ஜூன் 2-ல் பள்ளிகள் திறப்பு: பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு

 தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிகள் ஜூன் 2-ம் தேதி திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு கடந்த மார்ச் 3 முதல் ஏப்ரல் 15-ம் தேதி வரை நடத்தப்பட்டது. அதேபோல், 1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கான முழு ஆண்டு தேர்வுகள் ஏப்ரல் 7-ம் தேதி தொடங்கி 

 (ஏப். 24) நிறைவு பெற்றது.  இவர்களுக்கான கோடை விடுமுறை ஏப். 25 முதல் தொடங்கியது. எனினும், ஆசிரியர்கள் பள்ளி இறுதி வேலைநாளான ஏப்ரல் 30-ம் தேதி வரை பணிக்கு வந்து விடைத்தாள் மதிப்பீடு மற்றும் மாணவர் சேர்க்கை போன்ற நிர்வாகப் பணிகளை கவனிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் கோடை விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிகள் ஜூன் 2-ம் தேதி திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து பள்ளிக்ககல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன் வெளியிட்ட அறிவிப்பில், “2025-26-ம் கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் விடுமுறை முடிந்து ஜூன் 2-ல் (திங்கள் கிழமை) திறக்கப்படும். எனவே, அன்றைய தினத்தில் பள்ளிகளை திறப்பதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.” என்று கூறப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து தனியார் பள்ளிகள் இயக்குனர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தமிழகத்தில் இயங்கும் அனைத்து வகை சுயநிதி பள்ளிகளும் ஜூன் இரண்டாம் தேதி பள்ளிகள் திறப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

 பல தனியார் பள்ளிகள் ஏப்ரல் பத்தாம் தேதிக்கு முன்பு விடுமுறை விட்ட நிலையில் பள்ளி திறப்பு தேதி எப்போது என்பது மட்டும் யாரும் அறிவிக்கவில்லை. இதற்குக் காரணம் அரசாங்கத்திலிருந்து எந்த தகவலும் இல்லாமல் இருந்ததுதான். 

 ஏன் என்று சொன்னால் திமுக அரசு பொறுப்பு ஏற்றதில் இருந்து எந்த கல்வி ஆண்டுமே முழுமையாக முடிக்கப்பட்டதில்லை. அதேபோன்று உரிய நேரத்தில் திறக்கப்பட்டதும் இல்லை. 

 அரசு பள்ளி ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கைகளை ஏற்று வெயில் அதிகமாக இருக்கிறது என்பதை காரணம் காட்டி பள்ளிகளை முன்னதாக மூடுவதும் ஜூன் மாதம் 15 ஆம் தேதிக்கு பிறகு பள்ளிகள் திறப்பது என்று இருந்ததால் அனைவருக்குமே உரிய நேரத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என்பது கேள்விக்குறியாக இருந்தது. 

 ஆனால் இந்த முறை பள்ளிக்கல்வித்துறை இயக்குனர்கள் துணிந்து ஜூன் இரண்டாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவித்திருப்பது பெற்றோர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது. 

 இந்த அறிவிப்பு நிலையாக இருக்குமா? இல்லை மாற்றம் பெறுமா? என்பது வாக்கு வங்கியின் கையில் இருக்கிறது.?!