பெற்ற குழந்தையை கொடூரமாக தாக்கிய பெண்ணின் காதலன் புதுக்கோட்டையில் கைது: வாட்ஸ்அப்பில் 100 தாக்குதல் வீடியோ*

 VPNews24 


பெற்ற குழந்தையை கொடூரமாக தாக்கிய பெண்ணின் காதலன் புதுக்கோட்டையில் கைது: வாட்ஸ்அப்பில் 100 தாக்குதல் வீடியோ

செஞ்சி: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே மணலப்பாடியை சேர்ந்த கூலி தொழிலாளி வடிவழகன் (26), மனைவி துளசி (23). இவர்களுக்கு கோகுல் (4), பிரதீப் (2) என இரு குழந்தைகள். இதில் பிரதீப்பை துளசி கொடூரமாக தாக்கிய வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். இதுதொடர்பாக போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: வடிவழகனிடம் கோபித்துக்கொண்டு ஆந்திராவில் உள்ள தாய் வீட்டுக்கு குழந்தைகளுடன் துளசி சென்றதும், அங்கே போய் மனைவியிடமிருந்து செல்போனை வடிவழகன் பறித்து வந்துள்ளார். அதை பீரோவில் வைத்திருந்த வடிவழகன் கடந்த 28ம் தேதி எடுத்து ஆன் செய்து பார்த்தபோது குழந்தை பிரதீப்பை துளசி தாக்கும் நான்கு வீடியோக்களை கண்டுள்ளார். அதை அவரது உறவினர்கள் சமூக வலைத்தளங்களில் பரப்பினர்.

இதுகுறித்து, வடிவழகன் அளித்த புகாரின் பேரில், சத்தியமங்கலம் போலீசார் வழக்குப் பதிந்து ஆந்திர மாநிலத்துக்கு சென்று துளசியை கைது செய்து சிறையில் அடைந்தனர். மேலும் துளசி கொடுத்த அவரது காதலன் பிரேம்குமாரின் செல்போன் எண் மூலம் போலீசார் அவரை தேடி வந்தனர். நேற்று அந்த செல்போன் எண்ணை டிரேஸ் செய்தபோது புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் இருப்பது தெரியவந்தது. உடனே தனிப்படையினர் அங்கு சென்று பிரேம்குமாரை கைது செய்தனர். விசாரணையில் அவரது உண்மையான பெயர் மணிகண்டன் என்பதும், புதுக்கோட்டை அடுத்த மோட்சவாடி கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் மகன் என்பதும் தெரியவந்தது. தொடர்ந்து அவரை செஞ்சிக்கு அழைத்து வந்து விசாரணை செய்தனர்.

வடிவழகன், துளசி சென்னையில் இருந்தபோது அங்கிருந்தே போனில் மணிகண்டனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து போனிலேயே காதலை வளர்த்துள்ளனர். அவரது மாயவலையில் வீழ்ந்த துளசி, அவர் சொல்வதையெல்லாம் செய்துள்ளார். அப்போது, முதல் குழந்தை துளசியை போல் அழகாக இருப்பதாகவும், 2வது குழந்தை பிரதீப் தந்தை முகஜாடையில் இருப்பதாகவும் கூறி, அவனை தனக்கு பிடிக்கவில்லை என்று துளசியிடம் மணிகண்டன் தெரிவித்துள்ளார். இதனால், அக்குழந்தை மீது துளசிக்கு வெறுப்பு துவங்கியுள்ளதாம். மேலும், நீ மட்டும் குழந்தை, கணவருடன் ஜாலியாக இருக்கிறாய்?, என்று குடும்பத்தை பிரிக்கும் விதமாக பேச்சில் ஈடுபட்டுள்ளார் காதலன்.

ஒரு கட்டத்தில், நீ என்னுடன் வந்துவிடு, உன் கணவருக்கு வயது அதிகம், வயது குறைவான நீ எப்படி அவரை திருமணம் செய்து கொண்டாய் என்றும், உன்னை சந்தோஷமாக நான் பார்த்துக்கொள்வேன் என்றும் ஆசைவார்த்தைகளை மணிகண்டன் கூறியுள்ளார். அவரது ஆசைவார்த்தைகளை நம்பிய துளசி, தனது 2வது குழந்தையை அடித்து கொடுமைப்படுத்தும் வீடியோவை எடுத்து, கள்ளக்காதலனை மகிழ்ச்சிப்படுத்த வாட்ஸ்அப்பில் அனுப்பி வைத்துள்ளார். மேலும், கணவனை பிரிந்து செல்ல முடிவு செய்துதான் குழந்தையை அடித்து கொடுமை செய்து, குடும்பத்திலும் தகராறு செய்துள்ளார்.

ஒரு கட்டத்தில் பிரச்னை அதிகரிக்கவே இதுதான் வாய்ப்பு என்று கருதி, தாய் வீட்டுக்கு சென்றுள்ளார் துளசி. மணிகண்டனிடம் கைப்பற்றப்பட்ட செல்போனில் குழந்தையை தாக்கும் 100க்கும் மேற்பட்ட வீடியோக்கள் இருந்துள்ளது. அதில் 4 மட்டுமே வெளியாகியுள்ளது. பிரதீப்பை கொடூரமாக தாக்கி அந்த வீடியோவை, காதலனின் வாட்ஸ்அப் நம்பருக்கு துளசிதான் அனுப்பி வைத்துள்ளார். துளசியிடம் போலீசார் நடத்திய விசாரணையில், 6 மாதத்துக்கு முன்பு, ராங்க்கால் மூலம் என்னை ஒருவர் தொடர்பு கொண்டார். அவர்தான் மணிகண்டன். தன்னை பிரேம்குமார் என்று அறிமுகப்படுத்தி காதலாக பேசினார். இதில் எங்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது. தொடர்ந்து அவருடன் பேசி வந்தேன் என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது.

ஊர் பஞ்சாயத்தார் முன்பு விவாகரத்து

வடிவழகனுக்கும், துளசிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து சென்ற நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்புதான் துளசியின் வீட்டுக்கு வடிவழகன் குடும்பத்தார் சென்றிருந்தார்களாம். இனிமேல், சேர்ந்து வாழ முடியாது என்று கூறி, பெண் வீட்டாரையும், அக்கிராம முக்கியஸ்தர்களையும் அழைத்து விவாகரத்து குறித்து எழுதி வாங்கிக் கொண்டார்களாம்.