புரட்சித்தாய் என்பதற்கு சசிகலா என்ன புரட்சி செய்தார்: ஜெயக்குமார்!!!

 புரட்சித்தாய் என்பதற்கு சசிகலா என்ன புரட்சி செய்தார்:  ஜெயக்குமார்!!! 


கல்வெட்டில் பெயர் போட்டுக்கொண்டால் அதிமுக பொதுச்செயலாளர் ஆகிவிட முடியுமா என்றும் புரட்சித் தாய் என்று பெயர் வைத்துக் கொள்ளும் அளவிற்கு சசிகலா என்ன செய்தார் என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

சசிகலாவைத் தியாகத் தலைவி என்று அழைக்காதீர்கள், அவரது அடைமொழியை மாற்றுங்கள் என்று ஜெயலலிதாவின் தனி உதவியாளராக இருந்த பூங்குன்றன் கடந்த அக்டோபர் 4ஆம் தேதி கூறியிருந்தார். அந்தவகையில் நேற்று முதல் சசிகலாவின் அடைமொழி புரட்சித் தாய் என்று மாற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில், அதிமுகவின் பொன்விழா கொண்டாட்டத்தை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஒருபக்கம் கொண்டாடி வரும் நிலையில் இன்னொரு பக்கம் சசிகலா கொண்டாடி வருகிறார். கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக தி.நகரில் உள்ள எம்ஜிஆர் நினைவு இல்லத்தில் கல்வெட்டு வைத்தார். அதில் அதிமுக பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா என்று இடம்பெற்றுள்ளது.

இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “என்ன புரட்சி செய்தார், என்பதற்காக சசிகலா புரட்சித் தாய் என்று பெயரை மாற்றியுள்ளார்.

பெங்களூரு சிறையிலிருந்து சசிகலா வெளியே வந்து எட்டு மாதங்கள் ஆகிறது. இந்த எட்டு மாதங்களில் ஒரு நாளாவது அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா நினைவு இடங்களுக்கு வந்து மரியாதை செலுத்தினாரா. அடுத்த ஆண்டு பொன்விழா வந்திருந்தால் அப்போதுதான் நினைவு இடங்களுக்கு வந்திருப்பார்

பொன்விழா கொண்டாட்டம் எழுச்சியுடன் நடந்து கொண்டிருக்கும் நிலையில் அதனை சசிகலாவால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

1996ஆம் ஆண்டு சசிகலா சார்ந்தவர்களால் தான் அதிமுக தோல்வியுற்றது. தனது குடும்பம் மட்டுமே பொருளாதாரத்தில் முன்னேற வேண்டும் என்பதற்காக பாடுபட்டவர். சசிகலாவால் கட்சிக்காரர்கள் அனுபவித்த கொடுமைகளை யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.

வானத்திலிருந்து குதித்தது போல நான் தான் புரட்சித் தாய் என்று சொல்கிறார். என்ன புரட்சி செய்தார் என்பதற்காக இப்படி பெயரை மாற்றியுள்ளார்?

தியாகத் தலைவி என்ற பெயரை விட்டுவிட்டார். கட்சிக்காக அவர் எந்த தியாகமும் செய்யவில்லை. அவரை யாரும் ஏற்கமாட்டார்கள்” என்றார்.

அப்போது அவரிடம், தற்போது சசிகலாவை இப்படியாக நேரடியாக எதிர்க்கிறீர்கள், ஆனால் நீங்கள் உட்பட ஒரு குழுவாகச் சென்று தான் சசிகலாவை பொதுச் செயலாளராக வர வேண்டும் என்று சொன்னீர்கள் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்குப் பதிலளித்த ஜெயக்குமார், “அந்த காலத்தில் ஒரு தற்காலிக ஏற்பாடாக இது நடந்தது. இப்போது பொருத்தவரை அனைவரும் ஒன்றாக இருக்கிறோம். பொதுக்குழுவில் எடுப்பதுதான் இறுதி முடிவு. அதனால் அவரை நீக்கினோம். அவர் நீதிமன்றத்திற்குச் சென்றார், அப்போது நாங்கள் செய்ததுதான் சரி என்று நீதிமன்றம் கூறியது. தேர்தல் ஆணையமும் சசிகலாவுக்கும் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று தெரிவித்துவிட்டது.

அதிமுகவைப் பொறுத்தவரை நிரந்தர பொதுச் செயலாளர் அம்மா மட்டும்தான். அவர் இல்லை என்றாலும் எங்களோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவருடைய நல்லாசியோடு தான் கட்சியை வழி நடத்திக் கொண்டிருக்கிறோம்” என்றார்.