நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில்72 ஊராட்சிகளிலும் கிளை நூலகங்கள்! ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்!!
நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் உள்ள 72 ஊராட்சிகளிலும் கிளை நூலகங்கள் அமைக்க மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. கேட்டுக்கொண்டுள்ளார்.
திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் சார்பில் பாளையங்கோட்டையில் புத்தகக் கண்காட்சி தொடங்கி நடைபெற்று வருகிறது. வியாழக்கிழமை துவங்கிய இந்தக் கண்காட்சியை, சபாநாயகர் மு.அப்பாவு தொடங்கிவைத்தார். மாவட்ட கலெக்டர் விஷ்ணு, தலைமை தாங்கினார்.
கண்காட்சியின் துவக்க விழாவில், தமிழக காங்கிரஸ் பொருளாளரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான ரூபி மனோகரன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
விழாவில் அவர் பேசியதாவது:
ஒருவருக்கு கல்விதான் மிகப்பெரிய சொத்து. புத்தகக் கண்காட்சிகள் மூலம் நாம் இத்தகைய அறிவுச் செல்வத்தை விருப்பம்போல் சம்பாதித்துக்கொள்ள முடியும்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அறிவார்ந்த சமுதாயத்தை உருவாக்க, மாவட்டங்கள்தோறும் புத்தகக் கண்காட்சிகளை நடத்த உத்தரவிட்டுள்ளார். நாம் ஒவ்வொருவரும் இந்தப் புத்தகக் கண்காட்சிகளுக்கு வருகை தந்து, அறிவார்ந்த புத்தகங்களை வாங்கிப் படித்து பயன்பெற வேண்டும்.
நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் 72 ஊராட்சிகள் அமைந்துள்ளன. இந்த ஊராட்சிகள்தோறும் கிளை நூலகங்கள் செயல்பட மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும் என்று இந்த நேரத்தில் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. பேசினார்.
திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற்று வரும் இந்தப் புத்தகக் கண்காட்சி, வருகிற மார்ச் 28ம் தேதி வரை தொடர்ந்து நடைபெறுகிறது. கண்காட்சியில் 200க்கும் மேற்பட்ட புத்தக ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன.
திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர்: இளையராஜா