ரூ.1000 கோடி வரி ஏய்ப்பு செய்த சரவணா ஸ்டோர்ஸ்!

 ரூ.1000 கோடி வரி ஏய்ப்பு செய்த சரவணா ஸ்டோர்ஸ்!

பிரபல நகை மற்றும் ஜவுளிக் கடையான சரவணா ஸ்டோர்ஸ் 1000 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்தது வருமான வரித்துறை ரெய்டில் அம்பலமாகியுள்ளது.

வணிக நிறுவனங்களில் பிரபலமான சரவணா ஸ்டோர்ஸ் மற்றும் சரவணா செல்வரத்தினம் ஆகிய நிறுவனங்கள், வருவாயை மறைத்து வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாகக் கிடைத்த தகவலைத் தொடர்ந்து கடந்த டிசம்பர் 1ஆம் தேதி முதல் தொடர் சோதனையில் ஈடுபட்டது வருமான வரித்துறை.

சென்னை, கோவை, மதுரை, நெல்லை என மொத்தம் 37 இடங்களில் சோதனை நடத்தியது. இந்நிலையில் சோதனை முடிவை இன்று (டிசம்பர் 7) வெளியிட்டுள்ள வருமான வரித்துறை, “முதல் குழுமத்தில் நடத்தப்பட்ட சோதனையில், 1000 கோடி ரூபாய்க்கு மேல் வரி ஏய்ப்பு நடைபெற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக, ஜவுளி மற்றும் நகைப் பிரிவில், கணக்கில் வராமல் ரூ.150 கோடி மதிப்பீட்டில் பொருட்கள் கொள்முதல் செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது குழுமத்தில் நடைபெற்ற சோதனையில், போலியான விற்பனை ரசீதுகளை உருவாக்கி ரூ.80 கோடி வருவாயை மறைத்து இருப்பதும் தெரியவந்துள்ளது. கணக்கில் வராத தங்கம் வாங்கியது தொடர்பான ஆதாரங்களும் சேகரிப்பட்டுள்ளன. கணக்கில் காட்டப்படாத வாடகை ரசீதுகள் மற்றும் சில்லரை வியாபாரங்கள் என 7 கோடி ரூபாய் மறைத்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

2 நிறுவனங்களுக்குச் சொந்தமான 37 இடங்களில் நடந்த சோதனையில், ரொக்கம் ரூ.10 கோடி, ரூ.6 கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்றும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.