டாஸ்மாக் கடைகளில் ரசீது கட்டாயம்! குடிமக்களின் பொறுமையை சோதிக்கலாமா...?

 டாஸ்மாக் கடைகளில் ரசீது கட்டாயம்! குடிமக்களின் பொறுமையை சோதிக்கலாமா...?

டாஸ்மாக் கடைகளில் மதுபானம் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதை தடுக்க கட்டாயம் ரசீது வழங்க வேண்டும் என்று டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் 5,410 டாஸ்மாக் கடைகளும், 2, 808 பார்களும் உள்ளன. கொரோனா காரணமாக பார்கள் மட்டும் திறக்கப்படவில்லை. டாஸ்மாக் கடைகள் இயங்கி கொண்டிருக்கின்றன. இந்நிலையில் டாஸ்மாக் கடைகளில் அரசு நிர்ணயம் செய்த விலையை விட கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வந்தவண்ணம் இருக்கிறது. இதுதொடர்பாக ஏற்கனவே மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் கூட்டம் நடத்தப்பட்டு, டாஸ்மாக் ஊழியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.

இந்நிலையில், டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் சுப்பிரமணியன், அனைத்து முதுநிலை மண்டல மேலாளர்கள், மாவட்ட மேலாளர்கள், அனைத்து மண்டல சிறப்பு பறக்கும் படை அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்று அனுப்பியுள்ளார். அதில், டாஸ்மாக் கடைகளில் மதுபானம் வாங்க வரும் வாடிக்கையாளர்கள் பார்வையிடும்படி விலைப்பட்டியல் வைக்கப்பட வேண்டும். டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகளில் மொத்தமாக விற்பனை செய்யக் கூடாது.

வாடிக்கையாளர்கள் வாங்கும் மதுவுக்கு உரிய ரசீது வழங்க வேண்டும். இந்த நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றனவா என்று மாவட்ட மேலாளர்கள் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும். இதனை கடைபிடிக்காத ஊழியர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். .ஏற்கனவே உயர்நீதிமன்ற மதுரை கிளையில் குற்றவியல் வழக்கு ஒன்றில் டாஸ்மாக்’ கடைகளில் மொத்தமாக மதுபானங்களை வாங்கி விற்பவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்

என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் மது விற்பனை மொத்தமாக செய்வது கண்டறியப்பட்டால் ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்லாம் சரி.... நீங்கள் சரக்கு எடுத்து கொடுத்து பில் போட்டு கொடுக்கிற வரை குடிமக்கள் தாங்குவார்களா...?  அவங்க பொறுமையா ரொம்பத்தான் சோதிக்கிறார்கள்..,!