MBBS. அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கிய 7.5% இட ஒதுக்கீடு ரத்து செய்ய வாய்ப்பு...?!

MBBS. அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கிய 7.5% இட ஒதுக்கீடு ரத்து செய்ய வாய்ப்பு...?!

தமிழகத்தில் நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்பட்டுள்ள 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டுக்கு அரசிலமைப்பில் இடமில்லை என சென்னை உயர்நீதிமன்றம் கூறிய நிலையில் வழக்கு விசாரணை மார்ச் 17 க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு அரசியல் கட்சிகளும் அவர்களுக்கு  ஜால்ரா அடிப்பவர்கள்  மட்டும் தொடர்ந்து எதிர்த்து வருகின்றனர். தற்போதும் கூட நீட் தேர்வில் விலக்கு கோரி திமுக சார்பில் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இது முழுக்க முழுக்க அரசியல் என்பது  நீட் தேர்வின் உண்மையான பயன்கள்  அடைந்தவர்கள் அறிவார்கள்.

முன்னதாக தமிழகத்தில் அரசு பள்ளியில் படித்த மாணவ-மாணவிகளுக்கு நீட் தேர்வில் உள்ஒதுக்கீடாக 7.5 சதவீதம் வழங்கியது. 

இதை முந்தைய அதிமுக அரசு கொண்டு வந்தது. இது நடைமுறையில் உள்ளதால் தமிழகத்தில் நீட் தேர்வு மூலம் மருத்துவம் படிக்கும் அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் இந்த உள்ஒதுக்கீட்டுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீது தொடர்ச்சியாக விசாரணை நடைபெற்று வருகிறது. நேற்றும் வழக்கு விசாரணை நடந்தது. தலைமை நீதிபதி முனீஸ்வர நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அமர்வு விசாரித்தது.

தமிழக அரசு சார்பில் மூத்த வக்கீல் கபில் சிபல் ஆஜரானார். அவர் வாதாடுகையில் ‛‛இந்த இட ஒதுக்கீடு முறையை மாநில அரசு தனி விருப்பத்தின் அடிப்படையில் கொண்டு வரவில்லை. தனியார், அரசு பள்ளி மாணவர்கள் இடையே மருத்துவ படிப்பில் சேர்வதில் இருக்கும் பிரச்சனைகளை ஆராய நியமிக்கப்பட்ட கமிட்டியின் பரிந்துரையில் தான் வழங்கப்பட்டுள்ளது'' என கூறினார்.

மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் ஸ்ரீராம் பஞ்சு வாதாடுகையில், ‛‛தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீடு கொள்கை பின்பற்றப்பட்டு வருகிறது. இதில் பொதுப்பிரிவினருக்கு 31 சதவீதம் மட்டுமே கிடைக்கிறது. 7.5 சதவீத ஒதுக்கீட்டால் தற்போது அதுவும் சுருங்கிவிட்டது'' என்றார்.

இதை கேட்ட நீதிபதிகள், ‛‛7.5 சதவீத உள்ஒதுக்கீடு தொடர்பாக மட்டுமே வாதங்களை முன்வைக்க வேண்டும்'' என மனுதாரர்களின் வக்கீலுக்கு அறிவுறுத்தினார். மேலும் ‛‛படிக்கும் கல்வி நிறுவனங்களின் அடிப்படையில் (இந்த வழக்கில் கல்வி நிறுவனம் என்பது அரசுப் பள்ளிகள்) ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டுமெனில் அரசியலமைப்பை கண்டிப்பாக மாற்றி எழுத வேண்டும். கல்வி நிறுவனங்களின் அடிப்படையில் மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்க முடியாது. ஏனென்றால் அரசு, தனியார் என இரு பள்ளி மாணவ-மாணவிகள் ஒரே படிப்பை தான் படிக்கின்றனர்''என நீதிமன்றம் கூறியது.

இதற்கிடையே அரசு தரப்பு வக்கீல் கபில் சிபலின் இன்டர்நெட் இணைப்பில் பிரச்சனை எழுந்தது. இதையடுத்து வழக்கு விசாரணை மார்ச் 17 க்கு ஒத்திவைக்கப்பட்டது.

 நீதிபதி கருத்தை வைத்து பார்க்கும்போது நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள்ஒதுக்கீடு கேள்விக்குறியாகலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும் வழக்கு விசாரணை முடிந்த பிறகு முழுவிபரம் தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.