எம்ஜிஆரால் முடியாததை எடப்பாடியார் செய்வாரா....?

எம்ஜிஆரால் முடியாததை எடப்பாடியார் செய்வாரா....?

தமிழகத்தின் இரண்டாவது தலைநகராக திருச்சியை அறிவிக்க வேண்டும் என்று அந்த மாவட்டத்தை சேர்ந்த அதிமுக அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் சில மாதங்களுக்கு முன் கொளுத்திப் போட்டார். அவரது இந்த கோரிக்கையை அடுத்து கலைக்கும், அரசியலுக்கும் பெயர் போன மதுரையை இரண்டாம் தலைநகராக அறிவிக்க வேண்டும் என்று அந்த மாவட்டத்தை சேர்த்த அமைச்சர்களான செல்லூர் ராஜு, ஆர்.பி. உதயகுமார் ஆகியோர் கோரிக்கை விடுத்தனர். அமைச்சர்களை தொடர்ந்து வணிக அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் மத்தியில் சில மாதங்களுக்கு முன் ஓங்கி ஒலித்த இந்த கோரிக்கை தற்போது அடங்கிவிட்டது. ஆனால், திருச்சி மாநகரை இரண்டாம் தலைநகரல்ல; மாநிலத்தின் தலைநகராகவே மாற்றும் முயற்சி எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் முன்னெடுக்கப்பட்டு, பின்னர் பல்வேறு காரணங்களால் அந்தத் திட்டம் கைவிடப்பட்டது இன்றைய தலைமுறையினர் பலருக்கும் தெரியாத விஷயம். திருச்சியை தமிழகத்தின் தலைநகராக்க முயன்ற எம்ஜிஆரின் முயற்சி, அந்தத் திட்டம் கைவிடப்பட்டதற்கான காரணம், மன்னர் ஆட்சி காலத்தில் தலைநகராக திகழ்ந்த திருச்சி என்று இதுதொடர்பான முக்கிய அம்சங்களை விவரிக்கிறது இந்த புகைப்பட கட்டுரை.

திருச்சியை தலைநகராக்க எம்ஜிஆர் திட்டம்

தமிழகத்தின் வடமுனையில் இருக்கும் சென்னையில் அமைந்துள்ள தலைமைச் செயலகத்துக்கு, தமிழகத்தின் தென் பகுதியில் உள்ள மக்கள் பல்வேறு அலுவல் காரணமாக வந்து செல்வதில் பல்வேறு சிரமங்கள் இருந்து வருவதாக, 1980 களில் ஆட்சியில் இருந்த எம்ஜிஆரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அதனையடுத்து தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களும் தலைமைச் செயலகத்துக்கு எளிதாக வந்து செல்ல வசதியாக மாநிலத்தின் மைய பகுதியில் உள்ள திருச்சியை தலைநகரமாக மாற்ற வேண்டும் என்று எம்ஜிஆர் முடிவெடுத்தார். திருச்சியை தலைநகரமாக்கும் திட்டத்தையும் அவர் 1983 இல் அறிவித்தார் சென்னையின் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வாக இதனை எம்.ஜி.ஆர் கருதினார். மேலும் சென்னையின் குடிநீர்ப் பற்றாக்குறையும் இத்திட்டத்தை அவர் முன்னெடுக்க முக்கிய காரணமாக அமைந்தது.

நிறைவேறாத எம்ஜிஆரின் கனவு

தலைநகரை திருச்சிக்கு மாற்றும் எம்ஜிஆரின் திட்டத்துக்கு மு. கருணாநிதி உள்ளிட்டட பல்வேறு எதிர்கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த எதிர்ப்புகளையும் மீறி திருச்சியை தலைநகராக்குவதில் எம்ஜிஆர் உறுதியாக இருந்தார். திருச்சி அண்ணாநகர் நவல்பட்டில், தலைமைச் செயலகத்தின் ஒரு பகுதியை அமைக்க அவர் தீவிர முயற்சி எடுத்தார். ஆனால் அவருக்கு ஏற்பட்ட திடீர் உடல்நல குறைவு, அப்போதைய அரசியல் சூழ்நிலை, இந்திரா காந்தியின் துர்மரணம், திடீர் தேர்தல் போன்ற காரணங்களால் திருச்சியை தலைநகரமாக்கும் திட்டத்தை எம்ஜிஆரால் நிறைவேற்ற முடியாமல் போனது.

மன்னர்கள் ஆட்சி காலத்தில் தலைநகரான திருச்சி

எம்ஜிஆர் முதல்வராக இருந்தபோது, அவர் விரும்பியதை போல திருச்சியை தலைநகராக்க முடியாமல் போனது. இருப்பினும்,நாயக்கர் ஆட்சியின் தொடக்கத்தில் மதுரையே தலைநகராக இருந்தது. திருச்சி மதுரை தேசத்தின் எல்லை நகராக இருந்தது. தலைநகரை மதுரையிலிருந்து திருச்சிக்கு மாற்றினால், தஞ்சை நாயக்கரோடு போர் புரிய வசதியாக இருக்கும் என்று கருதி கி.பி.1616 இல் முதலாம் முத்துவீரப்ப நாயக்கர் இம்மாற்றத்தைச் செய்தார். அவருக்குப்பின் ஆட்சிக்கு வந்த திருமலை நாயக்கர், கி.பி.1630 இல் தலைநகரை மீண்டும் மதுரைக்கு மாற்றினார். திருச்சி அடிக்கடிப் போர்த் தாக்குதலுக்கு உட்பட்டதாலும், தென்பகுதியைத் திருச்சியிலிருந்து கவனிக்க இயலாமையாலும், திருமலை நாயக்கர் மதுரையைத் தலைநகராக்கினார். மீண்டும் 1665 இல் சொக்கநாத நாயக்கர் தஞ்சை மீது படையெடுக்க வசதியாகத் தலைநகரை மதுரையிலிருந்து திருச்சிக்கு மாற்றினார்.

இரண்டாம் தலைநகர்

மாநிலத்தின் மைய பகுதியில் அமைந்துள்ள திருச்சியை தமிழகத்தின் தலைநகராக அறிவிக்காவிட்டாலும், சென்னைக்கு அடுத்த இரண்டாவது தலைநகராக, இணைத் தலைநகராக அறிவிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு திருச்சி மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறது. 2016 இல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலின்போது நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கையில் திருச்சியை தலைநகராக மாற்றும் திட்டம் இடம்பெற்றுள்ளது. 

எம்.ஜி.ஆரால் முடியாததை எடப்பாடியார் செய்வாரா....?

.