சூப்பர் சரிவில் தங்கம் விலை.. தங்கத்தை அள்ள இது சரியான நேரமா.. இந்த வாரம் எப்படியிருக்கும்?

 சூப்பர் சரிவில் தங்கம் விலை.. தங்கத்தை அள்ள இது சரியான நேரமா.. இந்த வாரம் எப்படியிருக்கும்?



பட்ஜெட் 2021 அறிவிப்பினை தொடர்ந்து சர்வதேச காரணிகளும் தங்கத்திற்கு எதிராக இருந்த நிலையில், கடந்த இரண்டு வார காலமாகவே தங்கம் விலையானது தொடர்ந்து சரிவினைக் கண்டு வருகின்றது. இது தங்கத்தினை வாங்க சரியான நேரமாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் இது கடந்த ஆகஸ்ட் மாத உச்சத்தில் இருந்து பார்க்கும் போது சுமார் 9000 ரூபாய் சரிவிலேயே காணப்படுகிறது. அதிலும் கடந்த வெள்ளிக்கிழமையன்று பிப்ரவரி காண்டிரக்ட் எக்ஸ்பெய்ரி என்பதால், ஏப்ரல் காண்டிரக்டில் வாங்க சரியான நேரமாக பார்க்கப்படுகிறது. அதோடு பட்ஜெட் 2021ல் இறக்குமதி வரியும் குறைந்துள்ளது. இதனால் இனி வரும் காலத்தில் பிசிகல் தங்கத்தின் தேவை அதிகரிக்கலாம் என்பதால், இது வாங்க சரியான நேரமாகவே பார்க்கப்படுகிறது.   

கடந்த சில வாரங்களாக தொடர்ச்சியாக சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக, தங்கம் விலையானது தொடர்ச்சியாக சரிந்து வருகிறது. அதுவும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இருந்து பார்க்கும் போது பலத்த சரிவிலேயே காணப்படுகிறது. ஆக இது தங்கம் வாங்குபவர்களுக்கும், முதலீட்டாளர்களுக்கும் நல்ல வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது. அதோடு வார கேண்டில், தற்போது பையிங் திரும்ப ஆயத்தமாகிக் கொண்டுள்ள நிலையில், திங்கட்கிழமையன்று தொடக்கத்தினை பொறுத்து மீண்டும் ஏற்றம் காணுமா? இனி எப்படி இருக்கும் என்பது தெரியும். எனினும் நீண்டகால முதலீட்டாளர்களுக்கு நிச்சயம் இது நல்ல வாய்ப்பு தான். ஏனெனில் குறைந்த விலையானது முதலீட்டாளர்களை வாங்க தூண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். 



 இந்திய எம்சிஎக்ஸ் கமாடிட்டி வர்த்தகத்தில் எவ்வளவு? ஆபரணத் தங்கத்தின் விலை எவ்வளவு? எவ்வளவு குறைந்திருக்கு அல்லது விலை கூடிருக்கா? தங்கத்திற்கு சாதக பாதகமான காரணிகள் என்னென்ன? இனி நீண்டகால நோக்கில் இனி தங்கம் விலை எப்படி இருக்கும்? வரும் வாரத்தில் எப்படி இருக்கும்? நிபுணர்கள் என்ன கூறுகின்றனர், உள்ளிட்ட பலவற்றையும் இன்று பார்க்கவிருக்கிறோம். 

சர்வதேச சந்தையில் கடந்த வாரத்தில், முதல் நாள் தொடங்கிய சரிவானது, தொடர்ச்சியாக நான்கு நாட்கள் சரிவினையே கண்டு வந்தது. வாரத்தின் கடைசி வர்த்தக நாளான வெள்ளிக்கிழமையன்று மட்டும் சற்று ஏற்றம் கண்டுள்ளது. கடந்த திங்கட்கிழமையன்று 1865 டாலர்களாக தொடங்கிய நிலையில், அன்றே அதிகபட்சமாக 1876 டாலராக அதிகரித்தது. எனினும் வாரத்தின் இறுதி நாளான வெள்ளிக்கிழமையன்று 1815.10 டாலர்களாக முடிவடைந்தது. எனினும் கடந்த திங்கட்கிழமையன்று உச்சமான 1876 டாலரில் இருந்து பார்க்கும்போது, வியாழக்கிழமையன்று தொட்ட குறைந்தபட்ச விலையான 1784 டாலர்களுடன் ஒப்பிடும்போது, கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 92 டாலர்கள் சரிவிலேயே உள்ளது. ஆக இது தங்கம் வாங்க சரியான இடமாகத் தான் பார்க்கப்படுகிறது.   

