரத்திகா ராவலுக்கு அடி

வலிமையான ஆஸ்திரேலியாவிற்கு எதிராக அதிலும் 338 ரன்களை விரட்டி  வெல்வது சாத்தியமில்லை என்று நினைத்த போது ..

ஜெமிமா ரோட்ரிக்ஸ், கேப்டன் கவுர் ,தீப்தி சர்மா .. கூட்டணி வெல்லவே முடியாத கங்காருவை வென்று கிரிக்கெட் உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்தனர்.

'பெண்ணை நம்புஅதிலும் என்னை நம்பு'என்று சொல்லி அடித்த ஷாபாலி சர்மாவும், மட்டையையும் சுழற்றி பந்தையும் சுழற்றி தென் அமெரிக்காவைத் தடுமாற வைத்த தீப்தி சர்மாவும் .. உலகக் கோப்பையை வென்றதோடு இந்திய மக்களின் மனத்தினையும் வென்றிருக்கிறார்கள்.

சரியான புரிதலும் , வெற்றியை நோக்கிய இலக்கும் , இணைந்து செய்தால் இயலாதது இல்லை என்ற விவேகமும் இருந்தால் வெற்றி நிச்சயம் என்பதற்கு இதைவிட என்ன எடுத்துக் காட்டு இருக்க முடியும் ?

'வாய்ப்புக் கிடைத்தால் வானையும் எட்டுவாள் பெண்' என்ற வார்த்தைகள் உண்மையாகியிருக்கிறது.

 "ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காண்!" என்ற பாரதியின் நம்பிக்கையை  நனவாக்கிய  இளம் நம்பிக்கை நட்சத்திரங்களை  இதயம் திறந்து வாழ்த்துவோம்.

- உதயம் ராம்

- 03/11/2025