திமுகவிடம் பாவ்லா காட்டுகிறதா ஐ-பேக்..?

 திமுகவுக்கு தேர்தல் வியூகம் வகுத்துக் கொடுக்கும் பணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள பிரசாந்த் கிஷோரின் ஐ பேக் நிறுவனம், இதுவரை என்ன செய்தது என்ற விவாதம் திமுகவில் எழுந்துள்ளது.

வானத்தை கிழிப்பேன் வைகுண்டத்தை காட்டுவேன் என்கிற ரேஞ்சுக்கு பில்டப் கொடுத்த பிரசாந்த் கிஷோர், தனது நிறுவனத்திலேயே ஆட்களை தக்க வைக்க முடியாமல் தடுமாறி வருகிறார்.

இதனால் ஐ-பேக் என்ற பிரம்மாண்ட பிராண்டுக்கு பின்னால் அங்கு பணியாற்ற தகுதியான ஆட்கள் இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

தேர்தல் வியூகம்

இந்தியாவிலேயே தன்னை ஒரு தலைசிறந்த சாணக்யனாக உருவகம் செய்துகொண்ட பிரசாந்த் கிஷோர், திமுகவுக்கு தேர்தல் பணியாற்றும் பொறுப்பை ஜெகன் மோகன் ரெட்டி மூலம் இந்தாண்டு பிப்ரவரி மாதம் பெற்றார். பிரசாந்த் கிஷோரின் மாயாஜால வார்த்தைகளை நம்பி திமுகவும் அவர் மீது ஆரம்பத்தில் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தது. ஐ-பேக் சொல்வதை செய்யுமாறு மாவட்ட நிர்வாகிகளுக்கு வாய்மொழி உத்தரவும் போட்டிருந்தது.

நாடித்துடிப்பு

இந்நிலையில் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்கள் மட்டுமே முழுமையாக உள்ள நிலையில் இதுவரை அதிமுக அரசுக்கு எதிரான தாக்கத்தை மக்கள் மத்தியில் ஐ-பேக் குழுவினர் ஏற்படுத்தவில்லை. டேட்டா என்ட்ரிகளையும், டிசைனர்களையும், வைத்துக்கொண்டு கம்பு சுற்றி வருகிறதே தவிர, மக்கள் நாடித்துடிப்பை அறிந்து அதற்கேற்ப எந்த வியூகத்தையும் திமுகவுக்கு வகுத்துக் கொடுக்கவில்லை ஐ பேக். இதற்கு காரணம் அரசியல் நுண்ணறிவு கொண்ட நபர்கள் யாரும் அங்கில்லை.

விளம்பரம்

இதில் குறிப்பிட்டு சொல்லவேண்டுமானால் கட்சி சார்ந்து மு.க.ஸ்டாலின் சொந்தமாக ஒரு முடிவெடுத்தால் கூட, அது ஏதோ தங்களால் எடுக்க வைக்கப்பட்ட முடிவு என்பது போல் ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்கி வருகிறது ஐ-பேக். திமுகவை விளம்பரப்படுத்த பணியமர்த்தினால் தங்களை விளம்பரப்படுத்தி கொள்வதில் படு கவனமாக இருக்கிறது தமிழக ஐ-பேக் குழு.

சட்டமன்றத் தேர்தல்

இதனிடையே ஐ-பேக் நிறுவனத்தில் உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு இன்னும் ஆட்களே நியமிக்கவில்லை. தமிழக சட்டமன்றத் தேர்தலை 4 மாதத்தில் வைத்துக்கொண்டு முக்கியப் பிரிவுகள் பலவற்றை ஆட்கள் இன்றியே நடத்தி வருகிறார் பிரசாந்த் கிஷோர். ஐ-பேக்கிடம் இன்னும் நிறைய எதிர்பார்த்திருந்த திமுக மேல்மட்ட நிர்வாகிகள் பலரும், இவ்வளவு தான் பி.கே.விடம் விஷயமா என விவாதிக்கத் தொடங்கியுள்ளனர்