10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி: தமிழக மாணவர்களுக்கு சூப்பர் தகவல்!

10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி: தமிழக மாணவர்களுக்கு சூப்பர் தகவல்! தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டன. மாணவர்கள் வீட்டிலிருந்த படியே ஆன்லைன் வாயிலாகவும், கல்வி தொலைக்காட்சி, யூ-டியூப் சேனல், வாட்ஸ்-அப் ஆகியவை மூலம் பாடம் கற்று வருகின்றனர். இதற்கான தொழில்நுட்ப வசதிகள் பலரிடம் இல்லாத சூழலிலும் வேறு வழியின்றி பாடம் நடத்தப்பட்டு வந்தது. இதற்கிடையில் பொதுத்தேர்வு நடத்தும் சூழல் வந்தது. கடந்த 2020ஆம் ஆண்டைப் பொறுத்தவரையில் ஒன்று முதல் 9ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்வுகள் நடைபெறாமல் தேர்ச்சி என்று தமிழக அரசு அறிவித்தது.

11, 12ஆம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு நடத்தி முடிக்கப்பட்டது. 10ஆம் வகுப்பிற்கு காலாண்டு, அரையாண்டு தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்ச்சி மதிப்பெண்கள் வழங்கப்பட்டன. இதையடுத்து வீட்டிலிருந்த படியே அடுத்த கல்வியாண்டு தொடங்கியது. இந்த சூழலில் மாணவர்களின் சுமையை குறைக்கும் வகையில் 40 சதவீத பாடத்திட்டம் நீக்கப்பட்டது. எஞ்சிய பாடப் பகுதிகளை மட்டும் படித்தால் போதும். அதிலிருந்து மட்டுமே கேள்விகள் கேட்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்தது.
இதையடுத்து பெற்றோர்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டு வந்த நிலையில், அவர்களின் ஒப்புதலுடன் கடந்த ஜனவரி 19ஆம் தேதி 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாக வரும் பிப்ரவரி 8ஆம் தேதி முதல் 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளைத் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே பொதுத்தேர்வை கருத்தில் கொண்டு பாடத்திட்டங்களை விரைவாக நடத்தி முடிக்க ஆசிரியர்கள் மும்முரம் காட்டி வருகின்றனர். நடப்பாண்டைப் பொறுத்தவரை தமிழக சட்டமன்ற தேர்தல் வரவுள்ளது.
வழக்கமாக ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடத்தப்படும். இதனைக் கருத்தில் கொண்டு முன்கூட்டியே பொதுத்தேர்வுகள் அறிவிக்கப்படும். ஆனால் நடப்பாண்டு நிலைமையே வேறு. கொரோனாவால் மாணவர்களின் கல்வி கற்கும் சூழ்நிலையே மாறிவிட்டது. இன்னும் பாடங்களை நடத்தி முடிக்காத சூழலில் முன்கூட்டியே தேர்வுகளை நடத்துவது சரியாக இருக்காது. எனவே தேர்தலுக்கு பின் பொதுத்தேர்வுகள் தள்ளிப் போகும் என்று தகவல்கள் வெளியாகின. 
இந்நிலையில் பொதுத்தேர்வு நடத்துவதற்கான கால அட்டவணை குறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். வரும் மே மாதம் கடைசி வாரத்தில் தொடங்கி ஜூன் வரை பொதுத்தேர்வை நடத்தலாம் என்று திட்டமிடப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி  அவர்களிடம் ஒப்புதல் பெறப்பட்டு தேர்வு அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.