6, 7 , 8 வகுப்புகளுக்கு பிப்ரவரி 22 முதல் நேரடி வகுப்புகள்....!

 6, 7 , 8  வகுப்புகளுக்கு பிப்ரவரி 22 முதல் நேரடி வகுப்புகள்...! தமிழகம் முழுவதும் பள்ளிகள் 9 முதல் 12ம் வகுப்புகளுக்கு மீண்டும் திறக்கப்பட்டு உள்ள நிலையில், படிப்படியாக பிற வகுப்புகளுக்கும் நேரடி பாடங்களை தொடங்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. தற்போது 6 முதல் 8ம் வகுப்புகளுக்கு பிப்ரவரி மாத இறுதியில் பள்ளிகளை திறக்க அரசு ஆலோசித்து வருவதாக கல்வித்துறை அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.

கொரோனா நோய்த்தொற்று அச்சம் காரணமாக நடப்பு கல்வியாண்டில் பாதிக்கு மேல் ஆன்லைன் வகுப்புகள் மூலமே மாணவர்களுக்கு பாடங்கள் கற்பிக்கப்பட்டது. பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு இது மட்டுமே போதாது என்பதால், கடந்த ஜனவரி 19ம் தேதி 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டு குறைக்கப்பட்ட பாடத்திட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் 9, 11ம் வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு 1 வாரம் நிறைவடைய உள்ளது.

பள்ளிகளில் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள் தீவிரமாக பின்பற்றப்படுவதால் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு நோய்த்தொற்று பாதிப்புகள் ஏற்படவில்லை. மேலும் பள்ளி விடுதிகளும் திறக்கப்பட்டு உள்ளன. 9 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளதால், போதிய வகுப்பறை இல்லாத பள்ளிகள் காலை-மாலை ஷிப்ட் முறை அல்லது ஒருநாள் விட்டு ஒருநாள் வகுப்புகளை நடத்தலாம் என அறிவுறுத்தப்பட்டது.

அடுத்தகட்டமாக 6 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு எப்போது? என்கிற கேள்வி பரவலாக எழுந்துள்ளது. மேலும் பெற்றோர்களும் விரைந்து பள்ளிகளை திறக்குமாறு கோரிக்கை வைத்துள்ளனர். இது தொடர்பாக ஆலோசனை நடத்தி முதல்வர் அறிவிப்பார் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஏற்கனவே கூறி உள்ளார். தற்போது கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறிய தகவலின்படி, 6, 7 மற்றும் 8 ஆகிய வகுப்புகளுக்கு குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் அடிப்படையில் பிப்ரவரி மாத இறுதியில் இருந்து நேரடி வகுப்புகளை தொடங்க திட்டமிடப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.