கல்லூரி மாணவ மாணவிகளுக்கு தொல்லியல் குறித்த உள்விளக்க பயிற்சி

.கல்லூரி மாணவ மாணவிகளுக்கு தொல்லியல் குறித்த உள்விளக்க பயிற்சி


04.08.2023 வெள்ளிக்கிழமை  கிருட்டினகிரி அருங்காட்சியகம் சார்பில் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு தொல்லியல் குறித்த உள்விளக்க பயிற்சி நடைபெற்றது.  

காலை பொழுது பயிற்சிக்காக மாணவ மாணவிகள் 106 பேர் அருங்காட்சியகம் வந்து சேர்ந்தாச்சு...  அந்த நேரம் இன்னிக்கு தான் வெள்ளிக்கிழமை ஆச்சே பயிற்சி வகுப்பு இருக்காதே...  கொஞ்ச நேரம் பேசிட்டு போலாமேன்னு நம்பி அருங்காட்சியகம் போனா.... அங்கே மொத்த மாணவிகளும் இருக்காங்க. என்னடா இது இன்னிக்குமா பயிற்சி வகுப்பு இருக்குன்னு காப்பாட்சியர் கோவிந்தராஜ் அவர்களிடம் பேச அப்போ தான் அவர் சொன்னார்....  சார் பசங்க ரொம்ப ஆர்வமா இருக்காங்க.... அவிங்கள இன்னிக்கு நேரடி உள் விளக்க பயிற்சிக்கு பழைய பேட்டை குணமதீஸ்வரர் கோவிலுக்கு அதாவது சோமேஸ்வரர் கோவிலுக்கு கூட்டிட்டு போய் உள் விளக்க பயிற்சி தரலாம்னு தான் வரசொன்னேன்னு சொல்லி, வாய்ப்பிருந்தா  நீங்களும் வரலாம்னு சொல்லிட்டார்.

படை தயாரா இருக்கு ..... எங்கள் வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவின் தளபதியான  ஒருங்கிணைப்பாளர் தமிழ்ச்செல்வன் அண்ணனும் வந்துட்டாரு. அவரும் ஓக்கே சொல்ல கிளம்பிட்டோம்.... கோவிலுக்கு.

11.00 மணிக்கு கோவிலுக்கு வந்து சேர்ந்தாச்சு.... முதல் வேலை  எல்லோரும் கோவிலுக்குள் போய் திவ்யமா சாமி தரிசனம் பன்னிட்டு வந்துட்டாங்க மங்களகரமா.  தொடர்ந்து எல்லோரும் பயிற்சி வகுப்புக்கு வந்துட்டாங்க.... பவ்யமா.

மாணவ மாணவிகளுக்கு பயிற்சி ஆரம்பிச்சாச்சு. முதலில் கோவிலின் கட்டிட கலை, அங்கிருக்கும் சிற்பங்கள்  குறித்த செயல் விளக்க பயிற்சி அளிக்கப்பட்டது. அதில் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் குறித்தும், இடைக்காலம், மற்றும் வரலாற்று காலங்கள் குறித்து காப்பாட்சியர் கோவிந்தராஜ் அவர்கள் தெளிவாக எடுத்துரைத்தார்.

இதில் சிறப்பு என்னன்னா தமிழி என்று அழைக்கப்படும் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ் பிராமி எழுத்துக்களை எழுதவும் படிக்கவும் கற்றுத்தரப்பட்டது. அதை மாணவ மாணவிகள் மிகவும் ஆர்வத்தோடு கவனித்து அதை முழுமையாக உள்வாங்கிக்கொண்டார்கள்.  தொடர்ந்து அந்த எழுத்தில் இருந்து இன்றைய நவீன கால தமிழ்  வரை எழுத்துக்களின் வளர்ச்சியை எடுத்துக்காட்டுகளுடன் விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்த பயிற்சியின்  தொடர்ச்சியாக வரும் நாட்களில் கிரந்த எழுத்துக்கள், தமிழ் எண்கள், கல்வெட்டுக்களில் உள்ள ஆண்டுகளை கணக்கிடும் முறை, சிற்பங்கள் குறித்த பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளதாக காப்பாட்சியர் அவர்கள் தெரிவித்தார்கள்.

இந்த தொல்லியல் நேரடி உள் விளக்க பயிற்சியின் போது காப்பாட்சியர் கோவிந்தராஜ் அவர்கள், ஒருங்கிணைப்பாளர் தமிழ்ச்செல்வன் இவர்களோடு, மாருதி மனோகரன் ஆகிய நானும், கோவில் அர்ச்சகர் நாகராஜ், அருங்காட்சியக பணியாளர்கள் செல்வகுமார், பெருமாள் ஆகியோர் உடனிருந்தனர்.

B. S. Prakash