தங்கத்தின் விலையினை போல் அல்லாமல், வெள்ளியின் விலை கடந்த வாரத்தில் மூன்று நாட்கள் ஏற்றத்திலும், இரண்டு நாட்கள் சரிவிலும் காணப்படுகிறது. கடந்த திங்கட்கிழமையன்று 28.425 டாலர்களாக தொடங்கிய நிலையில், அன்று அதிகபட்சமாக 30.350 டாலர்களாக அதிகரித்தது. எனினும் வாரத்தின் இறுதி நாளான வெள்ளிக்கிழமையன்று 27.017 டாலர்களாக முடிவுற்றது. கடந்த வாரத்தில் குறைந்தபட்சமாக 25.935 டாலர்களை கடந்த வியாழக்கிழமையன்று தொட்டது. மேலும் வெள்ளியின் விலையானது தினசரி கேண்டில் பேட்டர்னில் சற்று ஏற்றம் காணும் விதமாக காணப்பட்டலும், வார கேண்டில் பேட்டர்னில் சற்று குறையும் விதமாக இருப்பதால், திங்கட்கிழமையன்று தொடக்கத்தினை பொறுத்தே வர்த்தகம் இருக்கும். ஆக கொஞ்சம் பொறுத்திருந்து வர்த்தகம் செய்வது நல்லது.

 சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையிலும் தங்கம் விலை, கடந்த வாரத்தில் முதல் 4 நாட்கள் பலத்த சரிவினைக் கண்ட நிலையில், கடைசி நாள் சற்று ஏற்றம் கண்டது. கடந்த திங்கட்கிழமையன்று எப்ரல் காண்டிராக்டில் தங்கம் விலை தொடக்கத்தில் 10 கிராமுக்கு 49,717 ரூபாயாக தொடங்கிய நிலையில், அதிகபட்சமாக வியாழக்கிழமையன்று 46,611 ரூபாயாக குறைந்தது.

வரலாற்று உச்சத்தில் இருந்து சுமார் ரூ.9000 சரிவு இதே பிப்ரவரி காண்டிரக்டில் திங்கட்கிழமையன்று 49,370 ரூபாயாக தொடங்கிய நிலையில், அதிகபட்சமாக வியாழக்கிழமையன்று 46.600 ரூபாய் வரையில் குறைந்தது. கடந்த வெள்ளிக்கிழமையன்று 47,270 ரூபாயாக முடிவடைந்தது. தங்கம் விலையானது கடந்த ஆகஸ்ட் மாத உச்சத்தில் இருந்து பார்க்கும்போது, பிப்ரவரி காண்டிராக்டில் 9,100 ரூபாய் சரிவிலும், இதே ஏப்ரல் மாத காண்டிராக்டில் 8,930 ரூபாய் சரிவிலும் காணப்படுகிறது. 

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை நிலவரம் சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையில் வெள்ளியின் விலையும் கடந்த வாரத்தில் ஏற்ற இறக்கத்தில் காணப்பட்டது. எனினும் உச்சத்தில் இருந்து சரிவிலேயே காணப்படுகிறது. கடந்த வாரம் திங்கட்கிழமையன்று 71,650 ரூபாயாக தொடங்கிய நிலையில், அதிகபட்சமாக வியழக்கிழமையன்று 66,320 ரூபாய் வரையில் குறைந்தது. எனினும் கடந்த வெள்ளிக்கிழமையன்று 68,738 ரூபாயாக முடிவடைந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் வெள்ளியின் விலையானது 77,700 ரூபாயினை தொட்ட நிலையில், அதனுடன் ஒப்பிடும்போது 11,380 ரூபாய் குறைந்துள்ளது. 

