தமிழகத்தில் புகைப்படம் இல்லாத பழைய சாதி சான்றிதழ் செல்லாதா? பொய் செய்திகளை நம்ப வேண்டாம்.....!?

 தமிழகத்தில் புகைப்படம் இல்லாத பழைய சாதி சான்றிதழ் செல்லாதா? பொய் செய்திகளை நம்ப வேண்டாம்.....!?

பழைய சாதி சான்றிதழ் வைத்திருப்பவர்கள் அதனை மாற்ற வேண்டும் என்றும், தமிழகத்தில் புகைப்படம் இல்லாத ஜாதி சான்றிதழ்கள் செல்லாது என்றும் சிலர் சமூக வலைதளங்களில் தகவல்களை பரப்பி வருகிறார்கள். இது குறித்த அரசு அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

தமிழகத்தில் பிறப்பு சான்றிதழ், ஆதார், சாதி சான்றிதழ் இந்த மூன்றுமே பள்ளியில் குழந்தைகளை சேர்க்கும் போதே கேட்கிறார்கள். இதுஒருபுறம் எனில் வேலைவாய்ப்பு, உதவி தொகை போன்றவற்றுக்கும் சாதி சான்றிதழ் கட்டாயம் ஆகும். பள்ளியில் படிக்கும் போதே பலர் சாதி சான்றிதழை வாங்கி வைத்துள்ளனர். சாதி சான்றிதழின் அடிப்படையில் அரசு வேலைகளில் சேர முடியும். பிசி, எம்பிசி, எஸ்சி எஸ்டி என்று தமிழகத்திலும், பொது, ஓபிசி, எஸ்சி/ எஸ்டி என தேசிய அளவிலும் சாதி சான்றிதழ்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. எந்த சாதியாக இருந்தாலும் இந்த பிரிவுகளின் கீழ் வந்துவிடும்.

இந்நிலையில் சாதி சான்றிதழ்களில் புகைப்படம் இருந்தால் தான் செல்லுப்படியாகும் என்றும், புகைப்படம் இல்லாத சாதி சான்றிதழ் செல்லுபடியாகாது என்றும் சிலர் தகவல்களை பேசி யூடியூப் மற்றும் பேஸ்புக் மற்றும் ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் செய்தியாக பரப்பி வருகிறார்கள்.

இது அவர்களின் வியாபார யுத்தி.  இணையதள சேவை மையங்களுக்கு ஆட்களை  வரவழைக்க செய்யப்பட்டுள்ள சதி.

இதை உண்மை என்று நம்பி, தமிழகத்தில் சில இ சேவை மையங்களில் புகைப்படம் இல்லாத சாதி சான்றிதழ்கள் செல்லுபடியாகாது என கூறியபடி, அதனை மாற்றுவதற்கான நடவடிக்கைகளை சிலர் மேற்கொண்டு வருகிறார்கள் . அதனால் புகைப்படம் இல்லாத ஜாதி சான்றிதழ்கள் சட்டபூர்வமானதா இல்லையா? என்ற குழப்பம் பலருக்கும் ஏற்பட்டுள்ளது.


தற்போதைய நிலையில் புகைப்படத்துடன் கூடிய சாதி சான்றிதழ் கடந்த இரண்டு ஆண்டுகளாக தான் வழங்கப்டுகிறது. விண்ணப்பதாரரின் புகைப்படம் மற்றும் QR கோடுடன் சாதி சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. அதற்கு முன் வழங்கப்பட்ட ஜாதி சான்றிதழ்களில் புகைப்படங்கள் எதுவும் இடம் பெற்றிருக்காது.

சமூக ஊடகங்களில் பரவும் செய்தி குறித்து வருவாய் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, சில இ சேவை நிறுவன ஊழியர்கள் சாதி சான்றிதழ் குறித்த தவறான புரிதலை பெற்றிருக்கிறார்கள். மேலும் பழைய ஜாதி சான்றிதழ்களை ஆன்லைனில் மாற்றுவதற்கான எந்த ஒரு அறிவிப்பையும் நாங்கள் வெளியிடவில்லை. பழைய சாதி சான்றிதழ் கிழிந்திருந்தாலோ அல்லது தொலைந்து விட்டால் மட்டுமே புதிதாக விண்ணப்பித்து பெறலாம் மற்றபடி அதனை மாற்ற வேண்டிய அவசியமே இல்லை என்று கூறினார்கள். எனவே மக்களே சாதி சான்றிதழ் புகைப்படம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் செல்லும். எதையும் மாற்றுவதற்கு அலைய வேண்டாம்..எச்சரிக்கையாக இருங்கள்...