நீட் தேர்வு, தேசிய கல்விக் கொள்கை.. அரசு பொதுத்தேர்வுகள் போன்ற சவால்களை எப்படி சமாளிக்கப் போகிறார் அன்பில் மகேஷ்!
தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு 43 வயதுதான் என்றாலும் நீட், தேசிய கல்விக் கொள்கை, அனைத்து நுழைவுத் தேர்வுகள் அரசு பொதுத்தேர்வுகள் போன்ற சவால்களை எப்படி சமாளிக்கப் போகிறார்....? இத்தகைய முக்கிய பிரச்சினைகளை இளம் அமைச்சரான இவர் எப்படி சமாளிக்க போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவெறும்பூர் தொகுதி எம்எல்ஏவாக உள்ளவர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. இவர் அன்பில் பொய்யாமொழியின் மகனாவார். இவர் ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலினுக்கு நெருக்கமானவரும் நம்பகமானவரும் கூட.
இவர் திருவெறும்பூர் தொகுதியில் 2016 ஆம் ஆண்டு போட்டியிட்டு எம்எல்ஏவானார். அதன்பின்னர் தற்போது மீண்டும் எம்எல்ஏவாகியுள்ள அன்பில் மகேஷுக்கு அமைச்சரவையில் நிச்சயம் இடம் இருக்கும் என யூகிக்கப்டப்பட்டது.
ஆனால் அவருக்கு இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத் துறை ஒதுக்கீடு செய்யப்படும் என யோசித்திருந்த நிலையில் அவருக்கு மிக முக்கிய பொறுப்பான பள்ளிக் கல்வித் துறை வழங்கப்பட்டுள்ளது. 43 வயதே ஆகும் அன்பில் மகேஷ் பள்ளிக் கல்வித் துறையில் உள்ள பிரச்சினைகளை எப்படி கையாள்வார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்வதற்காக மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்படும். தமிழக சட்டசபையில் நீட் தேர்வை ரத்து செய்து தீர்மானம் நிறைவேற்றப்படும் என திமுக தலைவரும் முதல்வராக பொறுப்பேற்கவுள்ள மு.க.ஸ்டாலினும் தனது தேர்தல் பிரச்சாரத்தில் தெரிவித்திருந்தார்.
மத்திய அரசுக்கு நீட்டுக்கு விலக்கு கோரி இது போன்ற ஒரு கோரிக்கை மனுவை முந்தைய அதிமுக அரசும் அனுப்பியது. தமிழக சட்டசபையில் தீர்மானமும் நிறைவேற்றியது. ஆனால் நீட் விலக்கு குறித்து மத்திய அரசு கப்சிப் என இருந்துவிட்டது. இத்தனைக்கும் அதிமுக கூட்டணியில் பாஜக இருந்தது. எனினும் ஒன்று நடக்கவில்லை.
நீட் மட்டுமில்லை. தேசிய கல்விக் கொள்கை, முதுகலை உள்ளிட்ட மருத்துவப் படிப்புகள் உள்பட பல துறைகளில் புதிதாக நுழைவு தேர்வுகள் முளைத்துள்ளன. இது போன்ற தேர்வுகள் ஏழை மாணவர்களுக்கும் கிராமப்புற மாணவர்களுக்கும் முட்டுக்கட்டையாக இருக்கிறது. இதை அன்பில் மகேஷ் சமாளிப்பதே ஒரு சவாலான காரியம்தான்.
எம்சிஏ பட்டதாரியான அன்பில் மகேஷ் மிகவும் துடிப்பான இளைஞர். தாத்தா அன்பில் தர்மலிங்கம், அப்பா அன்பில் பொய்யாமொழி, பெரியப்பா அன்பில் பெரியசாமி உள்ளிட்டோரிடம் நிச்சயம் வித்தையை கற்று தேர்ந்திருப்பார் என்றே கூறுகிறார்கள்.
தேர்தல் அறிக்கைகளை சொல்லியபடி நிறைவேற்ற வேண்டும், அப்போதுதான் மக்களுக்கு அளித்த வாக்குகள் நிறைவேற்றப்பட்டதாக அர்த்தம் என்பது ஸ்டாலினுக்கு தெரியாதா என்ன? அவருக்கு கருணாநிதியிடம் கற்ற வித்தையை மொத்தமாக இறக்கி அன்பில் மகேஷுக்கு வழிகாட்டியாக இருந்து சிறப்பாக செயல்பட வைப்பார்.
அவருடன் சேர்ந்து மூத்த அமைச்சர்களும் மகேஷுக்கு உதவுவார்கள் என்றே தெரிகிறது. அடுத்த 10 ஆண்டுகளுக்கான பொருளாதார திட்டங்களை வகுத்திருக்கிறாரே ஸ்டாலின், 2026 இல் மீண்டும் திமுக ஆட்சியே தொடர வேண்டும் என்றால் பள்ளிக் கல்வித் துறையில் உள்ள சவால்களை களைய வேண்டும் என்பதை அவர் நன்கு அறிந்திருப்பார்.
கொரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்டு உள்ள பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் மற்றும் ஆல் பாஸ் என்று பத்தாம் வகுப்பிற்கு முன்னாள் முதல்வர் அறிவித்ததால் அவர்களுக்கு எப்படி தேர்வு நடத்துவது என்ன மதிப்பெண் பெறுவது எவ்வாறு சான்றிதழ் வழங்குவது அவர்களை எப்படி பிளஸ்-1 அல்லது பாலிடெக்னிக் கல்லூரியில் சேர்ப்பது என்பன போன்ற பல்வேறு குழப்பங்கள் நிலவி வருகின்றன. இதற்கு இளம் அமைச்சர் எவ்வாறு தீர்வு காண போகிறார்....?
அதோடு மட்டுமல்ல கடந்த ஓராண்டாக பள்ளி கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகி உள்ளது ஆன்லைன் வகுப்புகள் பெருமளவில் மாணவர்களுக்கு கைகொடுக்கவில்லை. தனியார் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் அப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் வாழ்வாதாரம் இன்று தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த மன உளைச்சலில் 300க்கும் மேற்பட்ட தனியார் பள்ளி நிர்வாகிகள் கடந்த ஆண்டில் மட்டும் மரணமடைந்துள்ளனர். இப்படி எண்ணற்ற பிரச்சனைகளில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கும் பள்ளிக்கல்வித்துறைக்கு புத்துயிர் அளிப்பாரா துடிப்புமிக்க இந்த புதிய அமைச்சர்.......?!