எழுத்தாளர் சிவசங்கரிக்கு அகில இலங்கை கம்பன் கழகத்தின் *கம்பன்* *புகழ்* *விருது* -- தமிழின் கம்பீரம் உயர்ந்தது!

 எழுத்தாளர் சிவசங்கரிக்கு அகில இலங்கை கம்பன் கழகத்தின் *கம்பன்* *புகழ்* *விருது* 

-- தமிழின் கம்பீரம் உயர்ந்தது!

 ஒரு எழுத்தாளர் என்பவர்  சமுதாயத்தின் எத்தனை பெரிய சொத்து ..எவ்வளவு பெரிய பெருமை.. என்பதையெல்லாம் தமிழர்களை விட மற்றவர்கள் நன்றாகவேத் தெரிந்து வைத்திருக்கின்றனர். 

  இலங்கையில் 44 ஆண்டுகளை நிறைவு செய்து வெற்றிகரமாக செயல்பட்டு வரும்  அகில இலங்கை கம்பன் கழகம் ஆண்டுதோறும் மிகச்சிறந்த தமிழ் அறிஞர்களை, எழுத்தாளர்களை, கலைஞர்களை கம்பன் புகழ் விருதும்,  இந்திய மதிப்பில் ஒரு இலட்சம் ரூபாய்  விருதுக்குரிய தொகையையும் கொடுத்து சிறப்பித்து வருகிறது.

 இந்த ஆண்டு அந்த விருது நம் எல்லோரின் இதயங்களிலும் தன்னுடைய எழுத்துக்களாலும் , அறப்பணிகளாலும் , உயர் பண்புகளாலும்  வாழ்ந்து கொண்டிருக்கும் "மனித நேய மாண்பாளர்" எழுத்தாளர் சிவசங்கரிக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

 விருது வழங்கும் விழா என்பது அண்மை காலங்களில் சுண்டல் விநியோகம் போல நடந்து கொண்டிருக்கும் சூழலில் ஒரு விருது எப்படி வழங்கப்பட வேண்டும் .. ஒரு விழா எப்படி நடத்தப்பட வேண்டும் என்பதை எல்லோருக்கும்  படம் பிடித்துக் காட்டியிருக்கிறது அகில இலங்கை கம்பன் கழகம் .  

 சிவசங்கரி அவர்களுக்கு மிகச் சிறப்பான பயண ஏற்பாடுகளை செய்து வரவழைத்து, நன்கு உபசரித்துள்ளனர்.

விழா நடக்கும் வாயிலிருந்து சிகப்பு கம்பளம் விரித்து.. அரங்கின் இருபுறங்களிலும் அழகிய மங்கையர்கள் பதாகைகள் ஏந்தி வர .. இன்னும் சிலர் மலர்கள் தூவ ..மேடையில் ஒருவர் அம்மாவின் பெருமைகளைக் கூற .. அரங்கம் கைத்தட்டலால் அதிர .. ஒரு மகாராணியை எப்படி அந்த நாட்டு மக்கள் மகிழ்ச்சியோடு வரவேற்பார்களோ அப்படி வரவேற்றனர்.

 சிவசங்கரி அவர்கள் அன்று என்ன வண்ணத்தில் உடை உடுத்துவார் என்பதை விசாரித்து, அந்த வண்ணத்திற்கு ஏற்றவாறு மேடை அமைப்பையே மாற்றி இருக்கிறார்கள் என்று சொன்னால் எந்த அளவிற்கு அவர்கள் எழுத்தாளர்கள் மீதும் குறிப்பாக எழுத்தாளர் சிவசங்கரி மீதும் மரியாதை வைத்திருக்கிறார்கள் என்பது சொல்லாமலேயே செயல்களால்  தெரிந்தது.

 சிவசங்கரி அம்மா அவர்களை புகழ்பெற்ற பட்டிமன்ற பேச்சாளர் அன்பு சகோதரி பர்வீன் சுல்தானா அவர்கள் அரங்க வாயிலிலிருந்து கைப்பிடித்து மேடையேற்றி வந்தது "கற்றாரை கற்றாரே காமுறுவர்" என்ற சொற்றொடரை நினைவுபடுத்தியது. கலைமகளை அலைமகள் அழைத்து வருவது போல் இருந்ததால் கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருகியது.

 மகாராணிக்குரிய மிகப்பெரிய சிம்மாசனம். அதில் சிவசங்கரி அவர்கள் தலைப்பாகை சூடி அமர்ந்திருந்த காட்சி (படம் பார்க்க) தமிழுன்னையே அங்கு அமர்ந்திருப்பது போன்றிருந்தது .

 சிம்மாசனத்தைச் சுற்றி  முன்னும் பின்னும் பதாகைகளோடு  மங்கையர்கள் நின்று கொண்டிருந்தனர்.

 கழகத்தினுடைய தலைவர் நீதியரசர் விஸ்வநாதன் அவர்களுடன் கழக நிர்வாகிகள் ஒரு லட்சம் ரூபாய்  விருதுத் தொகையும் விருதையும் வழங்கிய போது தமிழ் பெருமை கொண்டு கம்பீரத்துடன் தலை நிமிர்ந்தது. 

அது மட்டுமா ? கழகத்தினுடைய அத்தனை உறுப்பினர்களும் அம்மா அவர்களுடைய திருப்பாதங்களை வணங்கி  ஆசி பெற்றது மெய்சிலிர்க்கும் காட்சியாய் அமைந்தது. 

 அம்மாவின் பெயரை இந்த விருதுக்கு பரிந்துரைத்தவர் போற்றுதலுக்குரிய கம்பவாரி இலங்கை ஜெயராஜ் அவர்கள்.

அவருக்கும்.விருது வழங்கி சிறப்பித்த அகில இலங்கை கம்பம் கழகத்தினருக்கும் உரத்த சிந்தனை உள்ளம் மகிழ்ந்து நெகிழ்ந்து தன் நன்றியினை , பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறது.

 *வேண்டுகோள்*

16 ஆண்டுகள் தவ வாழ்க்கை வாழ்ந்து இந்தியாவின் அனைத்து மொழி எழுத்தாளர்களையும் நேரில் சென்று சந்தித்து இலக்கியத்தால் இந்தியாவை இணைத்த ஒரே இந்திய எழுத்தாளரான சிவசங்கரி அவர்களுக்கு பத்ம விருதுகள் கிடைக்க (அவர் விரும்ப மாட்டார் என்றாலும்) மிகப் பெரிய தமிழ் அமைப்புகளும் , தமிழறிஞர்களும் , ஆளுமை மிகுந்த தமிழ் எழுத்தாளர்களும் முயற்சிக்க வேண்டும்.

உரத்து சிந்தித்து ஒன்றிணைந்து அந்த அங்கீகாரத்தை அம்மா அவர்களுக்கு அளிப்பதுதான்  உண்மையான எழுத்துக்கு மரியாதையாக இருக்கும். 

-- உதயம் ராம்

-- 19/06/2024