உலகின் மிக பிரமாண்டமான எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனம் ஓசூரில் அமைகிறது

 

உலகின் மிக பிரமாண்டமான எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனம் ஓசூரில் அமைகிறது

ஓசூரில் அமைக்கப்படும் ஓலா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆலையின் கட்டுமானத்திற்கான ஆரம்ப கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இதுகுறித்த வீடியோவை ஓலா நிறுவனம் பெருமிதத்துடன் பகிர்ந்து கொண்டுள்ளது.

வாடகை டாக்சி சேவையில் பிரபலமான ஓலா நிறுவனம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பிலும் இறங்கி இருக்கிறது. இதற்காக, உலகின் மிகப்பெரிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆலையை ஓசூரில் அமைக்க முடிவு செய்தது. புதிய ஆலை அமைப்பதற்காக தமிழக அரசுடன் ஒப்பந்தம் செய்த நிலையில், ஓலா ஆலைக்கான இடம் உடனடியாக ஒதுக்கீடு செய்யப்பட்டது.

ரூ.2,400 கோடி முதலீட்டில் அமைக்கப்பட உள்ள இந்த ஆலைக்கான இடம் கடந்த ஜனவரி மாதம் ஓசூரில் கையகப்படுத்தப்பட்டது. இந்த நிலையில், கையகப்படுத்தப்பட்ட இடத்தில் உடனே ஆலைக்கான கட்டுமானப் பணிகளை ஓலா நிறுவனம் துவங்கி இருக்கிறது

கடந்த 7ந் தேதி முதல் ஆலை கட்டுமானத்திற்கான ஆரம்ப கட்டப் பணிகள் நடந்து வருகின்றன. அதாவது, நிலத்தை சமன் செய்து ஆலை கட்டமைப்புக்கு ஏற்றவாறு மாற்றும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இதில், ஏராளமான எந்திரங்கள், டிப்பர் லாரிகள் ஈடுபட்டுள்ளன. இதுகுறித்த வீடியோவை ஓலா பெருமையுடன் வெளியிட்டுள்ளது.

இந்த புதிய ஆலை கட்டுமானத்தை மிக மிக விரைவாக செய்வதற்கான திட்டத்தை ஓலா வகுத்துள்ளது. மிக குறுகிய காலத்தில் 10 மில்லியன் பணியாட்களின் வேலை நேரத்தில் இந்த ஆலை கட்டுமானத்தை நிறைவு செய்து உற்பத்தியை துவங்க ஓலா திட்டமிட்டு இருக்கிறது.

மேலும், சுற்றுச்சூழலுக்கு உகந்த அம்சங்களுடன் இந்த ஆலையை அமைக்கவும் ஓலா திட்டமிட்டுள்ளது. தொழிற்சாலை வளாகத்திற்குள் அதிக அளவில் செடி, கொடி, மரங்களுடன் பசுமை சூழலுடன் இந்த ஆலை அமைக்கப்பட உள்ளது. ஆலை அமைக்கப்பட உள்ள இடத்தில் இருந்த மரங்களும் வெட்டி வீசி விடாமல், பாதுகாப்பாக வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளன.

ஓசூரில் அமைக்கப்படும் ஓலா ஆலையில் ஆண்டுக்கு 2 மில்லியன் எலெக்ட்ரிக் ஸ்கட்டர்களை உற்பத்தி செய்யும் திறனுடன் உருவாக்க ஓலா திட்டமிட்டுள்ளது. இந்தியா மட்டுமின்றி, அமெரிக்கா, ஐரோப்பா, இங்கிலாந்து, ஆசிய பசிபிக் பிராந்திய நாடுகள், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளிலும் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு செல்லும்.

இந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆலையில் உற்பத்திப் பிரிவில் மனித ஆற்றல் மட்டுமின்றி, செயற்கை நுண்ணறிவு திறனுடன் கூடிய எந்திரங்களும் பயன்படுத்தப்பட உள்ளன. இந்த ஆலை மூலமாக 10,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று ஓலா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த ஆலையில் 5,000 ரோபோக்கள் உற்பத்திப் பிரிவுகளில் பயன்படுத்தப்பட உள்ளன. இதனால், இந்தியாவின் அதிக தானியங்கி தொழில்நுட்பம் கொண்ட வாகன உற்பத்தி ஆலையாகவும் அமைய இருக்கிறது. ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்திக்கான சப்ளையர்கள் ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்டுவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எனவே, கட்டுமானப் பணிகள் முடிந்தவுடன் இந்த ஆண்டு இறுதியிலேயே இந்த ஆலையில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தி துவங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த சில மாதங்களில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை முறைப்படி அறிமுகம் செய்வதற்கும் ஓலா திட்டமிட்டுள்ளது.


Popular posts
புதிய கல்விக்கொள்கை கட்டுக்கதைகள்; உண்மையும்... புரட்டும்..... தெளிவாக விளக்கும் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி!
படம்
திமுக தருமபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் தர்மசெல்வன் நீக்கம்.
படம்
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட மகளிர் அணி தலைவி நியமனம் அதிமுக துணை பொது செயலாளர் கே. பி. முனுசாமி எம் எல் ஏ.வை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
படம்
அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் தான் அதிக மாணவர்கள் படிக்கிறார்கள்; ஆய்வில் தகவல்...
படம்
ஓசூர் மாநகராட்சியின் அத்துமீறல்களை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..
படம்