9, 11ஆம் வகுப்பிற்கு பள்ளிகள் திறப்பு; புதிய உத்தரவு!

  9, 11ஆம் வகுப்பிற்கு பள்ளிகள் திறப்பு;  புதிய உத்தரவு!தமிழகத்தில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. அதன்பிறகு கல்வியாண்டு நிறைவு, புதிய கல்வியாண்டு தொடக்கம் என வீட்டிலிருந்த படியே ஆன்லைன் வாயிலாக மாணவர்கள் பாடம் பயின்று வருகின்றனர். நடப்பு கல்வியாண்டில் மாணவர்களின் நலன் கருதி 40 சதவீத அளவிற்கு பாடத்திட்டம் குறைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்த வேண்டியிருப்பதால் பள்ளிகள் திறப்பு பற்றி பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் கருத்து கேட்கப்பட்டது.


இதன் தொடர்ச்சியாக கடந்த ஜனவரி 19ஆம் தேதி 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. இதையொட்டி பள்ளி வளாகங்களில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. அரசுப் பள்ளிகளில் 90 சதவீதத்திற்கும் மேல் மாணவர்களின் வருகை இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களுக்கு வாரத்தில் ஞாயிறுக்கிழமை தவிர ஆறு நாட்களும் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. அரசு விடுமுறை அன்று வழக்கம் போல் பள்ளிகள் இயங்காது. இதனைத் தொடர்ந்து பிப்ரவரி மாதத்திற்கான தளர்வுகள் குறித்து தமிழக அரசு சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டது. அதில் வரும் பிப்ரவரி 8ஆம் தேதி முதல் 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளைத் திறக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.

இதற்கான ஏற்பாடுகள் முடுக்கிவிடப்பட்டுள்ள நிலையில், 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளைத் திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை  பள்ளிக்கல்வித்துறை தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி, இட நெருக்கடியை தவிர்க்க காலை, பிற்பகல் என வகுப்புகளை பிரித்து நடத்தலாம். மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்தால் வகுப்புகளை ஒருநாள் விட்டு ஒருநாள் நடத்த வேண்டும்.