குழந்தையை பள்ளியில் சேர்க்கும் முன்னர் பிளே ஸ்கூலில் சேர்ப்பது நல்லதா?
தற்போது குழந்தைகளை இரண்டரை அல்லது மூன்று வயதிலேயே பள்ளியில் சேர்த்து விடுகிறார்கள். இவ்வாறு சேர்க்கும்போது குழந்தைகளை எங்கு சேர்ப்பது என்ற விஷயத்தில் மிகவும் குழப்பத்துடன் இருக்கின்றனர்.
பெற்றோர்கள் அனைவரும் தற்போது தங்கள் குழந்தைகளை எந்தப் பள்ளியில் சேர்ப்பது... எந்த வயதில் சேர்ப்பது என்ற விஷயத்தில் மிகவும் பரபரப்புடனும், பதற்றத்துடனும் இருப்பார்கள். உளவியல்ரீதியாக குழந்தைகளை புரிந்துகொண்டு அவர்களுக்கேற்ற பள்ளியில் சேர்த்தால் மட்டுமே அவர்களது அறிவுத் திறனும், மனதிடமும் நன்றாக இருக்கும் என விளக்குகிறார் உளவியல் நிபுணர்.
‘பொதுவாக பெற்றோர்களுக்கு இந்தப் பதற்றம் குழந்தை பிறந்த 6 மாதம் முதல் 1 வயதிலேயே ஆரம்பித்து விடுகிறது. ஆனால், குழந்தையை 4 வயதில்தான் பள்ளியில் சேர்க்க வேண்டும் என்று ஓர் ஆய்வு சொல்கிறது. பெரும்பாலான பெற்றோர்கள் வேலைக்குச் செல்வதால் குழந்தைகளை எங்கு விட்டுச் செல்வது, யார் பார்த்துக் கொள்வார்கள் என்ற குழப்பத்தில்தான் மிகவும் தடுமாறுகிறார்கள்.
அதனாலேயே அக்கம்பக்கத்தினர் சொல்வதைக் கேட்டுக் கொண்டு மிகச் சிறிய வயதிலேயே பள்ளியில் சேர்த்து விடுகிறார்கள். இது மிகவும் தவறான ஒன்று. தற்போது குழந்தைகளை இரண்டரை அல்லது மூன்று வயதிலேயே பள்ளியில் சேர்த்து விடுகிறார்கள். இவ்வாறு சேர்க்கும்போது குழந்தைகளை எங்கு சேர்ப்பது என்ற விஷயத்தில் மிகவும் குழப்பத்துடன் இருக்கின்றனர்.
உதாரணமாக டே கேர், ப்ளே ஸ்கூல், கிண்டர்கார்டன் என சேர்த்து விடுவது நல்லதுதான். ஆனால், சேர்ப்பதற்கு முன் அந்தக் குழந்தை பள்ளிக்குச் செல்ல மனதளவில் தயாராக இருக்க வேண்டும்.
பள்ளியில் சேர்க்கும் முன் நம் குழந்தையிடம் நாம் பார்க்க வேண்டியது, குழந்தைகள் உங்களை விட்டு தனியாக இருப்பார்களா, தங்களை சுத்தம் செய்து கொள்கிறார்களா அல்லது பிறரிடம் தங்களை சுத்தம் செய்யச் சொல்கிறார்களா, கழிப்பிடம் போகவேண்டும் என சொல்லத் தெரிகிறதா, மற்ற குழந்தைகளுடன் ஒன்றிணைந்து விளையாட முடியுமா, குழந்தைகளுக்கு அந்தந்த வயதிற்கேற்ப உடல் வளர்ச்சி இருக்கிறதா, என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
அடுத்ததாக பள்ளியில் நாம் பார்க்க வேண்டியவை என்னவெனில், நம் குழந்தைகள் அந்தப் பள்ளியில் சந்தோஷத்துடனும் ஆர்வமாகவும் இருக்க வேண்டும். உதாரணமாக வகுப்பு அறை அவர்களுக்குப் பிடித்த மாதிரியும், விளையாடும் இடம் அவர்களுக்குப் பிடித்ததாகவும் இருக்க வேண்டும்.
அங்கு கற்றுத்தரும் விதம், குழந்தைகளை ஊக்குவிப்பதாகவும், கற்பனை திறனை வளர்ப்பதாகவும் அதனுடன் சேர்ந்து படிப்பு ரீதியாகவும் அறிமுகப்படுத்த வேண்டும்.
பள்ளிக்குச் செல்லும் தொலைவு அருகில் இருக்க வேண்டும். நிறைய மாணவர்கள் இருக்கக் கூடாது. உதாரணமாக 20 முதல் 25 பேர் வரையிலான மாணவர்கள்தான் இருக்க வேண்டும். இப்படி இருந்தால்தான் குழந்தைகள் அடுத்தடுத்து வகுப்பிற்குச் செல்ல தயாராக இருப்பார்கள்.
இவ்வாறு அமைந்த ப்ளே ஸ்கூல் செல்வதன் மூலமாக குழந்தைகள் தங்கள் திறன்களை நன்கு வளர்த்துக் கொள்கின்றனர். படிப்பதிலும், விட்டுக்கொடுப்பதிலும், சமுதாயத்தில் ஒன்றிணைவதிலும், பேசுவதிலும், விளையாட்டிலும், நம்பிக்கையாகவும், கலைகளிலும், கதைசொல்லல் என வளர்ச்சியடைகின்றனர்.
இவ்வாறு அமையாதபோது குழந்தைகள் பள்ளி என்றாலே மிகவும் பயப்படுகின்றனர். அழுகை, கோபம், பிடிவாதம் போன்றவற்றை வெளிப்படுத்துகின்றனர். குழந்தைகளுக்கு பள்ளி என்பது மிகவும் முக்கியமான ஒன்று. ஆதலால் அவர்களுக்கு தகுந்த முறையில் உதவுவது பெற்றோர்களின் கடமை.”