கோயில் கட்டினால் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்'

கோயில் கட்டினால் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்'

சேலம் மாவட்டத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, 'தமிழ்நாட்டில் கோயில்கள் கட்டப்பட்டு தான் வருகிறது. சேலத்திலும் ஏகப்பட்ட கோயில்கள் கட்டப்பட்டு தான் வருகிறது. அப்படி ஒவ்வொரு கோயிலும் கட்டி மக்கள் ஆதரிப்பார்கள் என்றால், அனைவரும் கோயில் கட்டும் வேலைக்கு தான் செல்ல வேண்டும். ஒவ்வொரு மதத்தைச் சேர்ந்தவர்கள், அவரவர்களுக்கு விருப்பப்பட்ட கோயில், ஆலயங்கள், மசூதிகளை கட்டி வருகிறார்கள்.

ஆலயம், கோயிலை கட்டினால் அவர்களுக்கே மக்கள் வாக்களிப்பார்கள் என்று சொல்ல முடியாது. கோயில் என்பது அவரவர் நம்பிக்கை சார்ந்தது. இந்தியா நாடு என்பது பல்வேறு மதங்களை கொண்ட அமைப்பு. அவரவர்களுக்கு பிரியப்பட்ட கடவுளை வணங்குகின்றனர்.

இதனால், ஒரு கோயில் கட்டினால் மக்கள் அவர்களுக்கே (பிரதமர் மோடி) வாக்களிப்பார்கள் என்று நினைப்பது தவறானது. முதல்வராக தான் இருந்தபோது ஏராளமான கோயில்களை கட்டியுள்ளேன். அதன் அடிப்படையில் பார்த்தால் தனக்கே மக்கள் வாக்களிக்க வேண்டும். அதிமுக ஆட்சியில்தான் ஏராளமான ஆலயங்கள் புதுப்பிக்கப்பட்டது. தேவாலயங்களுக்கும், மசூதிகளுக்கும் நிதிகள் வழங்கப்பட்டது. அனைத்து மதங்களுக்கும் சமமாக செயல்பட்டோம்" என்றார்.

"அதிமுக சரியான வழியில் கூட்டணி அமைக்கும்'

மேலும், "அதிமுக ஆட்சியில் தான் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் கொண்டு வரப்பட்டது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அவசரப்பட்டு திறந்து விட்டனர். முழுமையான பணிகள் முடிந்த பின்னரே திருத்திருக்க வேண்டும். அவசரத்தில் திறந்ததால்தான் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

முழுமையாக கவனம் செலுத்தி செயல்படவில்லை. கூட்டணி என்பது சூழ்நிலைக்கு ஏற்றவாறு அமைக்கப்படும். அதிமுக சரியான வழியில் கூட்டணி அமைக்கும். நாளை அதிமுக தலைமை அறிவித்த குழுவினர் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியை தொடங்குகின்றனர்' என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "வெவ்வேறு கருத்துக்கள் கொண்ட 26 கட்சிகள் கொண்ட கூட்டணி இந்தியா கூட்டணி. அந்த அடிப்படையில் அவர்கள் ஒன்றாக இணைந்து செயல்படுவது கடினம். மேற்குவங்க முதல்வர் மம்தா கூட்டணியில் இருந்து விலகி விட்டதாக செய்திகள் வந்துள்ளது.

இன்னும் யார் யாரெல்லாம் வெளியே போகிறார்கள் என்பதை பொருத்திருந்து பார்ப்போம். தமிழர்களின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை திமுக இளைஞரணி மாநாட்டில் தெரிவித்து விட்டனர். சீட்டு ஆடுவது, மது அருந்துவது, தூங்குவது, இது போன்ற மாநாட்டின் மூலம் நாட்டின் வளர்ச்சி பிரமாண்டமாக இருக்கும்' என்றார் எடப்பாடி பழனிசாமி.