இவர் நடிகர் அல்ல எம்.எல்.ஏ. உதயநிதியை அறிமுகப்படுத்திய அன்பில் மகேஷ்

இவர் நடிகர் அல்ல எம்.எல்.ஏ. உதயநிதியை அறிமுகப்படுத்திய அன்பில் மகேஷ்

பொள்ளாச்சி அரசுப் பள்ளி வகுப்பறையில் உதயநிதியை யார் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாணவர்களிடம் கேட்க அதற்கு அவர்கள் "அவர் சினிமா நடிகர் என கூற" அவர் எம்.எல்.ஏ. என மாணவர்களிடம் உதயநிதியை அன்பில் மகேஷ் அறிமுகம் செய்து வைத்த சுவாரஸ்ய சம்பவம் நடந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவலால் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. தற்போது கொரோனா பரவல் குறையத் தொடங்கியதால் கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 9-ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டன.

இதையடுத்து உலக சுகாதார நிறுவன விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் மற்றும் மருத்துவர் குழுவின் ஆலோசனையின் பேரில் இன்று முதல் ஒன்றாம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்க அரசு அறிவித்தது.

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு

அதன்படி சுமார் 19 மாத இடைவெளிக்குப் பிறகு தமிழகத்தில் 1 முதல் 8ஆம் வகுப்புகள் வரை பள்ளிகள் இன்று திறக்கப்பட்டுள்ளது. மாணவர்களை குதூகலமாக வைத்திருக்க மக்கள் பிரதிநிதிகள் அருகில் உள்ள பள்ளிகளுக்கு சென்று மாணவர்களை உற்சாகப்படுத்தி வரவேற்க வேண்டும் என முதலமைச்சர் உத்தரவிட்டிருந்தார்.

அதனை தொடர்ந்து கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள ஒரு அரசு தொடக்கப் பள்ளியில் பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும், சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலினும் கலந்து கொண்டு மாணவர்களை வரவேற்றனர். வகுப்பில் அமர்ந்திருந்த மாணவர்களிடம் சிறிது நேரம் பேசிவிட்டு அவர்களுக்கு பேனா, பென்சில், பூங்கொத்து மற்றும் இனிப்புகள் வழங்கி வரவேற்பு கொடுத்தனர்.

அப்போது பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் "இங்கே நின்று கொண்டிருப்பவர் யார் என்று தெரிகிறதா..?" என உதயநிதியை காட்டி மாணவர்களிடம் கேட்டார். அதற்கு மாணவர்கள் "அவர் திரைப்படத்தில் நடிக்கும் ஹீரோ" எனக் கூற வகுப்பறையே சிரிப்பலையில் மூழ்கியது.

சினிமா ஹீரோ

பின்னர் சிரித்துக் கொண்டே அமைச்சர் அன்பில் மகேஷ் "இவர் சினிமா ஹீரோதான். ஆனால் தற்போது சட்டமன்ற உறுப்பினராகவும் உள்ளார்" என மாணவர்களிடம் அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் மாணவர்கள் அனைவரும் நன்றாக படிக்க வேண்டும் என அறிவுரை கூறி இருவரும் பள்ளியில் இருந்து புறப்பட்டு சென்றனர்.