ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்....?!
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகனும், ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவுமான திருமகன் ஈவெரா மாரடைப்பால் கடந்த 4 ஆம் தேதி உயிரிழந்தார்.
இதனையடுத்து, ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு, பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் ஜனவரி 31 ஆம் தேதி தொடங்குகிறது. மனுத்தாக்கலுக்கான கடைசி நாள் பிப்ரவரி 7.
இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மார்ச் 2 ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் அந்தத் தொகுதியில் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்
இனி அந்த தொகுதியில் அரசு புதிய திட்டங்களை செயல்படுத்தக்கூடாது என்றும், உரிய ஆவணங்கள் இன்றி பணம், பொருட்கள் எடுத்துச் செல்லக்கூடாது என்றும் சத்யபிரதா சாகு கூறியுள்ளார்
டெல்லியில் நடைபெறும் தேர்தல் பார்வையாளர் ஆலோசனைக் கூட்டத்தில் ஈரோடு தேர்தல் பார்வையாளரை நியமிப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் 500 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்த முடிவு செய்துள்ளதாகவும்,
தேர்தல் நடத்தும் அதிகாரியாக ஈரோடு நகராட்சி ஆணையர் சிவக்குமார் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் சத்யபிரதா சாகு கூறியுள்ளார்.