மு.க. ஸ்டாலினுக்கு சீனியர் நான்.... கே.பி. ராமலிங்கம் சிறப்பு பேட்டி.....

 

ஸ்டாலின் எம்.எல்.ஏ.வாக ஆவதற்கு முன்பே நான் ஆயிட்டேன்... வெடிக்கும் கே.பி.ராமலிங்கம்..!

  

சென்னை: மு.க.ஸ்டாலின் எம்.எல்.ஏ.வாக ஆவதற்கு முன்பே தாம் எம்.எல்.ஏ.வாக இருந்துள்ளதாகவும், 26 வயதில் எம்.ஜி.ஆர். தனக்கு எம்.எல்.ஏ. சீட் கொடுத்ததாக கூறுகிறார் கே.பி.ராமலிங்கம்.

திமுக மாநில விவசாய அணிச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டு அண்மையில் இவர் திமுகவில் இருந்து விலக்கப்பட்ட நிலையில் கடந்தவாரம் பாஜகவில் இணைந்திருக்கிறார்.

KP Ramalingam says I was an MLA before Stalin became an MLA

இந்நிலையில் இது தொடர்பாக அவர் அளித்த பிரத்யேகப் பேட்டியின் விவரம் பின்வருமாறு;

கேள்வி: பாஜகவில் புதிய அரசியல் பயணத்தை தொடங்கி இருக்கிறீர்கள்... எப்படி போகிறது?

பதில்: நான் பாஜகவில் இணைந்து ஒரு வாரம் கூட இன்னும் ஆகவில்லை. ஆனால் அதற்குள் தொண்டர்கள் மத்தியில் பெரியளவில் வரவேற்பு கிடைத்துள்ளது. திமுகவை சேர்ந்த பலரும் பல்வேறு ஊர்களில் இருந்து வந்து என்னை சந்தித்து தாங்களும் பாஜகவுக்கு வந்துவிடுவதாக கூறுகிறார்கள். இன்னும் பலர் ஏற்கனவே திமுகவிலிருந்து பாஜகவில் இணைந்துவிட்டதாக கூறி வாழ்த்துச் சொல்லி செல்கின்றனர். பாஜகவில் நான் இணையும் போது முக்கிய நிர்வாகிகள் பலர் உடனிருந்து மகிழ்ச்சியோடு, ஆர்வத்தோடு என்னை ஏற்றுக்கொண்டார்கள்.

கேள்வி: திமுகவிலிருந்து பலரும் பாஜகவுக்கு வருகிறோம் என உங்களிடம் கூறுவதாக சொல்கிறீர்கள், அதற்கான காரணம் என்ன ?

பதில்: எம்.ஜி.ஆருக்கு பிறகு ஜெயலலிதாவை தலைவராக ஏற்றுக்கொள்ள எனக்கு மனமில்லை. அதேபோல் தான் கருணாநிதிக்கு பிறகு ஸ்டாலினை தலைவராக ஏற்றுக்கொள்வதற்கு எனக்கு உடன்பாடில்லை. இந்தக் காரணத்தினால் நான் திமுகவை விட்டு வெளியேறினேன். ஆனால் திமுக தோழர்களுக்கு என்ன வெறுப்பு ஏற்பட்டது எனத் தெரியவில்லை, அவர்களும் பாஜகவுக்கு வருகிறேன் எனக் கூறுகிறார்கள். இதற்கு காரணம் தலைமை மீது ஈர்ப்பு இல்லாததே.

KP Ramalingam says I was an MLA before Stalin became an MLA

இப்போது திமுகவில் இருக்கும் நிர்வாகிகள் திமுக ஆட்சிக்கு வரவேண்டும், தன் தலைவன் முதலமைச்சராக வர வேண்டும் என யாரும் எண்ணவில்லை. தான் ஜெயித்தால் போதும், தான் எம்.எல்.ஏ.ஆகினால் போதும் என்ற மனநிலையில் தான் திமுக நிர்வாகிகள் இருக்கிறார்கள்.

கேள்வி: திமுகவில் உங்களுக்கு மாநில அளவிலான பொறுப்பு கொடுத்து, மரியாதையான இடத்தில் வைத்திருந்தார் ஸ்டாலின்.. இதற்கு மேல் என்ன எதிர்பார்த்தீர்கள்..?

பதில்: ஸ்டாலின் எம்.எல்.ஏ. ஆவதற்கு முன்பு 1980-ல் எம்.எல்.ஏ.ஆகிவிட்டேன் நான். எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு திமுகவில் நான் இணையும் போது அதிமுகவின் உயர்மட்ட நிலையில் இருந்து தான் வந்தேன். ஏனென்றால் இன்று இருக்கக்கூடிய இளைஞர்களுக்கு எனது அரசியல் பின்னணி என்ன என்பது பற்றியும் பயணம் பற்றியும் தெரியாது. அதனால் நான் சொல்ல வருகிறேன். 1972-ல் இருந்து எம்.ஜி.ஆரோடு பயணித்தவன் நான். சென்னை மாவட்ட அதிமுக மாணவரணி அமைப்பாளராக எம்.ஜி.ஆர். என்னை நியமனம் செய்திருக்கிறார். முதல் 17 நியமன செயற்குழு உறுப்பினர்களில் என்னையும் ஒரு உறுப்பினராக ஆக்கியவர் எம்.ஜி.ஆர். 26 வயதில் என்னை எம்.எல்.ஏ.வேட்பாளராக ராசிபுரத்தில் நிறுத்தினார் எம்.ஜி.ஆர். 4 சட்டமன்றத் தேர்தல் 3 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டிருக்கிறேன்.

