விவசாயசட்டங்களுக்கு எதிரான தீர்மானம்:..... அதிமுக, பாஜக ஒரு பக்கம்.. பாமக மறுபக்கம்.....மகிழ்ச்சியில் திமுக

விவசாயசட்டங்களுக்கு எதிரான தீர்மானம்:..... அதிமுக, பாஜக ஒரு பக்கம்.. பாமக மறுபக்கம்.....மகிழ்ச்சியில்திமுக


 *திமுக அரசு கொண்டு வந்த விவசாய சட்டங்களுக்கு எதிரான தீர்மானத்திற்கு பாமக ஆதரவு அளித்துள்ளது உட்பட பல்வேறு சுவாரஸ்ய நிகழ்ச்சிகளுக்கு சாட்சி ஆகிவிட்டது இன்றைய சட்டசபை கூட்டம்.*

*அதிமுக பாஜக கூட்டணியில் அங்கம் வகித்த போதிலும் மத்திய அரசு கொண்டு வந்த மூன்று விவசாய சட்டங்களுக்கு எதிராக தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு பாமக ஆதரவு தெரிவித்துள்ளது.*

*பாஜக இந்த தீர்மானத்திற்கு எதிராக உடனடியாக வெளிநடப்பு செய்து விட்ட போதிலும், அதிமுக தயங்கி தயங்கி, துரைமுருகனின் கேள்வியால் வெளிநடப்பு செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது.*

*இப்படியாக பல்வேறு முரண்பட்ட சுவாரசிய சம்பவங்களுக்கு, இன்றைய சட்டசபை கூட்டம் சாட்சியாக மாறிவிட்டது. இத்தனைக்கும் காரணம் முதல்வர் ஸ்டாலின் கொண்டுவந்த மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிரான தனி தீர்மானம்தான். மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லையில், பஞ்சாப், சண்டிகர் உள்ளிட்ட பல மாநில விவசாயிகள் நீண்ட காலமாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவு வழங்கும் விதமாக , பஞ்சாப், கேரளா, ராஜஸ்தான் உள்ளிட்ட சில சட்டசபையில் மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதே போல தமிழக சட்டசபையில் இன்று தீர்மானம் கொண்டு வந்தார் முதல்வர் ஸ்டாலின்.*

*இதையடுத்து தீர்மானம் தாக்கல் செய்யும்போது நயினார் நாகேந்திரன் தலைமையில் பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துவிட்டனர். கூட்டணியில் இருந்த போதிலும் மத்தியில் இந்த சட்டம் வரும்போது அதற்கு ஆதரவு அளித்த போதிலும், உடனடியாக அதிமுக வெளிநடப்பு செய்யவில்லை. இது அங்கிருந்த பத்திரிக்கையாளர்களுக்கு கூட ஆச்சரியம் தந்தது. விவசாய சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் மத்தியில் அதிருப்தி இருப்பதால் அதிமுக வெளிநடப்பு செய்யவில்லை என்று கூறப்பட்டது.*

*ஆனால் இந்த சட்டத்துக்கு நீங்கள் ஆதரவு தருகிறீர்களா இல்லையா என்று துரைமுருகன் நேரடியாக கேள்வி எழுப்பியதால் வேறுவழியில்லாமல் அதிமுக வெளிநடப்பு செய்தது . அது கூட ஓகே. பாஜக கூட்டணியில் இருக்கும் அதிமுக வெளிநடப்பு செய்தது இயல்பான கூட்டணி தர்மம் என்று எடுத்துக்கொள்ளலாம். ஆனால் கடந்த லோக்சபா தேர்தல் மற்றும் சட்டசபை தேர்தல் ஆகியவற்றில் அதிமுக மற்றும் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ள பாமக வெளிநடப்பு செய்யவில்லை. மாறாக மத்திய அரசின் சட்டங்களுக்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவு வழங்கியது.*

*திமுக மற்றும் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், விடுதலை சிறுத்தைகள் ஆகியவற்றின் ஆதரவோடு அதிமுக கூட்டணியில் உள்ள பாமக ஆதரவையும் பெற்று இந்த தீர்மானத்தை நிறைவேறியுள்ளது அரசு. வன்னியர்களுக்கான உள் இட ஒதுக்கீட்டை முதல்வர் ஸ்டாலின் அரசு அரசாணையாக வெளியிட்டதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் நன்றி தெரிவித்திருந்தார். ராமதாஸ் பிறந்த தினம் அன்று முதல்வர் ஸ்டாலின் அவருக்கு தொலைபேசியில் அழைத்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். இப்படியாக நெருக்கம் காட்ட ஆரம்பித்த நிலையில் தான் முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானத்திற்கு பாமக ஆதரவு தந்துள்ளது குறிப்பிடத்தக்க அம்சமாக மாறியுள்ளது. அரசியலில் இது பல்வேறு, விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது.*

*முன்னதாக, விவசாயிகள் மத்தியில் வேளாண் சட்டம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது" என்று பாமக சட்டமன்ற குழுத் தலைவர் ஜி.கே.மணி பேசியிருந்தார். பாமக உறுப்பினர்கள் பச்சை துண்டுடன் சட்டசபைக்கு வந்திருந்தனர். வேளாண் துறை மீதான மானிய கோரிக்கை மீது விவாதம் நடப்பதால் பச்சை துண்டுடன் வந்திருந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.*