சொத்துக்குவிப்பு வழக்குகளில் இருந்து DMK அமைச்சர்கள் விடுவிக்கப்பட்டதற்கு எதிரான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு...!?
கடந்த 2006-2011 வரையிலான திமுக ஆட்சிக் காலத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக தங்கம் தென்னரசுவும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரனும் பதவி வகித்தனர். இந்த காலக் கட்டத்தில், இருவரும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக இரண்டு தனித்தனி வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்கை விசாரித்த ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் போதிய ஆதாரம் இல்லாததால் இருவரையும் விடுவித்து உத்தரவிட்டது.
இந்த உத்தரவுகளை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை மேல்முறையீடு செய்யாத நிலையில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து சீராய்வு மனுக்களை விசாரணைக்கு எடுத்தார். இதுதொடர்பாக நீதிபதி மீது திமுகவின் ஆர்.எஸ்.பாரதி நேரடியாகவே குற்றச்சாட்டை முன்வைத்தார். மறு ஆய்வு வழக்குகளில் இருந்து நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் விலக வேண்டும் எனவும், வேறு நீதிபதி விசாரிக்கவும் வைத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
இதனையடுத்து இந்த வழக்கு விசாரணை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் நடைபெற்று வந்தது. அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன் மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை மீதான வாதங்கள் நிறைவு பெற்றதை அடுத்து தீர்ப்பை நீதிபதி தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார். இந்நிலையில் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆகியோருக்கு எதிரான சொத்துக் குவிப்பு மறுஆய்வு வழக்கின் தீர்ப்பை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் வழங்கியுள்ளார்.
அதில், சொத்துக்குவிப்பு வழக்குகளில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் விடுவித்த உத்தரவை ரத்து செய்துள்ளது.