அகில இந்திய அளவில் மோடிக்கு தான் முதலிடம்....! தொடர்ந்து பின் தங்கும் ராகுல்...!!
தமிழ்நாடு, அசாம், மேற்குவங்கம், கேரளா ஆகிய நான்கு மாநிலங்களிலும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் கடந்தாண்டு சட்டமன்ற தேர்தல்கள் நடந்தன. தொடர்ந்து புதிய அரசுகள் அமைந்தன.
தேர்தல் நடந்து ஓராண்டு கடந்துவிட்ட நிலையில், மேற்கண்ட மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உட்பட்ட 120 லோக்சபா தொகுதிகளில் ஐஏஎன்எஸ் சார்பில் சி - வோட்டர், புதிய கருத்துக் கணிப்பு ஒன்று நடத்தியது.
அதாவது, வரும் 2024ம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில், பிரதமர் பதவிக்கு பொருத்தமான தலைவர் யார்? என்ற கேள்வி மக்களிடம் கேட்கப்பட்டது.
பிரதமர் பதவிக்கு மிகவும் பொருத்தமானவர் யார்? என்ற கேள்விக்கு, அசாமில் பதிலளித்தவர்களில் 43 சதவீதம் பேர் மோடியை ஆதரித்தனர்.
தொடர்ந்து டெல்லி முதல்வரான கெஜ்ரிவாலை 11.62 சதவீதம் பேரும், ராகுல் காந்தியை 10.7 சதவீதம் பேரும் ஆதரித்தனர்.
கடந்த 2019ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் கேரளாவில் போட்டியிட்டு ராகுல் காந்தி வெற்றி பெற்றார். அந்த மாநில மக்களிடம் மேற்கண்ட கேள்வி கேட்கப்பட்ட போது, அதற்கு பதிலளித்தவர்களில் 28 சதவீதம் பேர் மோடிதான் தங்களுக்கு விருப்பமான தேர்வு என்றும், அதனை தொடர்ந்து ராகுல்காந்திக்கு 20.38 சதவீதம் பேரும், கெஜ்ரிவாலுக்கு 8.28 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.
இதேபோல், தமிழகத்தில் 29.56 சதவீதம் பேர் மோடியை பிரதமர் பதவிக்கு தங்கள் விருப்பமான தேர்வாக கூறினர். மற்ற மாநிலங்களை காட்டிலும் மோடிக்கு தமிழ்நாட்டில் ஆதரவு வெகுவாக குறைந்துள்ளது. ராகுல் காந்திக்கு 24.65 சதவீதம் பேரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியை 5.23 சதவீதம் பேரும் ஆதரித்துள்ளனர். கெஜ்ரிவாலுக்கு குறிப்பிடும்படியான ஆதரவு இல்லை.
மேற்குவங்கத்தில், 42.37 சதவீதம் பேர் மோடிக்கும், மம்தா பானர்ஜிக்கு 26.08 சதவீதம் பேரும், ராகுல் காந்திக்கு 14.4 சதவீதம் பேரும் ஆதரவு அளித்தனர். புதுச்சேரியில், 49.69 சதவீதம் பேர் மோடிக்கும், 11.8 சதவீதம் பேர் மற்ற காங்கிரஸ் தலைவர்களுக்கும், ராகுல் காந்திக்கு 3.22 சதவீதம் பேரும் ஆதரவாக கூறினார்.
மேற்கண்ட ஐந்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பின்படி பிரதமர் பதவிக்கு மிகவும் பொருத்தமான நபராக சராசரியாக மோடிக்கு 49.91 சதவீதம் பேரும், ராகுல் காந்திக்கு 10.1 சதவீதம் பேரும், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 7.62 சதவீதம் பேரும், மற்ற காங்கிரஸ் தலைவர்களுக்கு 5.46 சதவீதம் பேரும், மம்தா பானர்ஜிக்கு 3.23 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்தனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.