அரசியலுக்கு புதுவரவு; வீரபாண்டி ஆறுமுகம் குடும்பத்திலிருந்து ....!?

அரசியலுக்கு புதுவரவு; வீரபாண்டி ஆறுமுகம் குடும்பத்திலிருந்து ....!?

திமுகவின் மூத்த முன்னோடியாக திகழ்ந்து மறைந்த வீரபாண்டி ஆறுமுகத்தின் பேத்தி மலர்விழி ராஜா அரசியலில் குதித்திருப்பது சேலம் மாவட்ட திமுகவினரை புருவம் உயர்த்த வைத்துள்ளது.

ஏற்கனவே வீரபாண்டி ஆறுமுகத்தின் அரசியல் வாரிசாக அவரது இளையமகன் டாக்டர் பிரபு இருந்து வரும் நிலையில், புதுவரவாக அரசியல் என்ட்ரி கொடுத்திருக்கிறார் மலர்விழி.

சேலம் மாவட்ட பொறுப்பு அமைச்சரும், திமுக முதன்மைச் செயலாளருமான கே.என்.நேரு அளிக்கும் தைரியத்திலும், நம்பிக்கையிலும் தான் மலர்விழி ராஜா அரசியலுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


சேலத்துச் சிங்கம் என வர்ணிக்கப்பட்ட வீரபாண்டி ஆறுமுகம் திமுகவின் மூத்த முன்னோடியாக திகழ்ந்து மறைந்தவர். இவருக்கு அடுத்தப்படியாக அவரது மகன் வீரபாண்டி ராஜா மாவட்ட பொறுப்பாளராகவும், திமுக தேர்தல் பணிக்குழு நிர்வாகியாகவும் செயல்பட்டு வந்தார். இந்நிலையில் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக அண்மையில் வீரபாண்டி ராஜா இளம் வயதிலேயே மறைந்தார். இதையடுத்து வீரபாண்டி ஆறுமுகம் குடும்பத்து அரசியல் பிரதிநிதியாக அவரது இளைய மகனும், மருத்துவருமான பிரபு மட்டுமே திமுகவில் நிர்வாகியாக இருந்து வருகிறார்.

வீரபாண்டி ராஜா மகள்

இந்தச் சூழலில் மறைந்த வீரபாண்டி ராஜாவின் மகள் மலர்விழி ராஜா அரசியல் என்ட்ரி கொடுத்து சேலம் உடன்பிறப்புகளை புருவம் உயர்த்த வைத்திருக்கிறார். வீரபாண்டி ராஜா மறைந்தது முதல் அவரது ஆதரவாளர்கள் மலர்விழியை அரசியலுக்கு வருமாறு வலியுறுத்தி வந்தனர். ஏற்கனவே தனது சித்தப்பாக்கள் பிரபு, பாரப்பட்டி சுரேஷ் என கட்சியில் முக்கியப் பொறுப்புகளில் இருக்கும் நிலையில் தானும் வந்தால் சரியாக இருக்குமா என மலர்விழி யோசித்து வந்திருக்கிறார்.

இதனிடையே வீரபாண்டி ஆறுமுகம் மீதும் அவரது மகன் வீரபாண்டி ராஜா மீதும் அமைச்சர் கே.என்.நேருவுக்கு தனிப்பட்ட பாசம் இருந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் வீரபாண்டி ராஜா மகள் மலர்விழி ராஜாவுக்கு அமைச்சர் நேரு தரப்பில் இருந்து நம்பிக்கையும், தைரியமும் அளிக்கப்பட்டதாக தெரிகிறது. இதையடுத்தே அவர் அரசியலில் குதித்துள்ளதாக காரணம் கூறப்படுகிறது. மேலும், அரசியலிலும், கட்சியிலும் தனது தந்தை சாதிக்காததை தாம் சாதிக்க வேண்டும் என விரும்புகிறாராம்

ஸ்டாலினுக்கு வாழ்த்து

கடந்த மார்ச் 1 -ம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாளை ஒட்டி சேலம் மாவட்டம் மட்டுமல்லாமல் சென்னையில் உள்ள மாலை நாளிதழ்களிலும் அரைபக்கம் அளவுக்கு முதல்வரை வாழ்த்தி விளம்பரம் கொடுத்து, நான் அரசியலுக்கு வந்துட்டேன்னு சொல்லு என்கிற வகையில் கட்சியினருக்கு தெரியப்படுத்தியிருந்தார். வீரபாண்டி ஆறுமுகம் குடும்பத்திலிருந்து அரசியலுக்கு வந்துள்ள 3-ம் தலைமுறையை சேர்ந்தவர் மலர்விழி என்பது குறிப்பிடத்தக்கது.