ஓசூரில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ ராமர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்

 ஓசூரில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ ராமர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்

*ஓசூரில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ ராமர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம். ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம்.*

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் அமைந்துள்ள சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ கோதண்ட ராமசுவாமி திருக்கோவிலின் மகா கும்பாபிஷேக வைபவம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

வடக்கில் காசி மாநகருக்கு ஒப்பாக தட்சிணகாசி என்றும் புகழ் பெற்ற சந்திரகிரி என்றழைக்கப்படும் தற்பொழுதைய ஓசூர் மாநகரில் மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீ மரகதாம்பிகை உடனுறை ஸ்ரீ சந்திர சூடேஸ்வரர்  திருக்கோயில் மலை அமைந்துள்ளது. இந்த கோவிலில் உள்ள சிவபெருமான் ஸ்ரீ ராம நாமத்தின் பெருமையை இந்த உலகிற்கு உணர்த்தும் விதமாக ஸ்ரீமன் நாராயணனின் அவதாரமான ஸ்ரீ ராமருக்கு இங்கு கோயில் அமைக்க உத்தேசித்து, அதன்படி சிவபெருமான் விருப்பத்தினால் அமையப்பெற்ற திருக்கோயிலாக இந்த ஸ்ரீ ராமர் திருக்கோயில் அமைந்துள்ளது என்று புராணங்கள் வாயிலாக தெரியவரும் சிறப்பு பெற்றது.

நேதாஜி சாலையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்றதும் புகழ் மிக்கதுமான இந்த திருக்கோயிலில் உள்ள மூலவர் ஸ்ரீ சீதா லக்ஷ்மண ஹனுமத் சமேதராக ஸ்ரீ கல்யாண கோதண்ட ராமர் ஆக சேவை சாதித்து அருள் பாலிக்கிறார். 

இந்த திருக்கோயிலில் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர், ஸ்ரீ திருவேங்கடமுடையான், ஸ்ரீ கருடாழ்வார் மற்றும் ஸ்ரீ சக்கரத்தாழ்வார் தனி சன்னதிகள் கொண்டு அருள் பாலிக்கின்றனர். அதோடு ஸ்ரீ ஹனுமானும் ராம நாம வரப்பிரசாதியாக அருள் பாலிக்கிறார்.   

மேலும், காஞ்சிபுரத்தில் உள்ள ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலில் அமைந்துள்ள தங்க பல்லி போன்று இந்த திருக்கோவிலிலும் சுவர்ண கவுளி என்றழைக்கப்படும் தங்க பல்லி அமைந்திருப்பது மிக சிறப்பு வாய்ந்ததாகும்.  

அவ்வாறு அமையப்பெற்ற இந்த திருக்கோவிலில், 13ம் நூற்றாண்டுகளில் இருந்து சோழ மன்னர்கள், ஹோய்சால மன்னர்கள், கிருஷ்ணதேவராயர் மன்னர் போன்ற பேரரசர்கள் காலத்தில் திருப்பணிகள் வெகு சிறப்பாக நடைபெற்று வந்தது. 

தற்பொழுது தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை என் கீழ் இயங்கும் இந்த திருக்கோவிலின் பல ஆண்டுகளாக நடந்து வந்த புனரமைப்பு திருப்பணிகள் நடைபெற்று முடிவடைந்த நிலையில் இன்று காலையில் திருக்கோயிலில் விமானத்திற்கு மகா கும்பாபிஷேக வைபவம் நடைபெற்றது. 

முன்னதாக கணபதி ஹோமம், சுதர்சன ஹோமம், நவக்கிரக ஹோமம், ஆகியன யாகசாலைகளில் பூரண கும்ப கலசங்கள் மற்றும் அவற்றுள் புனித நீரும் வைத்து பூஜிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இன்று காலை பட்டாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்க யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட கலசங்களில் உள்ள புனித நீரை கோபுர கலசங்களில் மீது ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினர். 

பின்னர் புனித நீரானது வந்திருந்த பக்தர்கள் மீதும் தெளிக்கப்பட்டு அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது. இதில் ஓசூர் மட்டும் இன்றி கர்நாடகா ஆந்திரா மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்து சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

இந்த மகா கும்பாபிஷேக வைபவத்திற்கான ஏற்பாடுகளை திருக்கோயிலின் பரம்பரை தர்மகர்த்தாக்களான முன்னாள் எம்எல்ஏ (ஜே பி டி )கே .கோபிநாத் மற்றும் ஜெய்சங்கர் ஆகியோர் குடும்பத்தாரும் மற்றும் இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகளும் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.

Hosur Reporter. E. V. Palaniyappan