நவம்பர் 1 முதல் அனைத்து மாணவர்களுக்கும் தினந்தோறும் முழுநேர வகுப்புகள் துவக்கம்

நவம்பர் 1 முதல் அனைத்து மாணவர்களுக்கும் தினந்தோறும் முழுநேர வகுப்புகள் துவக்கம்


ஒன்று முதல் 8ம் வகுப்பு வரை வரும் 1ஆம் தேதி திங்கள்கிழமை முதல் வகுப்புகள்தொடங்க உள்ள நிலையில் , காலையிலிருந்து மாலை வரை வழக்கம்போல் முழு நேரமும் வகுப்புகள் நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

கொரோனா தொற்று காரணமாக 2020 மார்ச் மாதம் முதல் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டன. இந்நிலையில், கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில், ஏற்கனவே 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வரும் நவம்பர் 1-ஆம் தேதி முதல் ஒன்று முதல் 8ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. பள்ளிகளில் மேற்கொள்ளவேண்டிய முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து தொடக்கக் கல்வி இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது.

கிருமி நாசினி மற்றும் கைகழுவ தண்ணீர் ஏற்பாடு, போதுமான அளவு முகக் கவசங்கள் இருப்பு வைத்தல், நடமாடும் மருத்துவ குழு, ஆரம்ப சுகாதார நிலையம், செவிலியர்கள் ஆகியோரின் தொலைபேசி எண்கள் பள்ளியின் அறிவிப்பு பலகையில் வைத்தல், அனைத்து பணியாளர்களும் தடுப்பூசி செலுத்தி இருப்பதை உறுதி செய்தல் உள்ளிட்ட வழிகாட்டுதல்களை தொடக்கக்கல்வி இயக்குனர் வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ள தகவலில், சுழற்சி முறையில் முழு நேரமும் வகுப்புகள் நடைபெறும் என்றும், எந்த கிழமைகளில் எந்த வகுப்பினர் வரவைக்க வேண்டும் என்பதை அந்த அந்த பள்ளி நிர்வாகம் அல்லது தலைமை ஆசிரியர்கள் முடிவு செய்து கொள்ளலாம் என அறிவுறுத்தியிருப்பதாக தெரிவித்தனர். இதுபோன்று ஒரு வகுப்பிற்கு ஒருநாள் விட்டு ஒருநாள் வகுப்புகள் நடைபெறும் என்றும், வழக்கம்போல் சத்துணவு வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

ஒரு வகுப்பறையில் 20 மாணவ மாணவிகள் மட்டுமே இருக்கும் வகையில் சமூக இடைவெளியுடன் அமர வைக்கப்பட உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், மாணவர்கள் கட்டாயம் பள்ளிக்கு வர வேண்டியதில்லை, பெற்றோர் விருப்பத்தின் அடிப்படையில் அனுப்பலாம் எனவும், ஆன்-லைன் வழி கல்வியும் வழங்கப்படுமெனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருந்தாலும் நவம்பர் 1 திங்கட்கிழமை முதல் அனைத்து மாணவர்களுக்கும் தினந்தோறும் முழுநேர வகுப்புகள் துவக்கப்பட உள்ளதால் அனைத்து மாணவர்களும் நேரடியாக பள்ளிக்கு வந்து படிப்பதன் மூலமே முழுமையான கற்றல் பணியை தொடர முடியும் என்றும் தெரிவித்துள்ளனர்.