திமுகவில் 30 ஆண்டுகாலம் விவசாய அணிச் செயலாளராக இருந்திருக்கிறேன். நான் ஆற்றும் பணிகளை கவனித்து நீதான்பா இதை தொடர்ந்து செய்யனும் எனக் கூறினார் கலைஞர். நானும் மறுப்பு தெரிவிக்காமல் உழைத்து வந்தேன். ஆனால் இன்று எனக்கான புரோமோஷன் திமுகவில் வரவில்லையே. திமுக உயர்மட்டக் குழு உறுப்பினர்களாக இன்று யார் யார் அமர்ந்துள்ளார்கள் என பாருங்கள், அந்த பொறுப்பை கூட கொடுக்கவில்லை. ஆனால் நான் இதையெல்லாம் டிமாண்ட் செய்து கேட்டதே கிடையாது. இன்று நீங்கள் கேட்டதால் சொல்கிறேன்.

கேள்வி: நீங்கள் பாஜகவில் இணைந்த பின்னணியில் மு.க.அழகிரி இருப்பதாக கூறப்படுகிறதே..

பதில்: அதாவது ஒன்றை புரிந்து கொள்ளுங்கள், மு.க.அழகிரியை நான் முதல்முறையாக சந்தித்ததே ஆண்டிப்பட்டி இடைத்தேர்தலின் போது தான். அவர் தேர்தல் பொறுப்பாளராக இருக்கும் போது, என்னை அழைத்த கலைஞர் அவருக்கு துணையாக இருக்குமாறு கூறி அனுப்பினார். அப்போது தான் அவருடன் எனக்கு அறிமுகமே ஏற்பட்டது. ஆனால் அதற்கு முன்பாக திமுக சார்பில் 3 முறை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் நான்.

இப்போது உங்கள் கேள்விக்கு வருகிறேன், நான் பாஜகவில் இணையவுள்ள தகவலை அன்பின் காரணமாக, நட்பின் காரணமாக மு.க.அழகிரியிடம் தெரியப்படுத்தினேன். அவர் சரிங்க, பாருங்க என்றார் அவ்வளவு தான். அவர் முடிவில் நான் தலையிடாத போது என் முடிவில் அவர் எப்படி தலையிடுவார். அதற்காக அவருடன் நான் தொடர்பில் இல்லை என்றெல்லாம் சொல்லமாட்டேன். எப்போதும் அவருடன் தொடர்பில் இருப்பேன், நேற்றுக் கூட அவரிடம் தொலைபேசியில் பேசினேன்.

கேள்வி: எம்.ஜி.ஆர். 26 வயதில் எம்.எல்.ஏ.சீட் கொடுத்தார் என்கிறீர்கள், அப்படியிருக்கும் போது அவர் உருவாக்கிய அதிமுகவை மீண்டும் நீங்கள் தேர்வு செய்யாதது ஏன்?

பதில்: நான் இதுவரை 2,436 பொதுக்கூட்டங்களில் ஜெயலலிதாவை விமர்சித்து பேசியிருக்கிறேன். அப்படி பேசிவிட்டு மீண்டும் அந்தம்மா பொதுச்செயலாளராக இருந்த கட்சியில் இணைய எனக்கு விருப்பமில்லை. அதிமுகவில் இருந்து கூட எனக்கு அழைப்பு வந்தது உண்மை தான், அதனை நான் மறுக்கவில்லை. தனிப்பட்ட முறையில் என்னால் ஜெயலலிதாவை எப்போதும் தலைவராக ஏற்க முடியாது. அதேபோல் தான் ஸ்டாலினும், அவரையும் என்னால் தலைவராக ஏற்க முடியாது.

கேள்வி: பாஜகவில் உங்களுக்கு முக்கிய பதவியை எதிர்பார்க்கலாமா?

பதில்: இதோ பாருங்கள், பாஜகவில் இணைந்தே மூன்று நாட்கள் தான் ஆகிறது. நான் எந்த பதவியையும் பாஜகவில் எதிர்பார்க்கவில்லை. பதவி அரசியலை விடுத்து மக்களுக்கு நல்ல தகவல்களை கொண்டு சேர்க்கும் அரசியல் செய்யலாம் என்று நினைக்கிறேன். என்னை பொறுத்தவரை தமிழகத்திற்கு யார் முதலமைச்சராக வரவேண்டும் என்பதை விட யார் வரக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறேன். அதைநோக்கி பாஜகவில் உழைப்பேன்