நர்சரி பிரைமரி பள்ளிகளுக்கும் 3 ஏக்கர் நிலம் வேண்டும்: பள்ளிக்கல்வித்துறை அடாவடி....!?

நர்சரி, பிரைமரி  பள்ளிகளுக்கும்  3 ஏக்கர் நிலம் வேண்டும்:  பள்ளிக்கல்வித்துறை அடாவடி....!?

எல்.கே.ஜி., - யு.கே.ஜி., வகுப்புகளை நடத்தும் நர்சரி பள்ளிகளுக்கும், கிராம புறங்களில் 3 ஏக்கர் நிலம் கட்டாயம்' என தொடக்க கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது. இதனால், தனியார் பள்ளிகள் அதிர்ச்சி அடைந்துள்ளன.

நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவது தொடர்பாக, தொடக்க கல்வி இயக்குனர் அறிவொளி சார்பில், முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது. அதில், 'எல்.கே.ஜி., - யு.கே.ஜி., வகுப்புகளை நடத்தும், நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளுக்கு, நிலத்தின் தேவை, அடிப்படை வசதிகள் குறித்த விபரங்களை ஆய்வு செய்த பிறகே, அங்கீகாரம் வழங்குவதற்கான கருத்துருவை பரிந்துரைக்க வேண்டும்' என்று கூறப்பட்டுள்ளது.

இதன்படி, அங்கீகார விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகள்:

* அங்கீகாரம் கோரும் பள்ளி, நிர்வாகி, அறக்கட்டளை பெயர், பதிவு செய்த நாள், பள்ளியின் இட விபரம், சொந்த இடமா, குத்தகை என்றால், 30 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்த ஆவணத்தை பள்ளிகள் தாக்கல் செய்ய வேண்டும்

* பள்ளி அமைந்துள்ள இடம் மாநகராட்சி என்றால் 6 கிரவுண்ட்; மாவட்ட தலைமையிடம் என்றால், 8 கிரவுண்ட்; நகராட்சி என்றால், 10 கிரவுண்ட்; பேரூராட்சி என்றால் 1 ஏக்கர்; ஊராட்சி என்றால் 3 ஏக்கர் நிலம் இருக்க வேண்டும்

* பள்ளி துவங்குவதற்கு பதிவு கட்டணம் செலுத்த வேண்டும். ஒன்று முதல் 100 மாணவர்கள் என்றால் 1,500 ரூபாய்; 101 முதல் 250 வரை என்றால் 3,750 ரூபாய்; 251 முதல் 500 வரை 7,500 ரூபாய்; 500 மாணவர்களுக்கு மேல் என்றால் 7,500 ரூபாயுடன் ஒரு மாணவருக்கு தலா 15 ரூபாய் வீதம் கூடுதலாக செலுத்த வேண்டும்

* மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, வைப்புத் தொகையும் செலுத்த வேண்டும். 100 மாணவர்கள் என்றால் 5,000 ரூபாய்; 250 வரை 7,500 ரூபாய்; 500 வரை 15 ஆயிரம் ரூபாய்; 500க்கு மேல், 25 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும். ஆசிரியர்களின் மாத ஊதியத்தை, அவர்களின் வங்கி கணக்கில் செலுத்த வேண்டும்.

* பள்ளி கட்டட உரிம சான்றுக்கு, வட்டாட்சியரால் வழங்கப்பட்டுள்ள ஆவணம்; கட்டடத்துக்கான உள்ளூர் திட்ட குழும அனுமதி விபரம் தாக்கல் செய்யப்பட வேண்டும். 50 மாணவர்களுக்கு ஒரு கழிப்பறை; 20 மாணவர்களுக்கு ஒரு சிறுநீர் கழிவறை இருக்க வேண்டும். நுாலக வசதி, உயர் மின்னழுத்த கம்பி குறுக்கே செல்கிறதா என்ற விபரங்களை தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு விண்ணப்பத்தில் கூறப்பட்டுள்ளது.

பள்ளிகள் எதிர்ப்பு

ஊராட்சி பகுதிகளில், நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளுக்கு, 10 முதல் 25 சென்ட் வரையிலான இடம் இருந்தால் கூட அங்கீகாரம் வழங்கப்பட்டு வந்தது. பிளஸ் 2 வரை செயல்படும் மெட்ரிக் பள்ளிகளுக்கு மட்டுமே, 3 ஏக்கர் நிலம் தேவை என்ற விதி பின்பற்றப்பட்டது. தற்போது முதன்முறையாக, நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளுக்கும், மெட்ரிக் பள்ளிகளை போல, 3 ஏக்கர் நிலம் வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது நர்சரி, பிரைமரி பள்ளி நிர்வாகிகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

