பாலியல் தொல்லை: ஆசிரியை கைது!

 பாலியல் தொல்லை: ஆசிரியை கைது!

அரியலூரில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவரை காதலித்ததாக ஆசிரியை ஒருவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் பல்வேறு ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தினந்தோறும் ஒரு ஆசிரியர் மீது புகார் வந்து கொண்டிருக்கிறது. மற்றொரு பக்கம், சில மாணவிகள் புகார் கொடுக்க பயந்து கொண்டு விபரீதமான முடிவை எடுத்து தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டு வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில் அரியலூரில் மாணவர் ஒருவருக்கு காதல் என்ற பெயரில் பாலியல் தொல்லை அளித்த ஆசிரியை ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டம் அம்பாபூரில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவரிடம் ஆசிரியை ராசாத்தி என்பவர் தவறாக நடந்துள்ளார். இதுகுறித்து மாணவன் தன்னுடைய பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், ஆசிரியை ராசாத்தி மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் ஆசிரியை மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டார். போலீசார் ராசாத்தியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.