கிருஷ்ணகிரி அருகே தேவ சமுத்திரம் ஏரியில் இரண்டு காட்டு யானைகள் உற்சாக குளியல்...!

 கிருஷ்ணகிரி அருகே தேவ சமுத்திரம் ஏரியில் இரண்டு காட்டு யானைகள் உற்சாக குளியல்...!


கிருஷ்ணகிரி அருகே தேவ சமுத்திரம் ஏரியில் இரண்டு காட்டு யானைகள் உற்சாக குளியல் - கிருஷ்ணகிரி நகர் பகுதிக்கு அருகாமையில் வந்ததால் பொதுமக்கள் அச்சம் - இரண்டு காட்டு யானைகளை வனப்பகுதிக்கு விரட்டும் முயற்சி தீவிரம்

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி மற்றும் பஞ்சப்பள்ளி வனப்பகுதியில் இருந்து வெளியேறிய இரண்டு காட்டு யானைகள் கடந்த ஒரு மாதமாக தர்மபுரி மாவட்டம் காரியமங்கலம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் சப்பாணிப்பட்டி பையூர் வேலம்பட்டி போன்ற பகுதிகளிலும் கிராமங்களுக்குள்ளும் முகாமிட்டு வந்தது. இந்த இரண்டு காட்டு யானைகளையும் ராயக்கோட்டை மற்றும் கிருஷ்ணகிரி வனத்துறையினர் கண்காணித்து அதனை விரட்டி காரிமங்கலம் அருகே உள்ள சஞ்சீவி மலைக்குன்றுக்கு அனுப்பி வந்தனர். அங்கு கடந்த 10 நாட்களாக முகாமிட்டிருந்தது யானைகள் அவ்வப்போது வெளியே வந்து விவசாய விளை பயிர்களை சேதம் செய்து வந்தது.

இந்த நிலையில் காரிமங்கலம் அருகே சஞ்சீவி மலையில் இருந்த இரண்டு காட்டு யானைகளும் அங்கிருந்து வெளியேறி கிருஷ்ணகிரி நகர் பகுதியில் உள்ள தேவ சமுத்திர ஏரியில் இன்று காலை முகாமிட்டது. ஏரியில் உள்ள தண்ணீரில் இரண்டு யானைகளும் உற்சமாக குளித்து விளையாடியது. பின்னர் ஏரியில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரை கொடிகளில் நடுவே இரண்டு யானைகளும் தண்ணீரின் நடுவே நின்று கொண்டு உள்ளது. கிருஷ்ணகிரி நகர் பகுதியில் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள ஏரியில் இரண்டு யானைகள் இருப்பதால் ஏராளமான வாகன ஓட்டுக்களும் பொதுமக்களும் சாலையோரம் நின்று மிகுந்த ஆர்வத்துடன் யானைகளை கண்டு ரசித்து வருகின்றனர்.

இதனால் அங்கு பொதுமக்கள் கூட்டம் அதிகரித்து, போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது. வனத்துறை மற்றும் காவல்துறையினர் பொதுமக்களை அப்புறப்படுத்தியும் போக்குவரத்து சீர் செய்து வருகின்றனர். இன்று மாலை இந்த இரண்டு யானைகளையும் கிருஷ்ணகிரி அருகே உள்ள சோக்காடி வனப்பகுதிக்கு அல்லது கூசுமலை வழியாக மேல்மலை வனப்பகுதிக்கு விரட்டும் முயற்சியில் கிருஷ்ணகிரி மற்றும் ராயக்கோட்டை வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் சுற்றி வந்த இரண்டு யானைகள் தற்போது கிருஷ்ணகிரி நகர் பகுதியில் உள்ள ஏரியில் முகாமிட்டுள்ள சம்பவம் நகரவாசிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. யானைகள் முகாமிட்டுள்ள ஏரியை சுற்றி குடியிருப்பு பகுதிகள் நிறைந்துள்ளதால் மிகுந்த கவனத்துடன் யானைகளை விரட்டும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். அருகில் உள்ள பொதுமக்கள் இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். யானைகள் முகாமிட்டுள்ள ஏரியின் நடுவே மின் கம்பம் உள்ளதால் யானைகள் மின்சாரம் தாக்கும் நிலை வரலாம் என்பதால் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது.

K. Moorthi. Reporter