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையானது கடந்த திங்கட்கிழமையன்று, சவரனுக்கு 37,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், வெள்ளிக்கிழமையன்று 35,640 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதுவரையில் விலையில் மாற்றம் காணவில்லை. ஆக ஒரே வாரத்தில் சவரனுக்கு 1488 ரூபாய் குறைந்துள்ளது. இதே கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அதிகபட்சமாக 43,600 ரூபாயினை எட்டியது. அதனுடன் ஒப்பிடும்போது சவரனுக்கு 7,960 ரூபாய்க்கு மேல் குறைந்துள்ளது. இது முதலீட்டாளர்களுக்கு தங்கம் வாங்க நல்ல வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது.

 தூய தங்கத்தின் விலையும் கடந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிவினைக் கண்டு வருகின்றது. கடந்த திங்கட்கிழமையன்று 10 கிராம் தூய தங்கத்தின் விலையானது 50,450 ரூபாயாக இருந்த நிலையில், வெள்ளிக்கிழமையன்று அதன் விலை 48,590 ரூபாயாகும். ஆக மொத்தத்தில் நடப்பு வார தொடக்கத்தில் இருந்து 10 கிராம் தூய தங்கத்தின் விலையானது 2,190 ரூபாய் குறைந்துள்ளது. வெள்ளி விலை நிலவரம் ஆபரண வெள்ளியின் விலையானது இன்று கிராமுக்கு 73.40 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 734 ரூபாயாகவும், கிலோவுக்கு 73,400 ரூபாயாகவும் உள்ளது. 

வெள்ளியின் விலையும் தங்கத்தினை போலவே குறைந்து தான் காணப்படுகிறது. நடப்பு வார தொடக்கத்தில் 79,200 ரூபாயாக இருந்த கிலோ வெள்ளியின் விலை, வியாழக்கிழமையன்று 72,200 ரூபாயாக குறைந்தது. ஆக மொத்தத்தில் இந்த வாரத்தில் மட்டும் வெள்ளியின் விலை கிலோவுக்கு 7,000 ரூபாய் குறைந்துள்ளது. 

சர்வதேச பங்கு சந்தைகள் தொடர்ந்து முன்னேற்றம் கண்டு வரும் நிலையில், பாதுகாப்பு புகலிடமாக விளங்கும் தங்கம் விலை குறைந்து வருகின்றது. இது தடுப்பூசி செயல்பாட்டுக்கு வந்துவிட்டால், பொருளாதாரம் விரைவில் மீண்டு வரும். இதன் காரணமாக சந்தைகள் ஏற்றம் காணலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

எனினும் அதிகரித்து வரும் இரண்டாம் கட்ட பரவலுக்கு மத்தியில், தடுப்பூசி எந்தளவுக்கு கைகொடுக்கும் என்ற பயமும் எழுந்துள்ளது. தங்கம் Vs டாலர் தங்கத்தின் விலையினை நிர்ணயிக்கும் முக்கிய காரணியான டாலரின் மதிப்பு, அமெரிக்காவில் விரைவில் அடுத்தகட்ட ஊக்கத்தொகை அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பினால் வலுவடைந்து காணப்படுகிறது. அதோடு அமெரிக்காவின் பத்திர லாபமானது வலுவடைந்து வரும் நிலையில், இது தங்கம் விலை சரிய காரணமாக அமைந்துள்ளது. ஆக வரவிருக்கும் வாரத்திலும், ஊக்கத்தொகை குறித்தான முதலீட்டாளர்கள் இது குறித்தான முக்கிய அறிவிப்பினை முக்கியமாக கவனிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

ஆக இது தங்கம் விலை இன்னும் சரிய காரணமாக அமையலாம். இந்த வாரத்தில் என்ன செய்யலாம்? நீண்ட கால நோக்கில் தங்கம் விலையானது அதிகரிக்கலாம் என்று முதலீட்டாளர்கள் கூறினாலும், மீடியம் டெர்மில் தங்கம் விலையானது, திங்கட்கிழமையன்று தொடக்கத்தினை பொறுத்தே இருக்கும். ஏனெனில் பல காரணிகளும் தங்கம் விலை குறைய ஏதுவான காரணிகளாகவே உள்ளன. ஆக மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் கொஞ்சம் பொறுத்திருந்து வர்த்தகம் செய்வது நல்லது. எனினும் நீண்டகால் நோக்கில் வாங்கி வைக்கலாம்.