ஓமிக்ரான் பரவல் - குழந்தைகள் மருத்துவமனைகளில் அட்மிட் ஆவது பல மடங்கு உயர்வு.. என்ன காரணம்? பின்னணி

 ஓமிக்ரான் பரவல் - குழந்தைகள் மருத்துவமனைகளில் அட்மிட் ஆவது பல மடங்கு உயர்வு.. என்ன காரணம்? பின்னணி


ஓமிகரான் கேஸ்கள் அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்காவில் அது குழந்தைகள் மத்தியில் என்ன மாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த சில வாரங்களாகவே உலக நாடுகளை அலறவிட்டுக் கொண்டிருப்பது என்றால் அது ஓமிக்ரான் தான். தென் ஆப்பிரிக்காவில் முதலில் கண்டறியப்பட்ட ஓமிக்ரான் தற்போது உலகின் பல்வேறு நாடுகளுக்கும் பரவியுள்ளன. பிரிட்டன் நாட்டில் ஓமிக்ரான் கொரோனா காரணமாகத் தினசரி பாதிப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது. அதேபோல அமெரிக்காவிலும் தினசரி கொரோனா பாதிப்பு மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது.

அமெரிக்காவில் தற்போது ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை ஒரு கோடி என்ற அளவில் உள்ளது. தினசரி பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை வரும் காலத்தில் மேலும் அதிகரித்தும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. 

இதனால் சுகாதார உட்கட்டமைப்பு மீதான அழுத்தமும் கூட அதிகரிக்கலாம். அங்கு தற்போது ஒவ்வொரு நாளும் சுமார் 1.5 லட்சத்திற்கும் அதிகாமானோக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்படுகிறது.

_டெஸ்டிங் பற்றாக்குறை_

ஓமிக்ரான் பாதிப்பாலும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு காரணமாகப் பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்புவதாலும் இது தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. மேலும், அமெரிக்காவில் கொரோனா பரிசோதனை கிட்களுக்கும் பற்றாக்குறை இருப்பதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாகத் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் விரைவில் கொரோனா பரிசோதனை கிட் பற்றாக்குறையைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மையத்தின் இயக்குநர் ஆண்டனி பவுசி தெரிவித்துள்ளார்.

இதனிடையே அமெரிக்காவில் ஓமிக்ரான் அதிகரித்து வரும் நிலையில், கொரோனா பாதிப்பால் குழந்தைகள் மருத்துவமனைகளில் அடமிட் ஆவதும் அதிகரித்தே வருகிறது. 

இது தொடர்பாக நியூயார்க் சுகாதாரத் துறையும் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது நியூயார்க் மாகாணத்தில் 18 வயதுக்குக் குறைவானவர்கள் மருத்துவமனைகளில் அட்மிட் ஆவது 4 மடங்கு வரை அதிகரித்துள்ளது. 

மருத்துவமனைகளில் அட்மிட் ஆகும் 18 வயதுக்குக் கீழானவர்களில் சரிபாதி 5 வயதுக்கும் குறைவானவர்கள் என்று அதிர்ச்சி தகவலையும் நியூயார்க் சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. இதற்கு என்ன காரணம் என்பது குறித்துக் கண்டறிய விரிவான ஆய்வுகள் நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதேநேரம் 5 வயதுக்கும் உட்பட்ட குழந்தைகளுக்கு அமெரிக்காவில் எந்தவொரு வேக்சினும் ஒப்புதல் அளிக்கப்படவில்லை. எனவே, அது ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

அதேநேரம் ஓமிக்ரான் கொரோனா தீவிர பாதிப்பை ஏற்படுத்துவதில்லை என்றும் லேசான பாதிப்புகளை மட்டுமே ஏற்படுத்துவதாகத் தென் ஆப்பிரிக்கா ஆய்வாளர்கள் தெரிவித்தனர். இருப்பினும், அது அதிகப்படியான நபர்களுக்குப் பரவும்போது தீவிர பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் ஓமிர்பான் மாற வாய்ப்புள்ளதாக ஆண்டனி பவுசி எச்சரித்துள்ளார். 

ஓமிக்ரான் குறித்துப் பல முக்கிய தகவல்கள் வரும் காலத்தில் தெரிய வரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.