கமல் போட்டியிடும் தொகுதிகள்.... மக்கள் நீதி மையத்தின் மெகா பிளான்

கமல் போட்டியிடும் தொகுதிகள்..... மக்கள் நீதி மையத்தின் மெகா பிளான்

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இந்த முறை சென்னையில் உள்ள ஒரு தொகுதி மற்றும் கோவையில் உள்ள ஒரு தொகுதி என இரண்டு தொகுதிகளில் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.


கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கி 4 ஆண்டுகள் ஆகிவிட்டது. அந்த கட்சி சந்திக்கும் முதல் சட்டசபை தேர்தல் என்றால் அது இந்த ஆண்டு நடக்கும் தேர்தல் தான். முன்னதாக நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிட்டது.

நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி 3.73 சதவீதம் வாக்குகளைப் பெற்றது. கோவை, சென்னை உள்பட நகர்புற பகுதிகளில் அதிக வாக்குகளை கமலின் கட்சி பெற்றது.

வேளச்சேரி மயிலாப்பூர்

இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இந்த முறை சென்னையில் உள்ள ஒரு தொகுதி மற்றும் கோவையில் உள்ள ஒரு தொகுதி என இரண்டு தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டிருப்பதாக சொல்கிறார்கள். வேளச்சேரி, மயிலாப்பூர் அல்லது ஆலந்தூர் ஆகிய தொகுதிகளில் ஏதேனும் ஒன்றிலும், கோவை, மாவட்டத்தில் ஒரு தொகுதி என போட்டியிட திட்டமிட்டு அதற்கான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

அதிக வாக்குகள்

தென் சென்னை நாடாளுமன்றத் தொகுதியில், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 1 லட்சத்து 35 ஆயிரத்து 465 வாக்குகளைப் பெற்று, மக்கள் நீதி மய்யம் மூன்றாம் இடத்தை பெற்றது. கட்சி ஆரம்பித்த சில மாதங்களிலேயே 12.03 சதவீத வாக்குகளை இங்கு பெற்றிருந்தது. எனவே தென்சென்னை நாடாளுமன்ற தொகுதிக்கு உள்பட்ட வேளச்சேரி அல்லது மயிலாப்பூர் கமல் போட்டியிட திட்டமிடுவதாக சொல்லப்படுகிறது.

ஸ்ரீபெரும்புதூர்

இதுமட்டுமின்றி சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதியிலும் கமலின் மக்கள் நீதிமய்யம் 1 லட்சத்து 35 ஆயிரத்து 525 வாக்குகளைப் பெற்று மூன்றாம் இடம் பிடித்திருந்தது. குறிப்பாக ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதியில் அதிக வாக்குகளை பெற்றிருந்தது. எனவே அங்கும் கமல்ஹாசன் போட்டிட வாய்ப்புகள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

மநீம

சென்னையில்  போட்டியிட திட்டமிட்டுள்ள கமல்ஹாசன், கோவையில் உள்ள ஒரு தொகுதியிலும் போட்டியிட உள்ளதாக சொல்லப்படுகிறது. மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத்தலைவர் மகேந்திரன் கோவை நாடாளுமன்றத் தொகுதியில்தான் போட்டியிட்டார் அங்கு 1 லட்சத்து 45 ஆயிரத்து 104 வாக்குகளை மக்கள் நீதி மய்யம் பெற்றது. என அதனால், கமல்ஹாசன் போட்டியிடும் மற்றொரு தொகுதி கோவையில்இருக்க வாய்ப்பு உள்ளதாக அக்கட்சியினர் சொல்கிறார்கள்.

இளைஞர்கள்

மக்கள் நீதி மய்யம் சார்பில் கடந்த 21-ம் தேதி விருப்பமனு விநியோகம் தொடங்கி நடந்து வருகிறது. கமல்ஹாசன் நகர்புற வாக்காளர்களிடையே அதிக நம்பிக்கையை பெற்றிருப்பதாக சொல்லப்படுகிறது. மாற்றத்தை விரும்பும் இளைஞர்கள் வாக்குகள், புதிய வாக்காளர்கள் ஆகியோரின் வாக்குகளை குறிவைத்து கமல் செயல்படுவதாக கூறப்படுகிறது. எனவே அதற்கு தகுந்தாற் போல் கமலின் வியூகங்கள் இருக்க வாய்ப்பு உள்ளது