இது குறித்து பள்ளி நிர்வாகிகள் பலர் கூறுகையில் எங்களிடம் மூன்று ஏக்கர் நிலம் இருந்தால் நாங்கள் ஏன் நர்சரி பிரைமரி பள்ளிகளை நடத்துகிறோம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளாக மாற்றி இருக்க மாட்டோமா..,?  தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளும் 3 ஏக்கர் நிலத்தில் செயல்படுகிறதா...?  நர்சரி பிரைமரி பள்ளிகள் நடத்துவதற்கு மூன்று ஏக்கர் நிலம் எதற்கு தேவை என்கிற கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தொடக்கக்கல்வி இயக்குனர் இப்படி ஒரு ஆணையை  வெளியிட்டு இருப்பதில் உள்நோக்கம் இருக்கிறது. கிராமப்புறங்களில் செயல்பட்டு வருகின்ற நர்சரி பிரைமரி பள்ளிகளில் சிறந்த கல்வி சீரிய ஒழுக்கம் வழங்கப்பட்டு வருகிறது மாணவர்களின் பாதுகாப்புக்கு தரமான கல்விக்கும் உத்தரவாதம் அளித்து இப்பள்ளிகள் மக்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்றுள்ளது இதனால் கிராமப்புறங்களில் உள்ள பெற்றோர்கள் கடன் பட்டாவது தங்கள் பிள்ளைகளை இது போன்ற பள்ளிகளில் படிக்க வைக்கின்றனர். 

இதனால் அரசுப் பள்ளிகளில் சேருகின்ற மாணவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் வெகுவாகக் குறைந்து வருகிறது இதனால் ஆயிரக்கணக்கான அரசுப் பள்ளிகளை மூட வேண்டிய கட்டாயத்திற்கு தமிழக அரசு தள்ளப்பட்டுள்ளது.

இதை தடுப்பதற்காக  பள்ளிக் கல்வித்துறை பல்வேறு கீழ்த்தரமான வேலைகளை செய்து  வருகிறது.  முதலில் RTE மாணவர் சேர்க்கையில்  கை வைத்தது. கடந்த ஆண்டுகளை காட்டிலும் இந்த கல்வியாண்டில் 75  சதவிகிதம் அளவிற்கு மாணவர் சேர்க்கைக்கான எண்ணிக்கையை குறைத்து விட்டது.

இப்போது  நர்சரி, பிரைமரி பள்ளிகளை நடத்துவதற்கு மூன்று ஏக்கர் நிலம் வேண்டும் என்று உத்தரவு போட்டுள்ளது  என்பது நல்ல பள்ளிகளை எல்லாம் மூடிவிட்டு மக்களையும் மாணவர்களையும் ஏமாற்றுகின்ற அரசுப் பள்ளி  ஆசிரியர்கள் மட்டும் வாழ்ந்தால் போதும் என்கிற மனப்போக்கு பள்ளிக்கல்வித்துறை வந்து விட்டதாகவே பலரும் கருதுகின்றனர்.

தொடக்கக்  கல்வியின் தொழு உரமாக இருப்பது நர்சரி பிரைமரி பள்ளிகள் மட்டும் தான்.  இந்த பள்ளிகளில் படித்து வெளிவருகின்ற மாணவர்களால் தான் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் ஓரளவிற்கு உயர்ந்து நிற்கின்றன.  இப்போது இதற்கு தடை போடுவது தமிழகத்தின் வருங்காலத்தை தற்குறிகள் ஆகும் திட்டமாகத் தான் தெரிகிறது.

அரசு தொடக்கப் பள்ளிகள் சரியில்லை என்பதால்தான் தனியார் நர்சரி பிரைமரி பள்ளிகள் வளர்ந்துள்ளது. அரசுப் பள்ளிகளுக்கு எந்தவித அடிப்படை  வசதிகளையும் செய்து கொடுக்காமல், நல்ல தகுதி வாய்ந்த ஆசிரியர்களை நியமிக்காமல், வெறும் இலவசங்களை மட்டும் கொடுத்து மாணவர்களை சேர்த்தால் அதனால் எந்த பயனும் விளையப் போவதில்லை.

இந்த நிலையில்  அரசுக்கு எந்தவித செலவையும் வைக்காமல் சிரமத்தையும் கொடுக்காமல் தரமான கல்வி வழங்கி நன்றாக  செயல்பட்டு வரும் பள்ளிகளை மூடிவிட்டு,  அரசுப்பள்ளிகளில் இருந்த  ஓரிரண்டு கட்டிடங்களையும்  இடித்து விட்டு ஓர் ஆசிரியருக்கும் வழியில்லாமல் விழிபிதுங்கி நிற்கும் நிலையில்

இந்த பள்ளிகளை மூடி விட்டால் அரசுப்பள்ளிகள்  வாழ்ந்துவிடும் என்று கணக்குப் போடுவது எந்த வகையில் நியாயம்...?  இது அடாவடியின் உச்சகட்டம் என்கிறார்கள்.....

சீப்பை மறைத்து வைத்துக் கொண்டால்  கல்யாணம் நின்னு போகும் என்று தப்பு கணக்கு போடுவது போல்

 பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் இனியாவது தப்புக் கணக்குப் போடாமல் நல்லபடியாக செயல்பட்டால் நாடு உருப்படும்.  இல்லாவிட்டால் நாசமாக தான் போகும்....?!