தன் விருப்பத்திற்கு அரசுப் பள்ளிக்கு விடுமுறை அறிவிப்பு.. ஹெட்மாஸ்டருக்கு டோஸ் விட்ட கலெக்டர்

 தன் விருப்பத்திற்கு அரசுப் பள்ளிக்கு விடுமுறை அறிவிப்பு.. ஹெட்மாஸ்டருக்கு டோஸ் விட்ட கலெக்டர்

https://youtu.be/Tvq0IaQk73Y

மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெறாமல் பள்ளிக்கு விடுமுறை விட்ட தலைமையாசிரியர் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு. 

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுகா, பொரணி அரசு மேல்நிலைப் பள்ளியில் 250 மாணவர்கள் பயின்று வருகின்றனர். 18 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். கொரோனா ஊரடங்கு தளர்வை தொடர்ந்து பள்ளி தற்போது தான் திறக்கப்பட்டுள்ளது. பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியை லோகநாயகிக்கு  நேற்று முன்தினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.  ஆகையால் பள்ளியில் பணிபுரிந்த அனைத்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர் களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் திடீரென பள்ளிக்கு ஆய்வுக்கு சென்றுள்ளார். அப்போது பள்ளியில் மாணவர்கள், ஆசிரியர்கள் இல்லாமல் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனடியாக பள்ளியின் பொறுப்பு தலைமை ஆசிரியர் சண்முகசுந்தரத்தை அழைத்து என்ன என்று கேட்டுள்ளார். அதற்கு அவர் விடுமுறை என தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் ஒருவருக்கு கொரோனா  பாதிக்கப்பட்டதால், பள்ளியின் தலைமையாசிரியர் பொறுப்பு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெறாமல் பள்ளிக்கு விடுமுறை விட்டுள்ளார். மேலும் 18 ஆசிரியர்களில் 6 ஆசிரியர்கள் மட்டும் பள்ளிக்கு வந்துள்ளனர்.

இதை அறிந்த மாவட்ட ஆட்சியர் யாரைக் கேட்டு நீங்கள் பள்ளிக்கு விடுமுறை விட்டீர்கள் இது என்ன உங்களது பள்ளிக்கூடமாக? அரசு பள்ளி. நீண்ட நாட்களுக்கு பிறகு தற்போதுதான் பள்ளி திறக்கப்பட்டுள்ளது. அரசின் நெறிமுறைகளைப் பின்பற்றி பள்ளியை நடத்தி இருக்க வேண்டும் என கண்டித்துள்ளார்.

மேலும் மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெறாமல் விடுமுறை விட்ட தலைமையாசிரியர் மற்றும் விடுப்பு எடுத்துக் கொண்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மதன்குமாருக்கு, மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் உத்தரவிட்டுள்ளார்.தொடர்ந்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், பொரணி அரசு மேல்நிலைப்பள்ளி பொறுப்பு தலைமை ஆசிரியர் மற்றும் விடுப்பு எடுத்துக் கொண்ட ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.