மு.க.ஸ்டாலின் சொல்லியா நான் வாழ வேண்டும்- எடப்பாடி பழனிசாமி பதிலடி
சிங்கப்பூர் மாதிரி அருமையாக, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தி.நகர் பாண்டிபஜார் அற்புதமாக அமைக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று சென்னை தியாக ராயநகர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் சத்யாவை ஆதரித்து அசோக் நகரில் பேசியதாவது:-
ஸ்டாலின், அ.தி.மு.க இந்த தேர்தலோடு காணாமல் போய்விடும் என்ற அவதூறு பிரச்சாரத்தை செய்து வருகிறார். ஸ்டாலின் சென்னை தி.நகரில் நடைபெறும் பிரச்சார கூட்டத்தில் வந்து பார்த்தால்தான் கழகத்தின் வலுவையும், மக்களின் செல்வாக்கினையும், நீங்கள் பார்க்க முடியும். தி.நகர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க.வின் கோட்டை. நமது வெற்றி வேட்பாளர் சத்தியநாராயணன் வெற்றி பெற்று வரும் போது, அம்மாவின் அரசு மீண்டும் அமையும். அப்பொழுது உங்கள் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்.
ஆனால், நாங்கள் உண்மையான தெய்வ பக்தி கொண்டவர்கள். தெய்வ பக்தி இருப்பவர்களிடம் இரக்கம் கிடைக்கும், பண்பு இருக்கும், உயர்வு கிடைக்கும் இவையெல்லாம் இருக்கும் இடத்தில் தான் பக்தியும் இருக்கும். இது நமது வேட்பாளரிடத்தில் அதிகம் இருக்கின்றது. அவரது பெயரிலேயே இருக்கிறது நாராயணன் என்று.
தி.மு.க.வினர் மக்களுக்காக அ.தி.மு.க அரசு எதுவுமே செய்யவில்லை என்று கூறிவருகின்றனர். அவர்கள் தி.நகருக்கு வந்து பார்க்கட்டும். சிங்கப்பூர் மாதிரி அருமையாக, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தி.நகர் பாண்டிபஜார் அற்புதமாக அமைக்கப்பட்டுள்ளது. மாம்பலம் ரெயில் நிலையத்திலிருந்து தி.நகர் ரெயில் நிலையம் வரை ரூ.20 கோடி மதிப்பீட்டில் ஆகாய நடைபாதை அமைக்கப்பட்டு வருகிறது. விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படும். கழக ஆட்சியில் ரங்கராஜபுரம் ரயில்வே பாலம் கட்டி முடிக்கப்பட்டு, திறக்கப்பட்டது. கோடம்பாக்கம் பாலம் பழுதுபார்க்கப்பட்டு சீரமைக்கப்பட்டது. ரூ.11 கோடியில் 121 தார்சாலைப்பணிகள் இந்தப் பகுதியில் செய்யப்பட்டுள்ளது. 127 சாலைப்பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ரூ.6 கோடி செலவில் 34 சிமெண்ட் கான்கிரீட் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன, 15 பணிகள் நடைபெற்று வருகின்றன. ரூ.2.30 கோடி செலவில் 26 பூங்காக்களை மேம்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதில் 16 பணிகள் நிறைவு பெற்றுள்ளது.
அதேபோல, காமராஜ் காலனியில் நவீன உடற் பயிற்சி கூடம் ரூ.4 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது. ரூ.19 கோடி செலவில் 9 மழைநீர் வடிகால் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. சென்னை மாநகரத்தில் ஏழை, எளிய மக்களுக்கு அவர்கள் வசிக்கும் பகுதியிலே சிகிச்சை பெற்றுக் கொள்ளும் வகையில் 200 அம்மா மினி கிளினிக்குகள் அமைக்க முடிவு செய்யப்பட்டு, 192 அம்மா மினிகிளினிக்குகள் திறக்கப்பட்டுள்ளது.
இந்த தொகுதியில் 6 அம்மா மினி கிளினிக்குகள் திறக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே ஒரே சமயத்தில் 2000 அம்மா மினி கிளினிக்குகளைத் திறந்த ஒரே மாநிலம் தமிழகம் தான்.
சென்னை மாநகரத்தில் இருக்கின்ற அனைத்து மருத்துவமனைகளிலும் உயர்தர சிகிச்சை அளிப்பதற்காக உயர்தர மருத்துவ கருவிகளை வழங்கி இருக்கிறோம். இந்தியாவிலேயே கொரோனா வைரஸ் கட்டுப்படுத்துவதில் முதல் மாநிலம் தமிழ்நாடு. பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனைகளை எடுத்தோம். அந்த பரிசோதனைக்கு செலவு அதிகம். எங்களுக்கு தமிழ்நாட்டு மக்களின் உயிர் தான் முக்கியம், பணம் முக்கியமில்லை என்று பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ஆர்.டி. பி.சி.ஆர். பரிசோதனைகளை எடுத்தோம். அதில் நோய் அறிகுறி தென்பட்டால் அம்மாவுடைய அரசு உரிய சிகிச்சை அளித்து அவர்களை குணமடைய செய்து, வீட்டிற்கு அனுப்பி வைத்தோம்.
பிரதமருடன் காணொலி காட்சி மூலமாக முதல்-அமைச்சர்கள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பிரதமர் உரையாற்றும்போது தமிழ்நாட்டில் கொரோனா தொற்றுநோய் மிகச் சிறப்பாக கட்டுப்பட்டுத்தப்பட்டுள்ளது, இதனையே அனைத்து மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் என்று பாராட்டினார்.
சென்னை மாநகர மக்களுக்கு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சுமார் 1000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு சாலைகளை புதுப்பித்திருக்கிறோம், அடையாறு, கூவம் ஆறு சீரமைத்திருக்கிறோம். மழை காலங்களில் வடிகால் வசதி செய்து எங்கும் தண்ணீர் தேங்காமல் வெளியேற்றப்பட்டு இருக்கிறது.
அம்மாவின் அரசு வடிகால் வசதியை சிறப்பாக செய்திருக்கிறது. சென்னை மாநகரத்தில் மட்டும் மழைநீர் கால்வாய் 954 கிலோ மீட்டர் நீள சாலைகளுக்கு கால்வாய்கள் அமைத்து, தொடர் மழை மற்றும் புயல் வந்தாலும் எந்த வீதியிலும் தண்ணீர் தேங்காமல் வெளியேற்றக் கூடிய சூழ்நிலையை உருவாக்கி தந்த அரசு அம்மாவின் அரசு. தி.மு.க. ஆட்சியில் ஒன்றுமே செய்யவில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.