திமுக, அதிமுக பாணியில் மாவட்டச் செயலாளர்களுக்கு அதிகாரம் .....!!

 திமுக, அதிமுக பாணியில் மாவட்டச் செயலாளர்களுக்கு அதிகாரம் .....!! 


பாமகவின் பொதுக்குழுக் கூட்டம் நேற்று (அக்டோபர் 16) மாலை இணைய வழியில் நடந்தது. உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட நிலையில் பெரிய அளவு வெற்றி ஏதும் பெறாத நிலையில் இந்த கூட்டத்தை நடத்தினார் டாக்டர் ராமதாஸ்.

இந்தப் பொதுக்குழுவில் திமுக, அதிமுக பாணியில் இனி மாசெக்களுக்கே அதிக பவர் தருவது என்று முடிவெடுக்கப்பட்டது.

இதுகுறித்து பாமக பொதுக்குழுவில் இயற்றப்பட்ட தீர்மானத்தில், “தமிழ்நாட்டில் பாட்டாளி மக்கள் கட்சியை வலுப்படுத்தும் நோக்கத்துடன், கட்சியின் நிர்வாக அமைப்பில் பல்வேறு மாற்றங்களைச் செய்ய பொதுக்குழு தீர்மானித்திருக்கிறது. அதனடிப்படையில் மாநில துணைப் பொதுச்செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் ஆகிய பதவிக்கான அதிகாரங்களில் சில மாற்றங்கள் செய்யப்படவுள்ளன.

பாட்டாளி மக்கள் கட்சியின் இப்போதைய நிர்வாக அமைப்பின்படி, ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு துணைப் பொதுச்செயலாளரும், அதற்கு அடுத்த நிலையில் சில மாவட்ட செயலாளர்களும் இருக்கிறார்கள். கட்சியின் விரைவான செயல்பாட்டுக்கு இந்த நிர்வாக அமைப்பு முறை தடையாக இருப்பதாகவும், இதில் மாற்றம் செய்ய வேண்டும் என்றும் கட்சியில் பலர் யோசனை தெரிவித்தார்கள்.

அதன்படி, பாட்டாளி மக்கள் கட்சியின் விதி எண் 10-இல் திருத்தம் செய்யப்பட்டு, மாவட்ட அளவில் மாநில துணைப் பொதுச்செயலாளர் பதவி கைவிடப்படுகிறது. இனி கட்சி ரீதியிலான மாவட்ட அமைப்பு மாவட்ட செயலாளரின் நிர்வாகத்தின் கீழ் இயங்கும். இந்த ஒரு மாற்றத்தைத் தவிர மாவட்ட அளவிலான நிர்வாக அமைப்பு முன்பிருந்த நிலையிலேயே தொடரும். இந்த மாற்றத்தின்படி மாவட்ட செயலாளர்கள் பட்டியலை கட்சித் தலைமை விரைவில் அறிவிக்கும். அதுவரை மாவட்ட அளவில் கட்சிப் பணிகளை ஒருங்கிணைக்க இப்போதுள்ள நிர்வாகிகளை தற்காலிகமாக அதே பதவிகளில் தொடர்வார்கள்”என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

திமுக, அதிமுக பாணியில் மாவட்டச் செயலாளர்களுக்கு அதிகாரம் கொடுத்துள்ளது பாமக.