முன்னாள் அமைச்சர் பழனியப்பனுக்கு திமுக மாவட்ட செயலாளர் பதவி...!?

 முன்னாள் அமைச்சர் பழனியப்பனுக்கு திமுக மாவட்ட செயலாளர் பதவி...!?

தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி, பாப்பிரெட்டிபட்டி, அரூர், பென்னாகரம், பாலக்கோடு என ஐந்து சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. கடந்த சட்டமன்ற தேர்தலில் தமிழகம் முழுவதும் திமுக கூட்டணி அமோக வெற்றியை பதிவு செய்து ஆட்சியை பிடித்தாலும் தருமபுரி மாவட்டத்தில் ஒரு தொகுதியில் கூட திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வெற்றி பெறவில்லை.

திமுக நிர்வாகிகள் சரியாக தேர்தல் பணி செய்யாததே தோல்விக்கு காரணம் என உடன் பிறப்புகள் வேதனை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, தருமபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தடங்கம் சுப்பிரமணி, முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகனின் மறைமுக ஆதரவாளராக இருந்து வருவதாக பகீர் குற்றச்சாட்டுகளை திமுகவினர் முன்வைக்கின்றனர்.

தருமபுரிமேற்கு மாவட்ட பொறுப்பாளராக உள்ள பி.என்.பி.இன்பசேகரன் பென்னாகரம் தொகுதியில் எப்படியும் வெற்றி பெற்றுவிடுவோம் என்ற மெத்தனப்போக்கில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபடாததே பாமகவுக்கு பெரும் சாதகமாக அமைந்ததாக கூறப்படுகிறது. அதோடு, அவரது தந்தை பி.என்.பெரியண்ணன் போல் கட்சியின் வளர்ச்சியில் கவனம் செலுத்தவில்லை என உடன்பிறப்புகள் கூறுகின்றனர்.

இதனால், தருமபுரியில் திமுகவை வளர்க்க வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தை பொறுப்பாளராக நியமித்து கட்சித் தலைமை உத்தரவிட்டது. அதன்படி, அவர் தான் அரசின் நலத்திட்டங்கள் வழங்குதல், மக்கள் நலப்பணி மற்றும் கட்சிப் பணிகளை தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.

முன்னாள் அமைச்சர் பழனியப்பன் திமுகவில் இணைந்த உடனே அவருக்கு முக்கியப் பொறுப்புகள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவருக்கு தலைமை எந்த பொறுப்பையும் வழங்காமல் வைத்திருந்தது. இருப்பினும், கட்சிக் கூட்டங்கள், பொதுக்கூட்டம் உள்ளிட்டவற்றில் தீவிரமாக செயல்பட்டு வரும் அவர் தனக்கான பலத்தை நிரூபித்து வருகிறார். கடந்த மே 14-ம் தேதி கடத்தூர் பேரூராட்சியில் நடந்த திமுக ஓராண்டு சாதனை கூட்டத்தில் தனது அனல் பறக்கும் பேச்சால் அதிமுக, பாஜகவை கடுமையாக சாடினார். இதனை அங்கு வந்திருந்த திமுகவினர் ஆச்சர்யத்துடன் வாயை பிளந்து பார்த்தனர்.

இந்த நிலையில், மே 28ம் தேதி அண்ணா அறிவாலயத்தில் நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நிர்வாக வசதிக்காக மாவட்டங்கள் மறுசீரமைப்பு செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறினார். அதோடு, சரியாக கட்சிப் பணி செய்யாத மாவட்ட செயலாளர்களின் பதவி பறிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

முன்னாள் அமைச்சர் பழனியப்பன் திமுகவில் இணைந்து சுமார் ஓராண்டாகும் நிலையில், அவரது நடவடிக்கைகள் திருப்திகரமாக உள்ளதாக கட்சி நிர்வாகிகள் பலர் தலைமையிடம் கூறியுள்ளனர். இதனால், தடங்கம் சுப்பிரமணிக்கு மாற்றாக பழனியப்பனுக்கு மாவட்ட செயலாளர் பதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த பதவி கிழக்கு மாவட்ட செயலாளர் பதவியா? அல்லது ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர் பொறுப்பா? என்பது விரைவில் தெரிய வரும்.

அதேபோல், மேற்கு மாவட்ட பொறுப்பாளராக உள்ள பி.என்.பி.இன்பசேகரனை மாற்றிவிட்டு அவருக்கு பதிலாக திமுக வர்த்தகர் அணி மாநிலத் துணைச் செயலாளராக உள்ள தர்மசெல்வனுக்கு பொறுப்பு வழங்கவும் தலைமை முடிவு செய்துள்ளதாக உடன் பிறப்புகள் கூறுகின்றனர். இதனால், எங்கு பதவி பறிபோகிவிடுமோ என்ற அச்சத்தில் தடங்கம் சுப்பிரமணி மற்றும் இன்பசேகரன் ஆகியோர் அமைச்சர் ஒருவர் உதவியுடன் தலைமையிடம் சிபாரிசு கேட்டு அனுகியுள்ளதாக கூறப்படுகிறது
.