தருமபுரி மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து மாபெரும் கண்டண ஆர்ப்பாட்டம்: பாப்பிரெட்டிபட்டி எம்.எல்.ஏ. அறிவிப்பு....!

 தருமபுரி மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து மாபெரும் கண்டண ஆர்ப்பாட்டம்: பாப்பிரெட்டிபட்டி எம்.எல்.ஏ. அறிவிப்பு....!


தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில் பாப்பிரெட்டிபட்டியும் ஒன்று. நட்சத்திர தொகுதியான இதில், கடந்த 2021-ல் நடைபெற்ற சட்டமண்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஏ.கோவிந்தசாமி 1,14,507 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளர் பிரபு ராஜசேகரை 36,943 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றவர். அமமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் பழனியப்பன் வெறும் 15,863 வாக்குகள் மட்டுமே பெற்றார்.

2021 சட்டமன்ற தேர்தலில் தமிழக அளவில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு அபார வெற்றி கிடைத்தாலும், தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளிலும் தோல்வியடைந்தது. 5 தொகுதிகளில் மூன்றில் அதிமுக, இரண்டில் பாமக சட்டமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற்றனர்.

திமுக சார்பில் யாரும் வெற்றி பெறாததால் அக்கட்சி நிர்வாகிகள் மீது கட்சித் தலைமை அதிருப்தியில் இருந்ததாக கூட கூறப்பட்டது. பின்னர், மாவட்டத்தின் வளர்ச்சி பணிகளை கண்காணிக்க வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அங்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு பணிகளை கண்காணித்து வருகிறார்.

இது ஒருபுறம் இருக்க, மக்கள் நலத்திட்டங்கள், புதிய பணிகளுக்கான பூமி பூஜை போடுதல் உள்ளிட்ட பணிகளுக்கு சட்டமன்ற உறுப்பினர்களுக்கு முறையாக அழைப்பு விடுக்காமல் மாவட்ட நிர்வாகம் திமுக மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளை அழைத்து நிகழ்ச்சி நடத்தி வருவதாக அதிமுகவினர் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.


அதிமுகவினரை ஆரம்பம் முதலே மாவட்ட ஆட்சியர் புறக்கணிப்பதாக கூறி கடந்த ஜனவரி மாதம் 2-ம் தேதி ஆட்சியர் அலுவலகத்தில் சட்டமன்ற உறுப்பினர் ஏ.கோவிந்தசாமி திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், மாவட்ட நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி இனி வரும் காலங்களில் முறையாக அழைப்பு விடுப்பதாக உறுதியளித்தாக கூறப்படுகிறது.

ஆனாலும், நீர் பூத்த நெருப்பு என்பது போல் மாவட்ட நிர்வாகத்திற்கும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் இடையேயான இடைவெளி இருந்துக்கொண்டே இருப்பதாக அதிமுகவினர் குற்றம்சாட்டி வருகின்றனர். இதுகுறித்து சபாநாயகர், சட்டமன்ற முதன்மை செயலாளர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனத் தெரிகிறது.

இதுகுறித்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி கூறியதாவது:-
"மாவட்ட நிர்வாகம் வேண்டுமென்றே அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை புறக்கணித்து வருகிறது. தேர்தலில் தோல்வியடைந்த திமுக நிர்வாகிகளை அமைச்சர்கள் போல் நினைத்து அழைப்பு விடுப்பது கண்டிக்கத்தக்கது. இது இப்படியே தொடர்ந்தால், தமிழக அரசு மற்றும் தருமபுரி மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து மாபெரும் கண்டண ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் திட்டமிட்டுள்ளோம்" என்று கூறினார்
.