வன்னியர் இட ஒதுக்கீடு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு மருத்துவர் ராமதாஸ் எழுதிய கடிதம்!

 வன்னியர் இட ஒதுக்கீடு:  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு மருத்துவர் ராமதாஸ்  எழுதிய கடிதம்!

அன்புள்ள தமிழக முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு,

வணக்கம்!

பொருள்:  தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களின் பிரதிநிதித்துவம் குறித்த கூடுதல் புள்ளி விவரங்களை ஆணையம் மூலம் திரட்டி, அவர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்குவதற்கான புதிய சட்டத்தை இயற்றக் கோருதல் - தொடர்பாக

தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20% இட ஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு 10.50% உள் இட ஒதுக்கீடு வழங்கி இயற்றப்பட்ட சட்டம் செல்லாது என்ற சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசும், பாட்டாளி மக்கள் கட்சியும் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்குகளில் தமிழக அரசு மற்றும் அதன் துறைகளின் சார்பில் மூத்த வழக்கறிஞர்களை அமர்த்தி சிறப்பான வாதங்கள் முன்வைக்கப்படுவதை உறுதி செய்ததற்காக எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வன்னியர்கள் உள் இட ஒதுக்கீடு தொடர்பான விவகாரத்தில், மிக, மிக பிற்படுத்தப்பட்ட நிலையில் உள்ள வன்னிய மக்களின் சமூகநீதியை உறுதி செய்வதற்காக தமிழக அரசு மேற்கொள்ள வேண்டிய இன்றியமையாத பணிகள் குறித்து தங்களின் கவனத்தை ஈர்ப்பதற்காகவே இக்கடிதத்தை எழுதுகிறேன்.

தமிழ்நாட்டில் கல்வி மற்றும் சமூகநிலையில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள வன்னியர் சமுதாயத்திற்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 20% தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று 1980-ஆம் ஆண்டில் என்னால் தொடங்கப்பட்ட வன்னியர் சங்கம் தொடர் போராட்டங்களை நடத்தியது. பத்து ஆண்டுகள் நடத்தப்பட்ட தொடர் போராட்டங்கள், 1987-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட 7 நாட்கள் தொடர் சாலைமறியலின் போது 21 உயிர்கள் காவல்துறை துப்பாக்கிச் சூடு மற்றும் கொடியத் தாக்குதல்களில் கொல்லப்பட்டது உள்ளிட்ட நிகழ்வுகளைத் தொடர்ந்து, 1989-ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த முதல்வர் கலைஞர், என்னை அழைத்து வன்னியர் இட ஒதுக்கீடு குறித்து பேச்சு நடத்தினார்.

பின்னர் வன்னியர் உள்ளிட்ட 108 சமுதாயங்களை இணைத்து மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்ற புதிய இட ஒதுக்கீட்டுப் பிரிவை உருவாக்கி, அதற்கு 20% இட ஒதுக்கீடு வழங்கினார்.  சுதந்திர இந்தியாவில் இடஒதுக்கீடு நடைமுறை செய்யப்பட்ட பிறகு, 38 ஆண்டுகளாக, தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட சமுதாயங்களுக்கு ஒரே பிரிவாக இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்த நிலையில், அப்போது தான் பிற்படுத்தப்பட்ட வகுப்பு பிரிக்கப்பட்டு பிற்படுத்தப்பட்ட வகுப்புக்கு 30%, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்புக்கு 20% என இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது.

அதன்பிறகும் கூட, கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் வன்னியர்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் கிடைக்காத நிலையில் தான், வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு கோரி 43 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் போராட்டத்தை 2020-ஆம் ஆண்டில் தீவிரப்படுத்தினோம். அதன் பயனாகத் தான் முந்தைய அதிமுக ஆட்சியில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20% இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.50%, சீர் மரபினர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 7%, பிற மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 2.50% உள் இட ஒதுக்கீடு வழங்கி கடந்த 2021-ஆம் ஆண்டு பிப்ரவரி 26-ஆம் நாள் அ.தி.மு.க. ஆட்சியில் சட்டப்பேரவையில் சட்டம் இயற்றப்பட்டது.

2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று தங்கள் தலைமையிலான ஆட்சி அமைந்த பிறகு , வன்னியர் இட ஒதுக்கீட்டுச் சட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி கோரிக்கை விடுத்தது. அதையேற்று வன்னியர் இட ஒதுக்கீட்டு சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஆணையை 26.07.2021 ஆம் நாளில் தங்கள் தலைமையிலான அரசு பிறப்பித்தது. வரலாறு அடிப்படையிலான இந்த உண்மைகள் அனைத்தும் தாங்கள் அறிந்தவை தான்.

தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட வன்னியர் இட ஒதுக்கீட்டுச் சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட  வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை, 7 காரணங்களைக் கூறி வன்னியர் உள் இட ஒதுக்கீட்டை ரத்து செய்தது. சென்னை உயர்நீதிமன்றம் பட்டியலிட்டிருந்த  7 காரணங்களும் மிகவும் ஆபத்தானவை. உயர்நீதிமன்றம் முன்வைத்த காரணங்கள் அனைத்தும்  தவறு என்பதை நிரூபிக்காவிட்டால் தமிழ்நாட்டில் இனி இட ஒதுக்கீடு வழங்கவே முடியாது என்ற நிலை ஏற்பட்டிருக்கும்; இருக்கும் இட ஒதுக்கீடுகளையும் காப்பாற்ற முடியாத நிலை ஏற்பட்டிருக்கும்.

இத்தகைய நெருக்கடியான சூழலில் தான் வன்னியர்கள் உள் இட ஒதுக்கீட்டு சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மற்றும் அதன் துறைகள், பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் எனது சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த வழக்கில் கடந்த மார்ச் 31-ஆம் தேதி  தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கலாம்... அது வன்னியர்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான கூடுதல் புள்ளி விவரங்களுடன் நியாயப்படுத்தி வழங்கப் பட வேண்டும் என்று தமிழக அரசுக்கு வழிகாட்டுதலை வழங்கியிருக்கிறது.

அதுமட்டுமின்றி, சமூகநீதிக்கு நிரந்தரத் தடை ஏற்படுத்தும் வகையில் சென்னை உயர்நீதிமன்றம் முன்வைத்த 7 காரணங்களில் ஆறு காரணங்களை உச்சநீதிமன்றம் தகர்த்திருக்கிறது. இது குறித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் முடிவுகள் தவறானவை என்று தெளிவாக கூறியுள்ள உச்சநீதிமன்றம், 1. உள் ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு, 2. மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவில் உள்ள சாதிகளை  பல்வேறு பிரிவுகளாக பிரித்து இட ஒதுக்கீடு வழங்கத் தடையில்லை, 3. ஒரு சாதிக்கு மட்டும் தனியாக இட ஒதுக்கீடு வழங்கலாம், 4. வன்னியர் உள் ஒதுக்கீட்டு சட்டத்திற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறத் தேவையில்லை, 5. வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்காக  இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 9&ஆவது அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ள 69% இட ஒதுக்கீடு சட்டத்தை திருத்தத் தேவையில்லை, 6. வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்குவது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது அல்ல என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

உச்சநீதிமன்றத்திடமிருந்து இப்படி ஒரு தீர்ப்பை பெற்றிருப்பது வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி ஆகும். இத்தீர்ப்பின் மூலம் தமிழ்நாட்டில் கல்வி அடிப்படையிலும், சமூக அடிப்படையிலும் பின்தங்கிய நிலையில் உள்ள சமூகங்களுக்கு சமூக நீதி வழங்கும் உரிமையும், அதிகாரமும் தமிழக அரசுக்கு வென்றெடுத்துத் தரப்பட்டுள்ளது. இது சமூகநீதிக்கு கிடைத்துள்ள வெற்றி என்பதில் ஐயமில்லை.

அதேநேரத்தில் உச்சநீதிமன்றம் கூறியவாறு, வன்னியர்களின் கல்வி, வேலைவாய்ப்பு தொடர்பான புள்ளிவிவரங்களைத் தொகுத்து, அவற்றின் அடிப்படையில் வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்குவதற்கான புதிய சட்டத்தை இயற்றி செயல்படுத்துவதன் மூலம் தான் முழுமையான சமூகநீதியை வென்றெடுக்க முடியும். அதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு தொடங்க வேண்டும்.

தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டியதன் நியாயங்கள் தங்களுக்கு நன்றாகத் தெரியும். வன்னியர்கள் அதிகம் வாழும் மாவட்டங்கள் தான் கல்வி, வேலைவாய்ப்பு, மனிதவள மேம்பாட்டுக் குறியீடு, தனிநபர் வருமானம் ஆகியவற்றில் கடைசி இடங்களில் உள்ளன.

