ரஜினி: ஜனவரியில் புதிய கட்சிஅரசியல் கட்சிகள் கருத்து என்ன?

 

ரஜினி: ஜனவரியில் புதிய கட்சிஅரசியல் கட்சிகள் கருத்து என்ன?

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது பற்றி சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் கேட்கப்பட்டது. ஆனால், நடிகர் ரஜினியின் செய்தியாளர் சந்திப்பு விவரத்தை முழுமையாக அறியாமல் அது பற்றி பேச விரும்பவில்லை என்று முதல்வர் பழனிசாமி கூறினார்.

இதேவேளை, தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், "சிறந்த திரைப்பட நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவதை பெரிதும் வரவேற்கிறோம். அவரது (ரஜினியின்) வரவு நல்வரவு ஆகட்டும். வரும் காலங்களில் அரசியலில் எதுவும் நிகழலாம். வாய்ப்பிருந்தால் கூட்டணி அமையும்," என்று தெரிவித்துள்ளார்.

ரஜினியின் அரசியல் வருகை அறிவிப்பால் மாநிலத்தில் எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை என்று தமிழக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். தமிழகத்தைப் பொறுத்தவரை, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோருக்கான வாக்கு வங்கி அப்படியே இருக்கிறது. அவை எங்கும் செல்லப்போவதில்லை என்று ஜெயக்குமார் தெரிவித்தார்.

பாஜக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான பொன். ராதாகிருஷ்ணன் ரஜினிக்கு மனபூர்வ வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்து கொள்வதாகக்கூறியுள்ளர். மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பை அவர் பூர்த்தி செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.

அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவித்துள்ள ரஜினிகாந்த், ஆன்மிக அரசியல் என்றால் என்ன என்பதை முதலில் தெளிவுபடுத்த வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஆன்மிகம் எடுப்படும். ஆனால் ஆன்மிக அரசியல் எடுபடாது. ரஜினியின் கூட்டணிக்கு காங்கிரஸ் செல்லாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

பின்னணி

2017 டிசம்பர் 31 ஆம் தேதி ரஜினிகாந்த் தான் அரசியல் கட்சி தொடங்கப் போவதாக அறிவித்தார்.

"எனது அரசியல் பிரவேசம் உறுதி. இது காலத்தின் தேவை" என்று அந்த அறிவிப்பின்போது அவர் பேசி இருந்தார்.

அதற்குப் பிறகும் கட்சி தொடங்குவது குறித்த எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகாத நிலையில் கடந்த மார்ச் மாதம், சென்னையிலுள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த் தனது அரசியல் நிலைப்பாடு குறித்து விளக்கம் ஒன்றை அளித்திருந்தார்.

rajini fans

'தமிழக மக்களிடம் ஓர் அரசியல் எழுச்சி ஏற்பட வேண்டும் அப்போதுதான் அரசியலுக்கு வருவேன்' என்றும் ரஜினிகாந்த் அப்போது தெரிவித்திருந்தார்.

கடிதம் - விளக்கம்

அதை தொடர்ந்து கொரோனா பொதுமுடக்கம் தொடங்கியது. இருப்பினும் ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து அவ்வப்போது கருத்துகள் வெளியாகி வந்த நிலையில்தான், கொரோனா காலத்தில் தமது உடல்நிலை வெளியே வந்து மக்களை சந்திக்கும் வகையில் இல்லை என மருத்துவர்கள் கூறியதாக ரஜினியே தெரிவிப்பது போல சமூக ஊடகங்களில் கடந்த அக்டோபர் மாதம் செய்திகள் பரவின.

இதுகுறித்து விளக்கம் அளித்து ட்விட்டரில் பதிவிட்ட நடிகர் ரஜினிகாந்த், "என் அறிக்கை போல ஒரு கடிதம் சமூக வலைத் தளங்களிலும் ஊடகங்களிலும் தீவிரமாகப் பரவிக் கொண்டு வருகிறது. அது என்னுடைய அறிக்கை அல்ல என்பது அனைவருக்கும் தெரியும்.

இருப்பினும் அதில் வந்திருக்கும் என் உடல்நிலை மற்றும் எனக்கு மருத்துவர்கள் அளித்த அறிவுரைகள் குறித்த தகவல்கள் அனைத்தும் உண்மை. இதைப் பற்றி தகுந்த நேரத்தில் என் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளோடு கலந்தாலோசித்து எனது அரசியல் நிலைப்பாட்டைப் பற்றி மக்களுக்குத் தெரிவிப்பேன்." என ரஜினிகாந்த் அப்போது தெரிவித்திருந்தார்.