முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரம்

 *முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரம் தொடங்கியதையடுத்து அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.*
எடப்பாடி:


தமிழக சட்டசபை தேர்தல் வருகிற மே மாதம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.

 

சட்டமன்ற தேர்தலை சந்திக்க அனைத்து அரசியல் கட்சிகளும் ஆயத்தமாகி வருகின்றன.


அ.தி.மு.க. சார்பாக முதல்-அமைச்சர் வேட்பாளராக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ளார்.


இதைதொடர்ந்து அ.தி.மு.க. சார்பில் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு மாவட்ட வாரியாக கூட்டங்கள் நடத்தி வருகிறார்கள்.


இந்த நிலையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 3 நாட்களாக சேலம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். பல்வேறு பகுதிகளில் அம்மா மினி கிளினிக்குகளை திறந்து வைத்து வருகிறார்.


இன்று (சனிக்கிழமை) முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது சொந்த தொகுதியான எடப்பாடி தொகுதியில் இருந்து தேர்தல் பிரசாரத்தை தொடங்கப்போவதாக அறிவித்திருந்தார். அதன்படி எடப்பாடி தொகுதிக்குட்பட்ட நங்கவள்ளி அருகேயுள்ள பெரிய சோரகை சென்றாய பெருமாள் கோவிலுக்கு பகல் 11 மணி அளவில் சென்றார்.


இந்த கோவிலில் கடந்த சில நாட்களுக்கு முன்புதான் கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து கோவிலில் மண்டல பூஜை நடந்து வருகிறது. இந்த மண்டல பூஜையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.


எடப்பாடி பழனிசாமிக்கு கோவில் நிர்வாகம் சார்பாகவும், அ.தி.மு.க. சார்பாகவும் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து அவர் திறந்த வேனில் நின்றவாறு அங்கு திரண்டு நின்ற மக்கள் மத்தியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.


ஒவ்வொரு தேர்தலிலும் பெரியசோரகை சென்றாய பெருமாள் கோவில் முன்பு இருந்து தான் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரம் செய்வது வழக்கம் 2011, 2016-ம் ஆண்டுகளில் நடந்த தேர்தல்களின்போது அவர் தனது பிரசாரத்தை இந்த கோவில் முன்பு இருந்து தான் தொடங்கினார்.


தேர்தல் பிரசாரத்துக்கு இடையே முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 5 இடங்களில் அம்மா மினி கிளினிக்குகளை தொடங்கி வைத்தார். முதலில் நங்கவள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட சீரங்கனூர் பகுதியிலும், பின்னர் இருப்பாளி ஊராட்சி, வெள்ள நாயக்கன் பாளையம், எடப்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட ஆலச்சம்பாளையம், எட்டி குட்டைமேடு பகுதி ஆகிய 5 இடங்களில் அம்மா மினி கிளினிக்கை தொடங்கி வைத்து தேர்தல் பிரசாரம் செய்தார்.


அதிமுக தொண்டர்கள்


முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரம் தொடங்கியதையடுத்து அ.தி.மு.க. தொண்டர்கள், நிர்வாகிகள் உற்சாகம் அடைந்துள்ளனர். பிரசாரம் தொடங்கிய பெரியசோரகை பெருமாள்கோவில் பகுதியில் இருந்து அவர் செல்லும் இடங்களில் எல்லாம் தொண்டர்கள், பொதுமக்கள் திரண்டு நின்று வரவேற்பு அளித்தனர். வழிநெடுகிலும் வரவேற்பு பேனர்கள், கொடி தோரணங்கள் கட்டப்பட்டு இருந்தன.


முதல்-அமைச்சர் பிரசாரம் மேற்கொண்ட பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. போலீஸ் ஐ.ஜி பெரியய்யா, டி.ஐ.ஜி. பிரதீப் குமார், போலீஸ் சூப்பிரண்டு தீபாகனிக்கர் ஆகியோர் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.