பாமக தலைவராகிறார் அன்புமணி: தைலாபுர அப்டேட்!
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக அன்புமணி ராமதாஸ் பொறுப்பேற்க போவதாக தைலாபுரம் தோட்டத்திலிருந்து ரகசியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு கோரி வன்னியர் சங்கத்தினர் 1987 ஆன் ஆண்டு, போராட்டம் செய்தபோது போராட்டத்தைக் கட்டுப்படுத்த காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 21 பேர் கொல்லப்பட்டனர்.
அப்போதிலிருந்து வன்னியர் சங்கம் வீரியமாக வளர்ந்த நிலையில் கட்சியாக உருவாக்க டாக்டர் ராமதாஸ் மற்றும் பேராசிரியர் தீரன் போன்றவர்கள் தீவிரமான ஆலோசனைகள் செய்தனர். வெளியிலிருந்து போராடி வழக்குகளை சந்திப்பதைவிட சட்டத்திற்குட்பட்டு மக்கள் பிரதிநிதிகளாக சட்டமன்றம் மற்றும் பாராளுமன்றம் சென்று வன்னியர் களுக்காக குரல் கொடுக்கலாம், போராடலாம் என்ற ஆரோக்கியமான முடிவுடன் 1989 ஜூலை 16ஆம் தேதி பாட்டாளி மக்கள் கட்சியை உருவாக்கினார் டாக்டர் ராமதாஸ். கட்சிக்கு நிறுவனராக ராமதாஸும் தலைவராக பேராசிரியர் தீரனும் பொறுப்பேற்றனர்.
அதன் பிறகு டாக்டர் ராமதாஸுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு பேராசிரியர் தீரன் வெளியேறியதும், பாமக தலைவர் பதவிக்கு கோ க மணி எனப்படும் ஜி.கே.மணி நியமிக்கப்பட்டார். சுமார் 22 வருடங்களுக்கு முன்பு அந்தப் பொறுப்பை ஏற்றவர் இன்று வரையில் தலைவராக தொடர்கிறார்.
இந்த நிலையில்தான்... வரும் டிசம்பர் 29 ஆம் தேதி பாமகவின் புத்தாண்டு பொதுக்குழு கூட உள்ள நிலையில் பாமகவின் தலைவர் பதவிக்கு அன்புமணியை நியமிக்கலாம் என்ற ஆலோசனை தைலாபுரம் தோட்டத்தில் நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து பாமகவின் உயர்நிலை வட்டாரத்தில் விசாரித்தோம்.
“கடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய பாமக தனித்துப் போட்டியிட்டது. தேர்தல் நடந்த ஒன்பது மாவட்டங்களில் தென்காசி, திருநெல்வேலி ஆகிய இரு மாவட்டங்களைத் தவிர மீது ஏழு மாவட்டங்களும் பாமகவுக்கு செல்வாக்குள்ள வட தமிழகத்தில்தான் இருக்கின்றன. ஆனாலும் பாமகவால் கௌரவமான இடங்களைக் கூட பெற முடியவில்லை.
இந்தத் தேர்தல் முடிவுகளுக்குப் பின் மாவட்டம் மாவட்டமாக பாமக நிர்வாகிகளை சந்தித்த டாக்டர் ராமதாஸ் உரிமையோடு அவர்களைக் கடிந்துகொண்டார். கூட்டணி என்பதெல்லாம் காலை வாருவதற்கே வழி வகுக்கின்றன என்று அதிமுகவை சாடினார். மேலும் பாமக தனித்துப் போட்டியிட வேண்டும் என்பதை அழுத்தம் திருத்தமாக வலியுறுத்தினார்.
இந்த நிலையில்தான், ‘அன்புமணியை இரண்டாம் கட்டத் தலைவராகவே வைத்திருக்கும் சூழலில் அவரால் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. இளைஞரணிச் செயலாளர் என்பதைத் தாண்டி கட்சியில் அவருக்கு தலைமை பதவி கொடுத்தால்தான் இன்னும் வேகமாக செயல்படுவார்’ என்று அன்புமணிக்கு நெருக்கமான சிலர் டாக்டரிடம் கூறியுள்ளனர். இதற்குப் பிறகுதான், முன்னாள் மத்திய அமைச்சரும் டாக்டருக்கு மிகவும் நெருக்கமானவருமான ஏ.கே.மூர்த்தி, மற்றும் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் போன்றவர்கள் சில நாட்கள் முன் ஜி.கே.மணியிடம், ‘நீங்களும் வெகு காலமாக பாமக தலைவர் பதவியில் இருக்கிறீர்கள். இந்த பதவியை சின்னய்யா அன்புமணியிடம் கொடுக்கலாம் என்று ஒரு விருப்பம் எங்களுக்கு இருக்கிறது. நீங்கள் என்ன சொல்கிறீர்கள்’ என்று கேட்டுள்ளனர். அப்போது ஜி.கே.மணி, ‘அப்படியா... சரி சின்னய்யா மற்றும் டாக்டரிடம் நான் தலைவர் பதவியை விட்டுக் கொடுக்க தயாராக இருப்பதாக சொல்லிவிடுங்கள்’ என்று சற்றே சலனத்தோடுதான் சொல்லியிருக்கிறார்.
இதையடுத்து டிசம்பர் 29ஆம் தேதி கூடும் பாமக பொதுக்குழுவில் அன்புமணிக்கு பாமகவின் தலைவர் பதவி வழங்குவது பற்றி தீர்மானம் நிறைவேற்ற முக்கிய நிர்வாகிகள் தீவிரமான ஆலோசனைகள் செய்து வருகின்றனர். முன்னதாக உயர்மட்ட குழுவைக் கூட்டி முடிவு செய்வதற்கும் நாள் நட்சத்திரம் பார்த்து வருகிறார்கள். பாமக உயர் மட்ட குழுவில் வன்னியர் சங்கத் தலைவர் பு தா அருள்மொழி, சமூக முன்னேற்ற சங்கத்தின் தலைவர் சிவபிரகாசம் உள்ளிட்டோர் கலந்துகொள்ள இருக்கிறார்கள். விரைவில் பாமக தலைவராக அன்புமணி பொறுப்பேற்கலாம்” என்கிறார்கள்.