பேச்சுவார்த்தையில் தோல்வி… திட்டமிட்டபடி வேலைநிறுத்தம்… வங்கி ஊழியர்கள் கொடுத்த ஷாக்!!
*பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டாததால் திட்டமிட்டபடி வேலைநிறுத்தம் நடைபெறும் என அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.*
பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டாததால் திட்டமிட்டபடி வேலைநிறுத்தம் நடைபெறும் என அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது. 2 பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவது தொடர்பான வங்கிகள் சட்ட திருத்த மசோதா நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் வரும் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில், வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக வங்கி ஊழியர்கள் சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது. 2021-2022 ஆம் நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த பிப்ரவரி மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில் மத்திய அரசின் 2 பொதுத் துறை வங்கிகளின் பங்குகளை விற்க முடிவு செய்துள்ளதாகவும், அதோடு மத்திய அரசின் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி நிறுவனத்தின் ஆரம்ப பங்குகளை வெளியீட திட்டமிட்டுள்ளதாவும் தெரிவித்திருந்தார். மேலும் மத்திய அரசின் வங்கிகளுக்கு 20,000 கோடி ரூபாய் வழங்க உள்ளதாகவும் அதில் கூறியிருந்தார். மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு பொதுத்துறை வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் தரப்பில் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. முன்னதாகவே கடந்த மார்ச் மாதம் வங்கி ஊழியர்கள் தொடர் வேலை நிறுத்தப் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
bank strike for two days from dec 16
இந்நிலையில் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா மற்றும் ஓவர்சீஸ் வங்கிகளை தனியாருக்கு விற்பனை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டது. ஐஓபி மற்றும் சென்ட்ரல் வங்கிகளின் பங்குகளை விற்று தனியார் மயமாக்க மத்திய அரசுக்கு நிதி ஆயோக் பரிந்துரை செய்துள்ளது. இதற்கு பல்வேறு தரப்புகளில் இருந்தும் எழுந்துள்ள நிலையில் இந்த வங்கிகள் தனியார் மயமாக்கப்பட்டாலும் ஊழியர்களுக்கு ஓராண்டுக்கு பணி பாதுகாப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. மேலும் இதற்கான சட்டத்திருத்தம் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது, 2 பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவது தொடர்பான வங்கிகள் சட்ட திருத்த மசோதா நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், வங்கி ஊழியர்கள் சங்கங்கள் இணைந்து வரும் 16 மற்றும் 17 ஆகிய இரண்டு நாட்கள் தொடர் வேலை நிறுத்தம் செய்ய முடிவெடுத்துள்ளதாக தெரிவித்திருந்தனர்.
bank strike for two days from dec 16
இதுதொடர்பாக கடந்த 8 ஆம் தேதி நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை என கூறப்படுகிறது. இதை அடுத்து அடுத்தகட்டமாக டெல்லியில் கூடுதல் தொழிலாளர் நல ஆணையர் அலுவலகத்தில் கூடுதல் ஆணையர் ஜோஷி தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் அனைத்து வங்கி ஊழியர் சங்கங்களும் கலந்து கொண்டன. இந்த கூட்டத்திலும் சுமுக உடன்பாடு ஏற்படவில்லை என கூறப்படுகிறது. இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் மசோதாவை தற்போது நடைபெற்று வரும் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யவில்லை என அரசு தரப்பில் உறுதியளிக்கவில்லை என்றும் மத்திய அரசு உறுதி அளிக்காததால் திட்டமிட்டபடி வேலைநிறுத்தம் நடைபெறும் என அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இதனிடையே, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் வங்கி, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, இந்தியன் வங்கி மற்றும் யூகோ வங்கி ஆகியவை டிசம்பர் 16 மற்றும் டிசம்பர் 17 ஆகிய தேதிகளில் வங்கி வேலைநிறுத்தம் காரணமாக தங்கள் செயல்பாடுகள் பாதிக்கப்படும் என்று கூறியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.