பொன்விழா ஆண்டில் புத்தெழுச்சி பெறுகிறது அதிமுக; எம்ஜிஆர் மாளிகை ஆகிறது அதிமுக தலைமையகம்....!

பொன்விழா ஆண்டில் புத்தெழுச்சி பெறுகிறது  அதிமுக;  எம்ஜிஆர் மாளிகை ஆகிறது அதிமுக தலைமையகம்....!


அதிமுக அடியெடுத்து வைக்கும் 50ஆவது பொன் விழா நாளில் அதிமுக தலைமையகத்துக்கு எம்.ஜி.ஆர் பெயர் சூட்டப்படும் என்று ஓபிஎஸ் ஈபிஎஸ் அறிவித்துள்ளனர்.

எம்‌.ஜி.ஆரால் 1972ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழகம்‌ 49 ஆண்டுகளைக்‌ கடந்து, 17.10.2021 ஞாயிற்றுக் கிழமை அன்று “பொன்‌ விழா” காண உள்ளது. இதனைக் கொண்டாட அதிமுகவினர் பல்வேறு ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இன்று 14 அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர்.

அதில்,

அதிமுக பொன்விழா ஆண்டை சிறப்பிக்கும் வகையில் பிரம்மாண்டமான மாநாட்டை நடத்துதல்.

பொன் விழா கொண்டாட்ட சிறப்பு இலட்சினை லோகோ வெளியிடுதல்.

பொன்விழா இலட்சினை பதிக்கப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட பொன்விழா பதக்கங்களை கழகம் முன்னோடிகளுக்கு அணிவித்தல்.

பெரியார், அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா, கழக ஒருங்கிணைப்பாளர், கழக இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோரது படங்களுடன் கழகத்தின் பொன்விழா ஆண்டை குறிப்பிடும் வகையிலான ஒரே மாதிரியான பதாகைகள் மற்றும் சுவரொட்டிகள் மாநிலம் முழுவதும் புதுப்பொலிவுடன் அமைத்தல்.

அதிமுக வளர்ச்சிக்காகத் தொண்டாற்றும் எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், கவிஞர்கள், கலைத்துறையினருக்கு இந்த பொன்விழா ஆண்டு முதல் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சி தலைவி அம்மா ஆகியோரது பெயர்களில் விருதுகள் வழங்கப்படும்.

அதிமுக பொன்விழா ஆண்டை முன்னிட்டு பேச்சுப்‌ போட்டி, கவிதைப்‌ போட்டி, கட்டுரைப்‌ போட்டி, விளையாட்டுப்‌ போட்டி ஆகியவற்றை மாநிலம்‌ முழுவதும்‌ நடத்தி, அதில்‌ வெற்றி பெறுபவர்களுக்கு, அதிமுக சார்பில்‌ நடத்தப்படும்‌ பொன்விழா மாநாட்டில்‌ சான்றிதழும்‌, பரிசும்‌ வழங்கப்படும்.

அதிமுக தொடங்கிய நாள்முதல்‌ இன்றுவரை, அதிமுக வரலாற்றின்‌ முக்கிய நிகழ்வுகளை “மக்கள்‌ தொண்டில்‌ மகத்தான 50 ஆண்டுகள்‌'” என்ற தலைப்பில்‌ குறிப்பேடாக அச்சடித்து வழங்குதல்‌.

தலைமைக் கழகத்திற்குப் புரட்சித்தலைவர் 'எம்ஜிஆர் மாளிகை' என பெயர் சூட்டப்படும்.

அதிமுக பேச்சாளர்கள்‌ மற்றும்‌ கலைக்‌ குழுவினரை கௌரவித்து, உதவி செய்தல்‌.

ஒவ்வொரு மாவட்டத்திலும்‌ அரங்கக்‌ கூட்டங்கள்‌ நடத்தி, அந்தந்த மாவட்டத்தில்‌ உள்ள ஆரம்பக்கால உறுப்பினர்களுக்குப் பொன்விழா நினைவு நாணயம்‌/பதக்கம்‌ வழங்குதல்‌.

உறுப்பினர்‌ பெயர்‌ விவரம்‌ எழுதப்பட்ட சான்றிதழ்‌ வழங்குதல்‌; பொற்கிழி (cash gift) அளித்தல்‌.

எம்.ஜி.ஆர். பற்றியும்‌, ஜெயலலிதா பற்றியும்‌, அதிமுக பற்றியும்‌ நூல்களை எழுதியுள்ள ஆசிரியர்களை அழைத்து கெளரவித்தல்‌.

எம்‌.ஜி.ஆர்‌. மன்றங்களிலிருந்து அதிமுக பணிகளைத்‌ தொடங்கிய மூத்த முன்னோடிகளுக்குச் சிறப்புச் செய்தல்‌.

அதிமுக பொன்விழாவை பொதுமக்களும்‌ அறிந்துகொள்ளும்‌ வகையில்‌, காலச்‌ சுருள்‌ போன்ற வரலாற்று நிகழ்வுகளைக்‌ கொண்ட விளம்பரப்‌ படம்‌ தயாரித்து தொலைக்காட்சிகளிலும்‌, சமூக ஊடகங்களிலும்‌ ஒளிபரப்புதல்‌.

அதிமுக பொன்விழாவை மேலும்‌ சிறப்பித்திடும்‌ வகையில்‌, அதிமுக நிர்வாகிகள்‌ தெரிவிக்கும்‌ பல்வேறு ஆலோசனைகளையும்‌ பரிசீலனை செய்து, இந்தப்‌ பொன்விழா ஆண்டில்‌ நிறைவேற்றப்படும்‌ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.