அரசு வேலைவாய்ப்புகளில் ஏ மற்றும் பி பிரிவுகளில் வன்னியர்கள் விரல் விட்டு எண்ணும் அளவில் தான் உள்ளனர். சி மற்றும் டி பிரிவுகளில் கூட 8 விழுக்காட்டைக் கூட அவர்களால் எட்ட முடியவில்லை. தமிழ்நாட்டின் பெரும்பான்மை சமுதாயம் வன்னியர்கள் தான். ஆனால், அவர்கள் தான் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் போதிய பிரதிநிதித்துவம் கிடைக்காமல் மிக, மிக பின்தங்கிய நிலையில் உள்ளனர். அவர்கள் முன்னேறாமல் தமிழ்நாடு முன்னேற முடியாது. இந்த உண்மை தங்களுக்குத் தெரியும். அதனால் தான் வன்னியர்கள் இட ஒதுக்கீட்டுக் கோரிக்கையை நீண்ட காலமாக ஆதரித்து வருகிறீர்கள். வன்னியர் இட ஒதுக்கீட்டு சட்டத்தை நடைமுறைப்படுத்தவும் ஆணையிட்டீர்கள். அடுத்தக்கட்டமாக நீதிமன்றங்களால் ரத்து செய்யப்பட்ட வன்னியர் இட ஒதுக்கீட்டை புதிய சட்டம் மூலம் மீண்டும் ஏற்படுத்தித் தர வேண்டிய கடமையும், பொறுப்பும் உங்களுக்கு உண்டு.

வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்குவதற்காக புதிய சட்டம் இயற்ற எந்தத் தடையும்  இல்லை என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. உச்சநீதிமன்றத் தீர்ப்பின் 68-ஆவது பத்தியில்,    ‘‘பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்குள் உள் ஒதுக்கீடு கோரி முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை நியாயமான முறையில் எவ்வாறு நிறைவேற்றலாம் என்பதை தீர்மானிப்பதற்காக பொருத்தமான, நடப்பு காலத்திற்கான தரவுகளைத் திரட்டுவதற்கு ஏற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநில அரசு முடிவு செய்தால், அதற்கு நாங்கள் மேலே கூறியுள்ள கருத்துகள் தடையாக இருக்காது என்பதை நாங்கள் தெளிவுபடுத்திக் கொள்கிறோம். (We make it clear that the aforesaid observations do not prevent the State, if it so decides, from undertaking suitable exercises for collecting pertinent, contemporaneous data to determine how demands for internal reservation within the Backward Classes can be justly addressed)’’ என்று நீதிபதிகள் கூறியிருக்கின்றனர். வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க அளிக்கப்பட்ட அனுமதியாகவே இதை பார்க்க வேண்டும்.

வன்னியர்கள் இட ஒதுக்கீடு தொடர்பான விவகாரத்தில் மக்கள்தொகை குறித்த எந்த வினாவையும் உச்சநீதிமன்றம் எழுப்பவில்லை. மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் உள்ள மற்ற பிரிவினரை விட  வன்னியர்கள் எந்த அளவுக்கு பின்தங்கியிருக்கிறார்கள் என்பது குறித்த தரவுகளைத் திரட்டி அவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று உச்சநீதிமன்றம் தெளிவாக வழிகாட்டியிருக்கிறது. உச்சநீதிமன்றத்தால் குறிப்பிடப்பட்டுள்ள தரவுகள் அனைத்தும் தமிழக அரசிடம் உள்ளன. அவற்றின் அடிப்படையில் வன்னியர்களுக்கான உள் இட ஒதுக்கீடு குறித்து தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திடம் அறிக்கை பெற்று வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீட்டை அரசு வழங்க முடியும்.

தமிழ்நாட்டில் வரும் ஜூலை மாதத்தில் உயர்கல்வி மாணவர் சேர்க்கை தொடங்கப்படவிருக்கிறது. அதைக் கருத்தில் கொண்டு, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20% இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்குவதற்காக புதிய சட்டத்தை தமிழக சட்டப்பேரவையில்  நிறைவேற்றி பாட்டாளி மக்களுக்கு உரிய சமூகநீதியை வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

 

 தங்கள் அன்புள்ள,

 மருத்துவர் ச. இராமதாசு,

நிறுவனர், பாட்டாளி மக்கள் கட்சி


பெறுதல்:

உயர்திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள்,

மாண்புமிகு தமிழக முதலமைச்சர்,

தலைமைச் செயலகம், சென்னை & 09