ஊரையே காலி செய்துவிட்டு மாநாட்டுக்கு திரண்ட மக்கள் ..

 ஊரையே   காலி செய்துவிட்டு மாநாட்டுக்கு    திரண்ட மக்கள் ....!

மதுரை வலையங்குளம் பகுதியில் எழுச்சியோடு நடைபெற்று வரும் அ.தி.மு.க. மாநாடு அனைத்து அரசியல் கட்சிகளையும் உற்றுநோக்க செய்துள்ளது. இப்படியொரு மாநாட்டை அ.தி.மு.க.வின் அடிமட்ட தொண்டன் முதல் மூத்த நிர்வாகிகள் வரை யாரும் பார்த்ததில்லை என்று கூறும் அளவிக்கு பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த மாநாட்டிற்காக அனைத்து மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான தொண்டர்களை அழைத்து வருவதற்கான முன்னேற்பாடுகளை அந்தந்த மாவட்ட செயலாளர்கள் செய்திருந்தனர். அதன்படி நேற்று மாலை முதல் இன்று காலை வரை பஸ், வேன்களில் தொண்டர்கள் மாநாட்டுக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

இதற்கிடையே மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அதன்படி இந்த மாவட்டத்திற்கு உட்பட்ட டி.கல்லுப்பட்டி, டி.குன்னத்தூர், பேரையூர், கள்ளிக்குடி, செக்கானூரணி, சோழவந்தான், வாடிப்பட்டி, உசிலம்பட்டி, எழுமலை ஆகிய பகுதிகளில் உள்ள கிராமங்களை சேர்ந்தவர்கள் குடும்பத்தோடு மாநாட்டுக்கு திரண்டு வந்தனர்.

இதனால் மேற்கண்ட கிராமங்கள் ஆள் அரவமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. கூலி வேலைக்கு செல்பவர்கள், விவசாயிகள் என அனைத்து தரப்பினரும் மாநாட்டில் குவிந்துள்ளனர். விடிய விடிய பரபரப்பாக காணப்பட்ட சாலைகள் இன்று காலை மேற்கண்ட இடங்களில் காலியாக கிடந்தது.