அன்பில் மகேஸ் பொய்யாமொழி அரசியல் பயணம்....! 'மூன்று தலைமுறையாக திமுக; முதல் முறை அமைச்சர்!!
தாத்தா அன்பில் தர்மலிங்கம், அப்பா அன்பில் பொய்யாமொழி, பெரியப்பா அன்பில் பெரியசாமி என பரம்பரை திமுக குடும்பம்.
2021 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சியமைத்தால், அமைச்சர் பதவி நிச்சயம் என எதிர்பார்க்கப்பட்டவர்களில் ஒருவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி. எதிர்பார்த்தபடியே திருச்சி திருவெறும்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அன்பில்மகேஸ், பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மறைந்த திமுக தலைவர் கருணாநிதி குடும்ப நண்பரின் வாரிசு, திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் நெருக்கமான நண்பர் அன்பில் மகேஷ். இது தலைமுறைகளை கடந்த நட்பு. முன்பு கருணாநிதியும், அன்பில் தர்மலிங்கமும் நட்புடன் பழகி வந்தனர்.
அந்த நட்பு அவர்கள் மகன்களான ஸ்டாலின் - அன்பில் பொய்யாமொழியிடமும் தொடர்ந்தது. தற்போது தலைமுறைகளை தாண்டி இளைய தலைமுறையான உதயநிதி ஸ்டாலின், அன்பில் மகேஸ்பொய்யாமொழி வரை தொடர்கிறது.மகேஸின் தந்தை அன்பில் பொய்யாமொழி, துரதிர்ஷ்டவசமாக இளம் வயதிலேயே இறந்து போக, அவரது மகனான அன்பில் மகேஸ், ஸ்டாலின் குடும்பத்தில் இன்னொரு பிள்ளையாகவே மாறிப்போனார்.
ஸ்டாலின் வீட்டிலேயே வளர்ந்ததில், உதயநிதி ஸ்டாலினுக்கு நெருக்கமான நண்பராக மாறியதில் வியப்பேதும் இல்லை. ஆரம்பத்தில் நட்பின் அடிப்படையில் உதயநிதியின் ரசிகர்மன்றத்தைக் கவனித்து வந்த அன்பில் மகேஸுக்கு, 2015 ல் திமுகவின் மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் பதவி வழங்கப்பட்டது.
திமுக திருச்சி தெற்கு மாவட்ட செயலாளராகவும் இருக்கும் அன்பில் மகேஸுக்கு, 2015 ல் திமுகவின் மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் பதவி வழங்கப்பட்டது. திமுக திருச்சி தெற்கு மாவட்ட செயலாளராகவும் இருக்கும் அன்பில் மகேஸ் 1977 ஆம் ஆண்டு, டிசம்பர் 2 ல் பிறந்தவர். எம்சிஏ பட்டதாரி. மிகவும் துடிப்பான இளைஞர். தாத்தா அன்பில் தர்மலிங்கம், அப்பா அன்பில் பொய்யாமொழி, பெரியப்பா அன்பில் பெரியசாமி என பரம்பரை திமுக குடும்பம் என்பதால், அரசியல் ரத்தத்திலேயே கலந்த ஒன்று.
2016 ஆம் ஆண்டு தேர்தலில் திருவெறும்பூர் தொகுதியில் திமுக வேட்பாளராகவும் களமிறங்கிய அன்பில் மகேஸ், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் கலைச்செல்வனை 16,695 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தார்.
இந்த நிலையில், 2021 தேர்தலிலும் அதே தொகுதியில் போட்டியிட்டு அதிமுக வேட்பாளரை 49,697 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்று, இரண்டாவது முறையாக சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்ட அன்பில், அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.