ஓசூர் மாநகராட்சி மேயர் பதவியை கைப்பற்ற போவது யார்...? திமுக, அதிமுக கடும் போட்டி....

ஓசூர் மாநகராட்சி மேயர் பதவியை கைப்பற்ற போவது யார்...?  திமுக, அதிமுக கடும் போட்டி....

ஓசூர் மாநகராட்சி மேயர் பதவியை கைப்பற்ற, அதிருப்தி தி.மு.க., கவுன்சிலர்கள் மற்றும் சுயேச்சைகளுக்கு, 1 கோடி ரூபாய், இன்னோவா கார் தருவதாக அ.தி.மு.க., பேரம் பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சியில் மொத்தம் உள்ள 45 வார்டுகளில், தி.மு.க., - 21, அ.தி.மு.க., - 16, பா.ஜ., - பா.ம.க., - காங்., தலா ஒரு வார்டு மற்றும் சுயேச்சைகள் - 5 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளனர்.எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், மேயர் பதவியை கைப்பற்ற தி.மு.க., - அ.தி.மு.க., முயற்சித்து வருகின்றன.

மேயர் பதவிக்கு, 23 கவுன்சிலர்கள் ஆதரவு தேவை என்ற நிலையில், 21 கவுன்சிலர்களை வைத்துள்ள தி.மு.க., கூட்டணியில் உள்ள காங்., மற்றும் தேர்தல் முடிவு வந்ததும் ஆதரவு அளித்த பா.ம.க., கவுன்சிலர் ஆதரவுடன், மேயர் பதவியை பிடிக்க முடிவு செய்துள்ளது. மேலும், நான்கு சுயேச்சைகளும் தி.மு.க.,விற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

 ஆதரவு கவுன்சிலர்களுடன், முதல்வரை சந்தித்துவிட்டு, அக்கட்சி கவுன்சிலர்கள் கேரளா சுற்றுலா சென்றுள்ளனர்.

அதே நேரம், அதிருப்தி தி.மு.க., கவுன்சிலர்கள், சுயேச்சைகளை தங்கள் பக்கம் இழுத்தால், மேயர் பதவியை பிடிக்கலாம் என, அ.தி.மு.க., கணக்கு போடுகிறது.

 இதற்காக, 1 கோடி ரூபாய், மற்றும் இன்னோவா அல்லது கியா நியூ மாடல் கார் வழங்க, மறைமுக பேரம் பேசி வருகிறது. இதனால் திமுக  அதிருப்தி உறுப்பினர்கள் மற்றும் காங்கிரஸ், பாமக  சுயேட்சை கவுன்சிலர்களுக்கு மவுசு கூடியுள்ளது. செலவு செய்த தொகைக்குப் கேரன்டி என்றும் கூறப்படுகிறது.

ஆனால், சுற்றுலா சென்ற கவுன்சிலர்கள் பதவியேற்பு அன்று தான் ஓசூர் வருவர் என்பதால், யார் எவ்வளவு கல்லா கட்டுவார்கள் என்பது போகப்போகத்தான் தெரியும்.

அதிமுக இப்படி ஒரு முடிவெடுத்து திமுகவுக்கு கூடுதல் செலவை வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.