கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கலையிழந்த சபரிமலை

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக  கலையிழந்த சபரிமலை சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக கடந்தமாதம் 15-ந்தேதி கோவில் நடை திறக்கப்பட்டது. மறுநாள் (16-ந்தேதி) முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகி றார்கள்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் மற்றும் ஆன்-லைனில் முன்பதிவு செய்தால் மட்டுமே அனுமதி என பல்வேறு கட்டுப்பாடுகள் பக்தர்களுக்கு விதிக்கப்பட்டுள்ளது. மேலும் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் 2ஆயிரம் பேரும், மற்ற நாட்களில் 1000பேரும் அனுமதிக்கப்பட்டனர்.

அதனை அதிகரிக்க கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து சனி, ஞாயிறு தினங்களில் 3ஆயிரம் பேரையும், மற்ற தினங்களில் 2ஆயிரம் பேரையும் அனுமதிக்க முடிவு செய்யப்பட்டது. சாமி தரிசனம் செய்பவர்கள் ஆல்-லைனில் முன்பதிவு செய்ய ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டிருந்ததன் அடிப்படையில், முன்பதிவு செய்தவர்களே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

கூடுதல் பக்தர்கள அனுமதிப்பதற்கான முன்பதிவு நேற்றுமுன்தினம் மாலை நடந்தது. அதுவும் சற்று நேரத்திலேயே முடிவுக்கு வந்துவிட்டது. இதையடுத்து நேற்றுமுதல் 2ஆயிரம் பக்தர்களுககு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் நேற்று 1000 பக்தர்களுக்கு குறைவாகவே சபரிமலைக்கு வந்திருந்தனர்.

வழக்கமாக மண்டலபூஜை காலத்தில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். ஆனால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஆன்-லைனில் முன்பதிவு செய்த 1000பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டதால் வரலாறு காணாத வகையில் பக்தர்கள் கூட்டமின்றி சபரிமலை வெறிச்சோடி காணப்படுகிறது.

பம்பை, சன்னிதானம் மற்றும் மலைப்பகுதிகள் உள்ளிட்ட அனைத்து இடங்களும் பக்தர்கள் நடமாட்டம் இன்றி உள்ளது. மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டு நேற்றுடன் 19 நாட்கள் ஆகிறது. அவற்றில் 18 நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அந்த அனைத்து நாட்களில் சில நாட்களே முன்பதிவு செய்த பக்தர்கள் அனைவரும் வந்தனர்.

பெரும்பாலான நாட்கள், முன்பதிவு செய்த பக்தர்கள் அனைவரும் வரவில்லை. ஆயிரத்திற்கு குறைவானவர்களே சபரிமலைக்கு வந்தனர். நேற்று முதன்முதலாக வார நாட்களில் 2ஆயிரம் பேருக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்த போதிலும் 1000பேர் கூட வரவில்லை. இதனால் நேற்று சன்னிதான பகுதிகள் மிகவும் வெறிச்சோடி காணப்பட்டன.

24 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் மற்றும் பம்பை, சன்னிதானம் உள்ளிட்ட பகுதிகளில் தங்குவதற்கு தடை ஆகிய பல்வேறு கட்டுப் பாடுகளின் காரணமாக சபரிமலைக்கு வந்து செல்ல பக்தர்கள் மத்தியில் தயக்கம் இருந்துவருகிறது. இதனால் முன்பதிவு செய்த பக்தர்கள் கூட வர தயங்குகிறார்கள்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த, பக்தர்களுக் கான கட்டுப்பாடுகளை கடை பிடிப்பது மிகவும் அவசியம் என்பதால் அதனை தளர்த்த எந்தவித வாய்ப்பும் இல்லை. மிகவும் குறைந்த எண்ணிக் கையிலான பக்தர்களுக்கே சபரிமலை செல்ல அனுமதி வழங்கப்பட்டு வருவதால், ஒன்று அல்லது இரண்டு நபர்கள் சேர்ந்தே மலையேறி செல்வதை காண முடிகிறது.

மலைப்பாதையில் வழியில் எங்கும் பக்தர்கள் அமர்ந்திருப்பதை பார்க்க முடியவில்லை. வழக்கமாக சீசன் காலங்களில் பம்பை ஆற்றில் பக்தர்கள் கூட்டமாகவே காணப்படும். ஆனால் இந்த ஆண்டு பம்பை ஆற்றில் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. பக்தர்கள் குளிக்க ‌ஷவர்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அந்த பகுதியிலும் கூட பக்தர்களை காண முடியவில்லை.

சபரிமலை வரும் பக்தர்கள் மற்றும் பணியில் ஈடுபட்டுள்ள தேவசம்போர்டு ஊழியர்கள், பணியாளர்கள், போலீசார் உள்ளிட்டவர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்பட்டபோதிலும் சபரிமலையில் பணியில் உள்ளவர்களுக்கு கொரோனா பரவிவருகிறது. நேற்று கூட தேவசம்போர்டு ஊழியர்கள் உள்பட 17 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது.

இதையடுத்து அவர்கள் அனைவரும் சபரிமலையில் இருந்து பம்பைக்கு அழைத்து வரப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுடன் பணி புரிந்தவர்கள் மற்றும் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

சபரிமலையில் பணியில் ஈடுபட்டுள்ள தேவசம்போர்டு ஊழியர்கள், பணியாளர்கள், போலீசார் உள்ளிட்ட அனைவருக்கும் தினமும் கொரோனா பரிசேதனை நடத்தப்படுகிறது. மேலும் கொரோனா தடுப்பு கட்டுப் பாடுகள் அனைத்தும் அவர்கள் கடைபிடிக்க உத்தரவிடப் பட்டு உள்ளது.

இருந்தபோதிலும் சபரிமலையில் பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு கொரோனா தொற்று பரவுவதால் கட்டுப்பாடுகளை மேலும் கடுமையாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

தேனி மாவட்ட செய்திக்காக... கேரளா எல்லை குமுளியில் இருந்து.     அ. வெள்ளைச்சாமி